பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை என்ற செய்தியை அவ்வளவு சுலபமாக கடந்து விட மனம் மறுக்கிறது. அதுவும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஓரிரு நாளாக அந்த அணையின் அருகே உட்கார்ந்திருக்கிறார்,. நீர் நிரம்பிய போது உவகையில் குதித்த அவர் உள்ளம், அந்த நீர் அணையை தாண்டாது தேங்கிய போது, வாடி துவண்டிருக்கிறது. சிறு பூனையை போல் அந்த அணையை அவர் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். நீர் அணையை தாண்டாதா என்று குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். நாமெல்லாம் ஏழைகள். மழை பொய்த்து ஆற்றில் நீர் வராது போனால் உண்ணும் உணவிற்கு வழியில்லை. உன்னை நன்றாக படிக்க வைக்க முடியாது” என்று தனது மகளிடம் வருந்தியிருக்கிறது அவரது மனம்  செய்தி குறிப்பில் அவரது வீட்டை காட்டிய போது, அழுக்கு படிந்த காரை சுவர்கள், எந்த ஒரு ஆடம்பர உபகரணமும் இல்லாது வெறிச் என்றிருக்கிறது. வீட்டில் உள்ள பெண்ணிடம் மஞ்சள் கயிறு மட்டும் கழுத்தில் தொங்க காது மூளியாக இருக்கிறது. . ஊருக்கே உணவிடும் விவசாயி ஏழை என்றால், அவனிடம் வாங்கி உண்ணும் நாம் யார் ? ஒருவேளை பிச்சைக்காரன் என்பதிற்கு அகராதியில் பணக்காரன் என்று ஞாபக படுத்தி வைத்திருக்கிறோமோ? வாங்கும் அளவிற்கு சக்தி இருப்பதனால் மட்டுமே எல்லாம் கிடைத்து விடுவதில்லை என்பதை எல்லோரும் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவனது நிலையை உயர்த்தாது நாம் மட்டும் உயர்ந்து கொண்டிருப்பது பொருளாதார வளர்ச்சி இல்லை. பகல் கொள்ளை. பசித்தவனிடமிருந்து பிடுங்கி தின்னும் வழிப்பறி. தானும் மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியை தன்னை சார்ந்தவனுக்கும் உணர வைப்பதே முழுமையான வாழ்க்கை,. Every Human is a dependant animal என்பதை நாம் நாகரீகம் என்ற பெயரில் மறந்துவிட்டோம். அந்த விவசாயியின் தற்கொலைக்கு தடுப்பணை மட்டுமே காரணமில்லை. மண்ணில் விளையும் உணவை உண்ணும் ஒவ்வொரும் மனிதனிடமும் அந்த பாவக்கணக்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. உண்ணும் உணவும்‌, கசந்து கொண்டே இருக்கிறது. 

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read