அவரின் வாழ்க்கை முழுவதுமே மர்மம் விரவிக்கிடந்திருக்கிறது. தன் வாழ்க்கையின் முன்பாதி முழுவதுமே இரு மனிதர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கபட்டிருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒன்று தன் தாய் சந்தியா. அவரின் தூண்டுதல் பேரில் திரையில் நடிக்கத்தொடங்கி கோலோச்சியது தனக்கு என்றுமே விருப்பமில்லாத ஒன்று என்று வருந்தியிருக்கிறார். மற்றொன்று தமிழக அரசியியலில் கர்ம வீரருக்கு நிகரான ஒரு பிம்பத்தை பெற்றிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் தவிர்க்கமுடியாத அரசியல் வாரிசாக உருவெடுத்தது. இதன் காரணமாகவே, தனது வாழ்க்கையின் மறுபாதியை யாருக்கும் இல்லாது தனக்கே தனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையை அந்த பேட்டியில் அடிகோடிட்டிருந்தார்.  ஆனால் அதுவும் பொய்த்துப்போனதை தொண்டர்கள் அறிவார்கள். மூன்று முறை கார்டனை விட்டு விலக்கிவைத்ததும் பின்பு மன்னித்து சேர்த்துக்கொண்டதும், கூடாநட்பு என்று தெரிந்திருந்தும் உறவாடியதும் விடைதெரியா கேள்விகள்.  கலைஞர் அவர்கள், கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று காங்கிரஸை விட்டு விலகியதும் பின்பு சுய ஆதாயத்துக்காக கண்கள் பனித்தன என்று மீண்டும் சேர்ந்த காரணத்தையும் தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள். ஆனால் இந்த கூடா நட்பு ஏன் என்பது இன்று வரை லட்ச்சோப லட்ச தொண்டர்களின் புரியாத புதிர்.

பாபா ராம்தேவின் FMCG பொருட்கள் முழுவதும் பதஞ்சலி என்ற பேரில் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு எல்லா FMCG ஜாம்பவான்களுக்கு ஜன்னி கண்டதோ, அதே marketing  யுக்தி அம்மா சால்ட், அம்மா சிமெண்ட், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று கொணரப்பட்டு அடிமட்ட தொண்டன் வரையில் “அம்மா” வை ஞாபகம் வைத்துக்கொள்ளச்செய்தது தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ்.  தன்னை அம்மா என்று கூப்பிட குழந்தையில்லையே என்று வருத்தம் உங்களுக்கு வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று கோடிக்கணக்கான மக்களை அம்மா என்று அழைக்கவைத்தது அதிரடி சரவெடி. நாற்பதும் நமதே, மக்களுக்காக நான், மக்களுக்காவே நான் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. சரித்திரம்.

அவர் மறைவை இப்பொழுதும் கூட நம்ப முடியவில்லை. காய்ச்சல் என்று அனுமதித்து பின் உயிரற்ற சடலமாகத்தான் அவரை வெளியே கொண்டுவந்தார்கள். படோடப கல்யாணம், நகைகள், காலணிகள், அரசு ஊழியர்கள் கைது, கூடா நட்பு, தலமைச்செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது என்று பல முரண்பட்ட விஷயங்கள் நெருடிக்கொண்டிருந்தாலும் சொந்தபந்தங்களின்றி அந்த 75 நாட்களும் தனக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மரணத்தை தழுவியது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவர் தன்னை சுற்றி கட்டமைத்துக்கொண்ட வேலி அப்படிபட்டது. அந்த வேலி அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளபட்ட ஒன்றா அல்லது அழுத்தத்துடன் மற்றவர்களால் கட்டமைக்கபட்டதா என்பது மற்றுமொரு புதிர்.

மருத்துவமனையில் செப்ட் 22 அனுமத்திதது முதல் டிசம்பர் 5 வரை வெளியிலேயே காத்துகிடந்து பல சேனல்கள் செய்திகளை மட்டும் சொல்லாது ஊகங்களையும் வாசித்தன. அதுவும் டிசம்பர் 5 அன்று, அந்த ECMO வை பிடுங்கி எறியுங்கள், எங்களுக்கு TRP rating , தலைவர்களை அழைத்து நேர்காணல், மற்றும் குழு விவாதம் என்று பலவற்றை செய்யவேண்டியிருக்கிறது என்பது போன்ற நடவடிக்கை மிகுந்த பயத்தை கொடுக்கிறது. அடுத்து அடுத்து என்று ஓடோடி சென்று குழிக்குள் மண்ணை போட்ட மூடிய பின் தான் ஊடகம் தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டது போல் தெரிகிறது. இதுதான் அவர்கள் தொழில் என்றாலும் அதில் கடைபிடிக்கவேண்டிய அறம், நெறிமுறைகள் பிறழ்ந்துவிட்டனவோ என்று அச்சம் தொக்கி நிற்கிறது, கொடுக்கப்பட்ட சிகிச்சை முதல் எம்பாமிங்க் செய்தி மற்றும்  மரணித்த நேரம், ஏன் நாட்கள் கூட, இப்பொழுது வரைக்கும் ரகசியாமாக இருக்கின்றன. பல ஊடகங்களுக்கு அவை தீனியாக செயல்படுகின்றன. இது ஆண் பெண், சாதி மதம் பேதமின்றி பிரபலங்கள் அனுபவிக்கும் சாபம்.

எது எவ்வாறாக இருந்தாலும் பல உண்மைகள் அவருடன் அந்த சந்தனப்பேழையயில் மீளா துயில் கொள்ள சென்றுவிட்டன.
Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read