சிலருக்கு திரை விலக 60 நாட்கள் எடுத்துக்கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு 60 நாட்களிலேயே  திரை விலகியது அதிர்ச்சியை கொடுக்கலாம். ஆனால் திரை விலகிவிட்டது என்பது தான் உண்மை.

இவர் தான் தலைவர் என்று அறிவிக்கபட்டு பின் அந்த கட்சியையோ அல்லது அந்த கட்சியின் வேட்பாளரையோ நாம் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கிறோம். நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் நமது விருப்பமான கட்சியின் அடையாளமாக இருந்திருக்கக்கூடும். அல்லது நமக்கு பிடித்த வேட்பாளரின் பொருட்டு நாம் அந்த கட்சியை தேர்ந்தெடுப்பதற்கு இடமிருக்கிறது. இரண்டுமே இல்லாத ஒரு இக்கட்டான நிலைக்கு தற்போது தமிழக மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். வெறும் கையறு நிலை.

நகை முரண் யாதெனில், இவை அனைத்துமே நாம் பெரிதும் மதிக்கும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. அல்லது சட்டத்தின் அங்கங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்களால் மிக லாவகமாக கையாளப்படுகின்றன. காலவரிசைக்கிரமமாக நாம் இதை கவனித்தோமேயானால், காய்கள் மிக சரியாக, அதற்குரிய தருணத்தில் சற்றேனும் பிசகாமல் நகர்த்தபட்டிருக்கின்றன என்பதை யூகிக்க முடிகிறது. அவ்வாறு இருப்பின், இதற்கான திட்டமிடல் பல ஆண்டுகளாக நடத்தபட்டிருக்கலாமோ ஆன்ற ஐயமும் தொக்கி நிற்கிறது.

தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட முடிவிலிருந்தே, தேர்ந்தெடுக்கபட்ட அனைவர் கையும் கறைபடிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முந்தைய தேர்தலில் பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்கமுடிந்ததேயானால், அதற்கு காரணம், கட்சியில் பிரபலமான முகம் இருந்தது, மக்களுக்கு அந்த முகம் கனவிலும் பரிச்சயமாகியிருந்தது. ஆனால் இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் முகமோ, மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிரபலமாகியுள்ளது. ஒருத்தர் மட்டுமல்லாது ஒவ்வொருத்தரிடமும் கோபம் மண்டியிருக்கிறது.

வீரனுக்கு போர்வாள் ஆயுதம், எழுத்தாளனுக்கோ கைபிடித்திருக்கும் பேனாவே ஆயுதம். ஆனால் சாமானியபட்ட மக்களின் ஆயுதம் ஓட்டுரிமை மட்டுமே. பாரத்தத்திற்கு மிகப்பெரிய ஜனநாயக நாடென்ற பெருமை உண்டு. அவ்வழியே ஜனநாயகத்தின் பாதையில் தன்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கிருக்கிறது. சகிப்புத்தன்மைக்கு பேர்போன தமிழர்களுக்கு அதைத்தவிர தற்போது வேறு உபாத்தியம் இல்லை. வலுவுள்ள வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மட்டும் காத்திருக்கவில்லை, அலைகடலென திரண்டு ஓட்டளிக்க மக்களும் காத்திருக்கிறார்கள். வாக்களிப்பதின் மூலமாக மட்டுமே உரிமையை மீட்டெடுக்கும் முகாந்திரமிருக்கிறது.

மேய்ப்போனை என்றுமே ஆடுகள் பகைத்ததும் இல்லை, பட்டிதாண்டி ஓடியதுமில்லை. பகைத்துக்கொண்டால் இலை தழைகள் கிடைக்காது. பட்டிதாண்டினால் ஓநாய்கள் வேட்டையாடிவிடும். ஆனால் இலை தழைகளுக்கும் இலவசங்களுக்கும் மேய்ப்போனை பகைக்காமலிருக்கவும், ஓநாய்கள் வேட்டையாடும் வரை கைகள் பிணைந்திருக்கவும் தமிழக மக்கள் ஒன்றும் ஆடுகள் இல்லை.  திமிறி எழும் ஜல்லிகட்டு காளைகள்.

திமிறி எழு இளைஞனே. நாளைய உலகம் உன் கையில் !!!Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read