மீண்டும் பாகுபலியை பற்றி எழுதுவதை தவிர்க்க முடியவில்லை. சிறிது பொருத்தருளுக. மூன்றாவது முறை சென்று பார்த்ததில் கவனித்தவை சில இந்த பதிவில்.


முதலில் டைட்டில் சாங். முதன் முதலில் பார்த்த பொழுது மெழுகு சிலை போல் மேடம் டுஸசாடஸ் மியூசியத்தில் இருப்பதை போன்று கிராபிக்ஸ் செய்ததை மட்டுமே கவனித்திருந்தேன். காண்பிக்கும் காட்சிகளுக்கு ஏற்ப அந்த பாடல் வரிகள் அமைந்திருப்பது அந்த டைட்டில் பாடலின் சிறப்பு. 

பாடல் வரிகள் இதோ.

ஒரு யாகம் ஒரு தியாகம் கதை ஒன்றோ   
ஆரம்பம்   
இரும்பென்றே மனதின்பம்   
நெறுப்பென்றே 
அதில் வன்மம்   
   
மரணம் ஒன்று பிறக்கும் அருவம்   
மரணம்ந்தான் குடிக்கும்   
அவவானமோ வாழ்த்தி இடிக்கும்   
வா வா மன்னவா வா வா மன்னவா   
மண்ணெல்லாம் பாடும்   
   
உன் பாதத்தை வெற்றி தேடும்   
பழி தாங்கி உலி வாங்கி படைப்பானோ   
எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும்   
துளியாவும் 
சிவம்  
சிவம்

காட்சிகளுடன் விளக்கிய அல்லது விளங்கிய விதம் கீழே.

ஒரு யாகம் ஒரு தியாகம்ராஜா மாதா சிவகாமி தான் செய்த பாவத்திற்கு தன் உயிரை தியாகம் செய்து மகேந்திர பாகுபலியை ஆற்றில் கையில் ஏந்தி காப்பாற்றும் காட்சி.
  
கதை ஒன்றோ ஆரம்பம்-இங்கு தான் ஷிவு அவந்திகாவை காணவேண்டும் என்ற உந்துதலின் பேரில் நீர்மலை மீதேறி மகிழ்மதியை கண்டடைகிறான்.  
 
இரும்பென்றே மனதின்பம்-தன் மகன் தன்னை மீட்க வருவானென்று இரும்பபை போன்று உறுதியுடன் காத்திருக்கும் தேவசேனை.
   
நெறுப்பென்றே-பல்வாள்தேவனை   எரிப்பதற்கு தேவசேனை சேகரிக்கும் அக்னிகுண்டத்தில் உள்ள சுள்ளிகள்.

அதில் வன்மம்-தன்னை மணமுடிக்க மறுத்ததினால் அவளை உயிருடன் சித்திரவதை செய்யும் வன்மத்துடன் பல்வாள்தேவன் (இப்புவியில் நீ விரும்பவோ,வெறுக்கவோ இருக்கும் ஒரே உயிர் நான் தான் என்று ஒரு வசனம் வரும்)
   
மரணம் ஒன்று பிறக்கும் அருவம் மரணம்ந்தான் குடிக்கும்-பல்வாளின் மகனின் தலையை ஷிவு வெட்டிகொள்ளும் காட்சி     

அவவானமோ வாழ்த்தி இடிக்கும்-அப்பொழுது மழை பொழியும்

வா வா மன்னவா வா வா மன்னவா மண்ணெல்லாம் பாடும் உன் பாதத்தை வெற்றி தேடும் -கட்டப்பா தன் தலையில் பாகுபலியின் காலை வைத்து அவனை அரசன் என்று கூறும் காட்சி. மக்கள் எல்லோரும் தலை வணங்கி மரியாதை செலுத்துவது.   
   
பழி தாங்கி உலி வாங்கி படைப்பானோ-அரசு கெட்டபெயர் எடுக்கக்கூடாது என்பதற்காக பழிச்சொல் வாங்கி கட்டப்பா பாகுபலியை கொள்ளும் காட்சி.    

எதிர்காலம் உதிரத்தில் சினம் ஓடும் துளியாவும்- ஆதலினால் மகேந்திர பாகுபலி பல்வாளை வாதம் செய்யும் போர்.    

சிவம் சிவம்-ஆதியும் அந்தமுமாகிய சிவனின் விளையாட்டு.

பிறகு, Macro detailing என்ற வகையில் சில காட்சிகளில் ராஜமௌலி குழு எடுத்திருக்கும் சிரத்தை.

ராஜமாதா சிவகாமியின் அடிபிறழாமல் இருக்க தேரை இழுத்து வரும்போது பாகுபலி அணிந்திருக்கும் செருப்பு,பின்பு யானை மீது கம்பீரமாக ஏறி நிற்கும்போது இருக்காது. யானையை விநாயகராக பார்க்கும் விதத்தில் அதனை காட்சிபடுத்த  எடுத்துக்கொண்ட கவனம்.

ராஜா மாதா மற்றும் பாகுபலி சிம்மாசனத்தில் ஒரு காலை மடித்துக்கொண்டு  உட்காரும் அழகு.

ராஜமாதா, தேவசேனா, அவந்திக்கா, பிங்கலதேவன், பல்வாள்தேவன், அமரேந்திர மற்றும் மகேந்திர பாகுபலி, குந்தள தேச ராஜா என ஒவ்வொருவருக்கு ஒரு வித திலகம். சூரியன், சந்திரன், சர்ப்பம், பிறை என்று.

பிண்டாரிகளை துவம்சம் செய்துவிட்டு, பின்பு தான் அமரேந்திர பாகுபலி என்று தெரிவித்த பின் குந்தள தேச ராஜா முதல் அவரது படை யாவும் மண்டியிட்டு தலை வணங்கும். அப்போது பந்தங்களுக்குள் மரியாதை எதற்கு நட்பிருந்தால் போதும் என்று பாகுபலி கூறுவான். அப்போது குந்தள  தேச மகராஜாவிடம் சாந்தமாகவும் மறுநொடியே திரும்பி படை வீர்களிடம் மிடுக்காகவும் ஒரு அதிகார்த்தோரணையில் சொல்லும் பாங்கு. Gesture Notification.

பாகு ஆயுதம், பாகு ஆயுதம் என்று கட்டப்பா ஒவ்வொருமுறையும் கேட்கும்பொழுதும் பாகுபலியிடமிருந்து வாளோ கோடரியோ பறந்து வரும். அதை பிடித்து எதிரியை வெட்டுவார். இறுதி காட்சியில் மாமா ஆயுதம் என்று பாகுபலி வீசிய வாளை கொண்டுதான் கட்டப்பா பாகுபலியை கொல்லுவார்.  அவனிடமிருந்து வாங்கிய வாளால் அவனை வெட்டபோகிறோம் என்று ஒரு நொடி அந்த வாளை பார்த்து அழுவார்.

கட்டப்பாவின் நடிப்பிற்கு சாட்சியாக பிடித்து காட்சிகள். முதலில் சுல்தானுடன் போதும் கத்தி சண்டை. பின்பு “நான் நாயல்லவா. மோப்பம் பிடித்தேன்” என்ற typical சத்யராஜ் எள்ளல்.  அமரேந்திர பாகுபலியுடன் குந்தள தேசத்தில் அமர்க்களம் செய்தவை, தவறு செய்துவிட்டாய் சிவகாமி என்று கூறி அதனை தொடர்ந்து வரும் காட்சிகள். அனைத்தும் கொங்கு தேச  நவரசம்.

வேட்டை என்ற காட்சியில் மானோ, புலியோ சிங்கமோ என்று கதையில் திணித்திருக்கலாம். ஆனால் எந்தவொரு பலனும் இல்லாமல் விவசாயத்தை நட்டத்தில் ஆழ்த்தும் பன்றியை வேட்டையாடுவது போல் காட்சிபடுத்தியது விமர்சனத்தை தவிர்த்ததோடு மட்டும் அல்லாது ராஜமௌலி திரைக்கதைக்கு எடுத்துக்கொண்ட அக்கறை தெரிகிறது.

தாலாட்டுக்காக கட்டப்பா தந்தையும் இல்ல, தாயும் இல்ல என்று ஒரு பாடல் பாடுவார். போலவே பாகுபலி தன் தந்தையையும் தாயையும் பிறக்கும்போதே இழந்திருப்பான்.

நாவிரல். பிடித்ததும் மறுமுகம் என்ற காட்சியின் ஆரம்பத்தில் அம்பு எங்கிருந்து வருகிறது என்று தேவசேனை திரும்புவாள். அங்கு பாகுபலி ஒரு தூண் மீது ஏறி துள்ளி அம்பு விடும் காட்சி 1080P Desktop Wallpaper. போலவே பாகுபலி திரும்பி மூன்று அம்புகளை விடுவதும் அது தேவசேனையின் கம்மல் லோலக்கை தட்டி ஆட்டி விட்டு செல்வதும் ராஜமௌலியின் கற்பனைக்கும் ரசனைக்கும் ஒரு சோறு பதம்.

பின்பு முடி சூட்டு விழாவில், கடக சேனை, புரவி, யானை, என்று ஒவ்வொரு சேனையாக ராஜா மரியாதை தருவதும் விருட்டென்று கட்டப்பா கால் தூக்கி வைத்து மரியாதை செலுத்துவதும், பின்பு பாகுபலி விலக, பல்வாள்தேவன் சடாரென்று படியேறுவதும் பாகுபலி தொடர்வதும் என ஒரு நாட்டின் படை அணிவகுப்பையே மிஞ்சும் கற்பனையில் அதகளபடுத்தியிருப்பார். கற்பனைக் கதைக்கே பிரமாதமான பிரமாண்ட காட்சிபடுத்துதல். அதில் கொஞ்சம் physics சேர்த்து Resonance Frequency யில் சிம்மாசனமே ஆடும் வகையில் அற்புதமான காட்சி. Hats off Sir.

ராஜமாதா சவகாமி, உன் தாயின் நாய் வருகிறது, ஒற்றை கையால் தூனை உடைப்பது, “என்றால் என் மகன், என் மகனின் மகன், அவன் மகன்” என்ற வசனம், பாகுபலியின் மரண சாசனத்தை சிவகாமியின் கைய்யால் எழுத வைக்கும் மகா யாகத்தின் ஒரு ச்சிறிய விறகு நீ, பல்லா, இந்த நாயை நம்பலாமா? என்று தான் வந்த எல்லா காட்சிகளிலும் தான் ஒரு நாடகக்கலைஞன் என்று சொல்லாமல் சொல்லியடித்த நாசரை நினைவு கூறாமல் இருக்கமுடியவில்லை.

நீலாம்பரிக்கு பிறகு காலம் காலமாக பேர் சொல்லும் வகையில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம். பாகுபலி கதாபாத்திரத்துக்கு சற்றேனும் குறைவில்லாமல் Female Characters க்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வந்த திரைப்படம் வேறு ஏதும் இருப்பது போல் தெரியவைல்லை.

பிறகு எல்லோரும் சொல்லுவது போல் ராஜாமாதவை பல்வாள்தேவன் கொல்வது சிவகாமி அளித்த அந்த ஆயிரம் அடி சென்று தாக்கும் வில்லினால் அல்ல. அது மற்றுமொரு வில். அவ்வளவே.

எனக்கு பிடித்த பாடல் தர வரிசை.  ஒரே ஓர் ஊரில், ஒரு யாகம், வந்தாய் அய்யா, கண்ணா நீ தூங்கடா,  பல பல பாகுபலி.

கொசுறு செய்தி. பாகுபலி படம் 1500 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததென்றால், பாப்கார்ன் விற்பனை மட்டும் குறைந்தது 1000 கோடி தாண்டியிருக்கும். J


Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read