திங்கள், ஜூன் 01, 2020

மனம் - மணம்

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொண்டும், பல அசட்டுத்தனங்களை சகித்துக்கொண்டும் அசாதாரணமான ஒரு நெடிய பயணத்தை மிக சாதாரணமாக நம்மோடு கடப்பது என்பது நம் வாழ்க்கை துணை மட்டும்தான். என்னதான் நகமும் சதையுமாக எலியும் பூனையுமாக இருந்தாலும் அத்தனை வருடங்கள் நம் நிழலாக இருந்தவர் இப்போது இல்லை என்ற நிலை வரும்பொழுது ஒரு கணம் மனம் விக்கித்து நின்றுவிடுகிறது. மீதமுள்ள நாட்கள் அசுவாரஸ்யமாகிவிடுகின்றன. அதுவரை ஒவ்வொரு நிமிடமும் நம்மோடிருந்தவர்/ள் இப்பொழுது இல்லை என்பதும் அதனை தொடர்ந்து அன்றாட வேலைகளும் தன் துணையின் நினைவுகளுடனே கழிவதென்பது மிகுந்த வேதனை தரும் ஒரு உணர்வு. மனம் சொல்லாடல்களுக்கு ஏங்கும் கணம் நரகம். நம்மை சுற்றி எத்தனை தலைகள் இருந்தாலும் யாரும் நம்மை உறவு என்ற எண்ணாத அந்த ஒரு நொடி அனாதையாகிவிடுகிறோம். வயோதிகத்தில் ஆணை இழக்கும் பெண்ணை விட அதிகம் தடுமாறுவது என்னவோ மனைவியை இழந்த ஆண் தான். அப்பாதானே, தாத்தா தானே என்று இந்த சமூகம் அவர்களை மிகவும் தைரியமுள்ளவர்களாக ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறாக மனதினுள் முழுவதும் உருக்குலைந்து போய்விடுவார்கள். பித்து பிடித்தது போல். தன் அருகில் வெற்றிடமாக இருக்கும் படுக்கையை கழிக்கும் அந்த முதல் இரவு மிக நீண்டது, கொடியது. 



இது இவ்வாறாக இருக்க இள வயதில் மன முறிவென்பது இப்பொழுதெல்லாம் மிக சாதாரண ஒரு நிகழ்வாகிப்போய்விட்டது. திருமணமான ஒரு வருடம், ஒரு மாதம் ஏன் ஒரு வாரம் கூட தாக்குபிடிக்காத இளைஞர் இளைஞிகளை பார்க்க முடிகிறது. குடி, வரதட்சணை, அடி, உதை போன்ற கேஸ்களை தவிர்த்து ஈகோ என்ற ஒற்றை சொல்லால் விழும் விரிசல்களை மட்டுமே இங்கு அவதானிக்க விரும்பிகிறேன். இவன் முதலில் பேச மாட்டானா, அல்லது நான் ஏன் இறங்கி வர வேண்டும்? என்ற எண்ணங்களால் ஏற்படும் உறவுச்சிக்கல் அதிகம்.. Tolerance என்பதே மறந்து அல்லது மறுத்து போய்விட்டது. குட்ட குட்ட குனியவேண்டிய அவசியம் இல்லையென்றாலும் சுயகௌரவத்தை சீண்டும் வரை அனுசரிப்பது தவறில்லை. குழந்தை உருவாகும் முன் ஏற்படும் முறிவுகளில் பாதிக்கப்டுவது இருவர் மட்டுமே. ஆனால் குழந்தை பிறந்த பின்பு பாதிக்கபடுவதென்பது அந்த இருவரை காட்டிலும் விவரமறியாத மூன்றாம் நபராகிய குழந்தை மட்டுமே. மேலும் அக்குழந்தை வளரும் சூழல் ஒரு சமூக சிக்கலை உருவாக்கி விடுகிறது.   தாய் அல்லது தந்தையை இழந்து வளரும் குழந்தை அனுபவிக்கும் மன வேதனையை விட தாய் அல்லது தந்தையை பிரிந்து வாழும் குழந்தை அதிகமாக அனுபவிக்கிறது.  கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழும் தம்பதியரின் குழந்தை இந்த பாவத்தில் எதில் சேர்த்தி என்பது தெரியவில்லை? பள்ளி ஆண்டு விழா தொடங்கி திருமனமேடையில் அம்மிக்கல் மிதிக்கும் வரை ஏற்படும் ஏக்கங்களுக்கு ஆறுதல் கூற முடியாது.


புறம்பேச்சுகளில், மீனாட்சி ஆட்சி என்பது தான் வெளியே தெரிகிறதே ஒழிய அதில் சொக்கநாதரின் விட்டுக்கொடுத்தலை சமூகம் காணத்தவறி விடுகிறது. போலவே குடித்து கூத்தடிக்கும் வீண்மகன்களின் மனைவிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக அனைத்தையும் சகித்து கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை கண்டுகொண்டு கொண்டாடியது எத்தனை பேர்?


எல்லைகோட்டில் ராணுவப்படையை நிறுத்தி வைப்பதிலிருந்து இரண்டாவது கைகுழந்தையை கொஞ்சும் பொழுது, முதல் குழந்தை தன் தாயை ஏறெடுத்து பார்க்கும் பொறாமை மற்றும் ஏக்கம் கலந்த பார்வை வரை இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமாக  இருப்பதுfeeling unsecured’ உணர்வு. இதே unsecured உணர்வே தன் மகன் தன் கையை விட்டு போயிடுவானோ முதல் எங்கே தன் கணவன் அம்மாகோண்டாக இருந்துவிடுவானோ என்பது வரை மனதின் மூலையில் பெவிகுய்க் போட்டு ஓட்டிக்கொண்டு மனதை ரணபடுத்தும் பலவற்றை சிந்திக்கவும் செயல்படுத்தவும் முடுக்கிவிடுகிறது. மேலும் 20 வருடங்களாக இருந்த பழக்க வழக்கங்களையும் சொந்தங்களையும் ஒருசேர சில மணித்துளிகளில் உதறி விட்டு கணவனுடன் புது குடும்ப வாழ்க்கையை கண நொடியில் ஏற்றுக்கொள்ளும்  மன தைரியத்திற்காகவே இவையனைத்தையும் சமன் செய்தும் போக வேண்டிய தலையாய கடமை ஆணிற்கு இருக்கிறது. மதில் மேல் பூனை போலல்லாது கயிறு மேல் நடக்கும் வித்தை இது. சரிமாவும் சாரிமாவும் பல குடும்பங்களை காத்திருக்கிறது. இந்திய கலாச்சாரம் என்று வெளிநாட்டத்தவர் வியக்கும் விந்தை இதுவே. விரலினூடே இருக்கும் இடத்தை இருகை கோர்க்கும்பொழுது நிரம்புவது போல் துணையின் வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பு இருவருக்கும் இருக்கின்றது. ஒரு இனிய குடும்பம் இனிய தலைமுறையை வளர்த்தெடுக்கிறது. ஒரு இனிய தலைமுறை ஒரு பொறுப்புள்ள சமுதாயமாக உருவாகிறது.


ஒரு நல்ல eco system உருவாக ego system களையப்படவேண்டியுள்ளது.


கருத்துகள் இல்லை: