தமிழ்நாட்டு அரசியலில் கடந்த இருபது நாட்களுக்கும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நகர்ந்தன. கிஞ்சித்தும் பதவி ஆசை இல்லை என்றவர் முதலமைச்சர் நாற்காலிக்கு தன்னைத்தானே தேர்வு செய்துகொண்டார். தெய்வமகள் சீரியல் பிரைம் டைமில் முக்கால் மணிநேரம் ஊடகங்கள் வருவதற்கு அவகாசம் அளிப்பதற்காக தியானம் மேற்கொண்டு உலக அளவில் ஒரு மணி நேரத்திலேயே புனிதர் ஆகிக்கொண்டார் இன்னொருவர் . தொன்னூறு சதவீதத்தை தன்னுள்ளே புதைத்துக்கொண்டேன் என்று இடைசொருகலாக ஒரு ட்விஸ்ட் வேறு. இங்கு பத்து பதினொன்று அங்கு நூற்றி இருபத்தினான்கு என்று தமிழன் கணிதத்தை ஒவ்வொரு நாளும்  தூசு தட்டிக்கொண்டான். நடுவில் விளம்பர இடைவேளை போல் காம்பிளான் பாப்பா வேறு. ஒரு நாளைக்கு ஒரு முதல்வர் கோரிக்கை என்று ஆதரவு கடிதம் நீள, மும்பைக்கு ஆளுநர் அப்ஸ்காண்ட்.  சட்டசபையில் ஒருமுடிவுடனேயே உள்ளே சென்று சபாநாயகர் வரை அதகளபடுத்திய திமுக, என்று வாக்கெடுப்பு முடியும் வரை அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று நகம் கடித்து இருக்கையின் நுனியிலேயே உட்கார வைத்துக்கொண்டார்கள். ஸ்டாலினை பாராட்டியே ஆகவேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தில் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக சட்டசபையில் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸை அவ்வளவு எளிதாக மறந்து விடத்தான் முடியுமா?. மீம் கிரியேட்டர்களுக்கு சற்றும் பயப்படாமல் கிழிந்த சட்டையுடன் வண்டியில் இருந்து இறங்கி போஸ் அளித்த வகையில் சிங்கம் 3 சூர்யாவுக்கே டஃப் கொடுத்தவர். முயன்ற வரையில் முயற்சி செய்தவர். சட்டசபையில் ஜனநாயகம் கொல்லப்பட்டது என்று சொன்னவர்களெல்லாம் கூவத்தூர் கூத்து எந்த வகையில் சேர்த்தி என்பதையும் தெளிவுபடுத்த விழைய வேண்டும்.

ஆட்சி கலைப்பு என்ற அஸ்திரத்தை பலர் கையில் எடுத்து போராடினாலும், ஆளுநர் அசைந்து கொடுக்காதது வியப்பளிக்கிறது. சொல்லப்போனால் ஸ்டாம்ப் பேட் போன்ற பதவி என்று நினைத்தவர்களுக்கெல்லாம் ஒன்றரை டன் வெய்ட்டுடா என்று சொல்லாமல் சொல்லியடித்தார் ராவ். வாவ். முன்னாள் முதல்வரின் மறைவு தொடர்பாக விசாரணைகமிஷன் என்று அறிவித்ததெல்லாம் உடான்ஸ் வேலையாகவே தெரிகிறது. அப்பல்லோ அவ்வளவு எளிதாக தங்களது ரெபுடெஷனை இழக்கத்துணியாது. எய்ம்ஸ் மருத்துவர்களும் சம்பந்தபட்டிருப்பதால் மத்திய அரசு பதில் சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்துவிடாது என்றே தோன்றுகிறது. நினைவு இல்லம் சாத்தியப்படலாம். அதன் மூலம் கொஞ்சம் வாக்கு வங்கியை தேற்ற ஒபிஎஸ் முனையலாம். என்னதான் மதுக்கடை மூடல் விவசாயக்கடன் நிவாரணம் என்று அறிக்கைகள் வெளியிட்டாலும், இன்னும் சில நாட்களில் மாஃபியாக்களின் அராஜகம் தொடங்கிவிடும். ஜல்லிக்கட்டை போன்றதொரு இன்னொரு தன்னெழுச்சி போராட்டத்திற்கு கடுகளவும் வாய்ப்பில்லை. அப்படியே தொடங்கினாலும் அவை இரும்புக்கரம்  கொண்டு ஒடுக்கப்படும்.

திராவிடம் அல்லாத ஒரு மாற்று கட்சி தமிழகத்தை ஆளுவதென்பது இலவு காத்த கிளி கதை போல. மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறார்கள். தவிர உரமிட்டு நீர்பாய்ச்சவும் தவறவில்லை. ஆதலால், காங்கிரஸ்,பி.ஜே.பி போன்றவை தமிழகத்தை தவிர்த்தல் நலம். புதியதோர் இளைஞர்கள் கட்சி என்பதெல்லாம் ஏட்டுசுரைக்காய் மட்டுமே. மீறி கறிக்கு உதவினாலும் அவற்றை பதமாக சமைக்க அனுமதியாது தீயத்து விடுவார்கள்,இந்த மலை முழுங்கி மஹாதேவேன்கள். சகிப்புத்தன்மையை பெரிதாக  வளர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை இந்த நான்கு வருடங்களுக்கு. புத்தர் சொல்லியது போல நடப்பவற்றிற்கெல்லாம் சாட்சியாய் இருத்தல் மட்டுமே சாத்தியம். Be a witness.

எம்.ஜி‌.ஆரின் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியின் மீதுள்ள வெறுப்பினால் மட்டுமே ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது. 2ஜி என்ற சொல்லுக்காகவே திமுக கடந்த இரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. இம்முறை மக்கள் பெருந்திரளாக வாக்கள்ளிக்கப்போவது திமுக என்ற யானைக்கே. ஆனால் அது அதன் பேரில் உள்ள விருபத்தினால் அல்ல. அண்ணா திராவிட மன்னார்குடி கழகத்தின் மேலுள்ள வெறுப்பினால் மட்டுமே ஸ்டாலின் மகுடம் சூட்டிக்கொள்ளபோகிறார். மாற்றான் மேல் உள்ள வெறுப்பால் சம்பாதிக்கப்போகின்ற மகுடத்தை நாகரீக அரசியல் மூலமாக மக்களின் விருப்பத்தால் தக்கவைத்துக்கொள்ள முனைந்து செயல்பட அவரால் முடியும் என்று நமப்த்தோன்றுகிறது. பத்திரிக்கை சந்திப்பு, பேட்டி, முகநூல் என்று எதிலுமே டிப்ளோமெட்டிக்காக செயல்படும் தளபதிக்கே இந்த முறை பிரகாசமான வாய்ப்பு.


இலை உதிர்ந்து சூரியன் உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read