நேற்றைய நீயா நானாவில்...

தனிக்குடித்தனமா அல்லது கூட்டுக்குடித்தனமா என்ற தலைப்பில், தனிக்குடித்தனத்தில் இன்றைய நவ நாகரீக கன்னிகள் ஒரு புறம் மற்றும் இரு தலைமுறை அனுபவம் உள்ள மாமியார்கள் எதிர்புறத்தில். ஷோவின் ஆரம்பித்திலேயே கோபிநாத் முடுக்கிவிட்ட உங்கள் திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்பு என்ன?’ என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களின் ஆசைகள் தொண்ணூறு சதவீதம் நடைமுறைக்கு அப்பாற்பட்டே இருந்தன.  முழுக்க முழுக்க கனவுத்தொழிற்சாலை என்றழைக்கப்படும் சினிமாவை போன்றே தங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எதிபார்ப்பு திகிலையே தருகிறது. கிராமத்து பின்புலம் சார்ந்த பெண்களாவது பரவாயில்லை, எக்ஸ்போஷர் கம்மியென்று அவர்களை கனவு காணவிடலாம். நகரத்தில் வாழும் பெண்கள் கூட ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்ம்ம்ம்ம் என்ற ஜிங்கில்ஸ்க்கு பிறகு செட்டையே கலைத்துவிட்டு அடுத்த ஷூட்டிங்கிற்கு தயாராகும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை சாத்தியம் என்று எவ்வாறு கனவு காண்கிறார்கள் என்ற விஷயம் புரிபடவில்லை. அதிலும் சில பெண்கள் சில்லுனு ஒரு காதல் மாதிரியான வாழ்க்கை, ஆர்யா போன்ற ஃப்ரெண்ட்லியான ஹஸ்பண்ட், ஏதேனும் ஆர்.ஜே போன்ற செலிப்ரிடியுடனான வாழ்க்கை என்று சொல்ல கேட்டு மயக்கம் வராத குறைதான். காலையில் ஒரு ஹக், ஈவினிங் ஒரு ஹக், ஃப்ரைடே கம்பல்சரி அவுட்டிங்க், ஃபோர்ஹெட்டில் கிஸ், அலுவலகத்துக்கு பிக்கப் மற்றும் டிராப் செய்யும்பொழுது பை டார்லிங்க் என்று சொல்லிக்கொள்ளும் கியூட் ஃபீலிங்க் (மண்டையை பிளக்கும் வெயில் மற்றும் டிராபிக் ஊசலாட்டத்தில்), இவை எல்லாமே நித்தமும் நடக்கவேண்டுமென்று என்று சினிமாவை பார்த்து பார்த்தே ஒரு கோட் புக் எழுதி வைத்துள்ளார்கள்.  குறிக்கோள்  நூறு சதவீதம் இருந்தால்தான் எண்பது சதவீதத்தையாவது எட்டலாம் என்ற வாதம் சரிதான் என்றாலும், தங்களுடைய கனவு வாழ்க்கை எதிர்ப்பார்த்தது போல் நிறைவேறாத பட்சத்தில் நிதர்சனத்தை ஏற்று கொண்டு  அனுசரித்து செல்லும் பக்குவம் பெண்களிடத்தில் ஏன், இருபாலரிடமுமே குறைந்துகொண்டே வருகிறது தற்போது வெட்டவெளிச்சமாகிறது. விவேக் ஒரு படத்தில் சொல்வதை போல, லாங் ஷாட்டில் கைகோர்த்து கடற்கரையில் காதலர்கள் செல்வதுடன் எண்ட் கார்ட் போட்டு படம் முடிகிறது. ஆனால் அதன் பின் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டத்தை இயக்குனர் சொல்ல மறந்துவிட்டார் என்பதே நிஜ வாழ்க்கை. .

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன மாமியார்களிடத்தில் கோபிநாத் கேட்க, வயிறெரிந்து மண் தூற்றி சாபம் விடாத குறைதான். இவர்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகக்கூடாது என்ற விதத்திலேயே பல மாமியார்களின் பதில் இருந்தது. ஒருவாராக தனிக்குடித்தனத்திற்கான எதிர்ப்பு ஏன் என்ற கேள்விக்கு ஒட்டுமொத்த மாமியார்கள் அனைவருமே, தங்கள் பைய்யனை மருமகள் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாள் என்ற காரணத்தையே முன் வைத்தனர். சில மாமியார்கள் எதிர்புறத்தில் அமர்ந்திருந்த இளம் பெண்களின் கோரிக்கைகள் நியாயமாகத்தான் தெரிகிறது என்றதுமே, கோபிநாத், மாமியார்கள் முன்பு போல் இல்லை. இப்போதெல்லாம் இறங்கிவருகின்றனர், விட்டுக்கொடுக்கின்றனர். என்ற கைத்தட்டலை பரிசாக கொடுக்க, மாமியார்களின் ரியாக்க்ஷனை பார்த்தால், அவ்வாறு தெரியாவில்லை. இருங்கடி, எப்படியும் எங்க வீட்டுக்கு மருமகளா வராமையா போய்டுவீங்க. அப்போ பாத்துக்கலாம் என்று புலி பதுங்குவது பாய்வதற்காகவே எனும் ரேஞ்சிலேயே அவர்கள் முக மற்றும் மனோபாவம் இருந்தது.

ஆண்டாண்டு காலமாக மணமாகிய பெண்கள் பிறந்த வீட்டை பிரிந்து, புகுந்த வீட்டுக்கு சென்று, அங்குள்ள புதுப்புது மனிதர்களுடன் பழகி சகித்துக்கொண்டு ஒரு ஆணாதிக்க சமூகத்தின் வாழ்க்கையை கழித்ததற்கான ஒரு பழி வாங்கும் படலமாகவே தனிக்குடித்தனம் என்ற ஆயுதத்தை, பெண்கள் சமூகம் கையில் எடுத்துள்ளதோ என்ற கேள்வி தொக்கி நின்றதை தவிர்க்க முடியவில்லை


எது எப்படியோ, நாளை திருமணமாக காத்திருக்கும் புது மாப்பிள்ளைகளான இன்றைய பேச்சிலர் சிங்கங்கள், இருதலை கொல்லி எறும்பாய் தவிக்க போவதை நினைக்கும் போது சற்றே கண்கள் வேர்க்கிறது. 

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read