வசீகர நடிப்பு , பேச்சு என ஸ்டைலில் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தாலும் யானைக்கு சோளப்பொரி கொடுப்பது போல் நடிப்பில் பெரிய அளவில் தீனி கிடைக்காமல் இருப்பது சூப்பர் ஸ்டாரின் துர்பாக்கியம். முள்ளும் மலரும், ஜானி, தில்லுமுல்லு போன்ற சில படங்களை தவிர்த்து நடிப்பில் பரிமளிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கொள்ளலாம். நடிப்பில் தன் பாய்ச்சலைக்காட்டும் அளவுக்கு கதைகளும் களங்களும் அவருக்கு அமையவில்லை. கிளாஸ் என்று கைகட்டி பார்த்ததை விட, மாஸ் என்று கைத்தட்டி ரசிக்கவைத்த படங்கள் தான் அதிகம். போலவே அவர் ஹீரோவாக நடித்து பேர் வாங்கியதைவிட வில்லனாக பேசிய டயலாக் காலம் தாண்டியும் கதக்காளி ஆடிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு எந்திரனில் “வசீஈஈஈஈஈஈ”  என்ற ரெட்சிப் ரஜினி பேசியது, சைண்டிஸ்டாக அண்டர்ப்ளே செய்து பின் 2.0 வாக உயிர்பெற்ற பின் கண்ணாடியில் தன்னை தானே அழகு பார்த்துக்கொள்ளும் அந்த ஒரு காட்சி என  ஒரு சோறு பதம். அவ்வாறான ஒரு நடிகனை பல ஆண்டுகளுக்குப்பிறகு சில காட்சிகளில் மீட்டெடுத்தது கபாலி மற்றும் காலா.
ஆனால் தலைவரின் முழுவீச்சை காணாது ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு ஒரு அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ரசிகர்கள் பார்க்க விரும்பிய ரஜினியை மீட்டெடுத்ததில் பல நாஸ்டால்ஜிக் தருணங்கள் கண்முன்னே வந்து போகின்றன. மாட்டு வண்டியில் சந்திரமுகி, கேட்டை திறந்து உள்ளே செல்லுவதில் அபூர்வராகங்கள், டெம்ப்ரரி வார்டென் போஸ்ட்டிற்காக  இண்டெர்வியூவில் செய்யும் அதகளங்கள், பாம்பு பாம்பு, சின்னி ஜெயந்தின் ஹான், போன்றவை தலைவரின் அக்மார்க் ராஜபாட்டைகள்.  ஹாஸ்டல் பைட் சீனில் சொல்லும்  உள்ளே போ வசனம் அச்சு அசல் பாட்ஷா. நுஞ்சாக் பைட் சீன் பேட்ட மாஸ். இழவு வீட்டில் கேட்டை சாத்தி சிங்காரத்தின் அண்ணனை சுடுவதற்கு முன் ஒரு ஆட்டம் போட்ட வகையில் ரஜினியின் ஆரா திரையரங்கில் அனைவைரையும் குலுங்க வைக்கிறது.

முதல் பாதியில் கலகலக்கவைத்த ரஜினி இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார். நவாசுதின், விஜய் சேதுபதி என எங்கெங்கோ செல்லும் காருடன் திரைக்கதையும் பயணிக்கிறது. சுள்ளான் சுள்ளான் என்று நவாசுதினை கலாய்பது ரஜினியின் அசல் காமெடி ஸ்பெஷல். ரஜினி படம்டா, வந்து நடிங்கடா என்ற ரேஞ்சில் எல்லாரும் தலைகாட்டுகிறார்கள். சிம்ரனை இளமையாக காட்டி, அவருக்கென ஒரு டான்ஸ் சீன் வைக்க வேண்டும் என்று ரசிகர்களின் ஏகோபித்த ஆசைக்கிணங்க  படத்தின் ஓட்டத்தினூடே செல்லும் வகையில் ஒரு டான்ஸ் காட்சி வைத்தது ஸ்கிரிப்ட் ரைட்டராக கார்த்திக் அசரடிக்கிறார். ஆனால் ரஜினிக்கும் சிம்ரனுக்கும் பொருந்தாக்காதல் காட்டியிருப்பது உள்ளங்கையை சொறியவைக்கிறது. த்ரிஷாவின் நிலை இன்னும் மோசம். ரஜினியுடன் நடித்துவிட்டேன் என வரலாற்றில் சொல்லிக்கொள்ளலாம். கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொணர்ந்து ரஜினியை ஒரு குட்டி கதை சொல்லவைத்து அதை ரஜினிக்கும் எடுபட வைத்ததில் மிளிர்கிறது கார்திக்கின் டைரக்ஷன் டிரேட்மார்க். இறுதியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்று மாசான ஒரு ஆட்டம் ஆடி ரசிகர்களை ஆட்டம்  போட வைத்து சுபம் போடுகிறார்கள்.

மொத்தத்தில் பேட்ட முழுவதும் ரஜினியின் சேட்ட.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read