அது P.E.T பீரியட். எல்லாருமே சட்டையை கழட்டி ஸ்கூல் பேக்கில் வைத்துவிட்டு பனியனோடு மைதானத்திற்கு வரிசையாக நடக்க ஆரம்பிப்போம். பனியனில் எங்கள் John’s ஸ்கூலின் லோகோ, மோட்டோ என எல்லாம் சிகப்பு நிறத்தில் அச்சடிக்கபட்டிருக்கும். P.E.T மாஸ்டர் ரூமில் இருந்து எறிபந்து, வாலிபால், ஃபுட்பால், ரிங் என கிடைத்ததையெல்லாம் எடுத்து கொண்டு விளையாட போவோம். இல்லை போவார்கள். விளையாடுவதில் அதிகம் நாட்டமில்லாத்ததால் நானும் பாலா மற்றும் பிரிஜீத் மூன்று பேர் மட்டும் காலாற மைதானத்தை நடக்க ஆரம்பித்துவிடுவோம். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் நடந்து மைதானத்திற்கு வெளியே இருக்கும் ஒரு பெட்டிக்கடையில் அந்த வாரம் முழுவதும் சேர்த்து வைத்த இரண்டு ரூபாயை வைத்து கொண்டு அப்பளப்பூ, இலந்தை பழம், கொடிக்காபுள்ளி, மிட்டாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு பங்குபோட்டு சாப்பிடுவோம். மீண்டும் காலாற நடந்து வந்தோமேயானால் அடுத்த பீரியட் தொடங்க சரியாக இருக்கும். இண்டெர்வெல்லில் டேவிடுடன் சேர்ந்து துரத்தி துரத்தி ஓணான் அடித்தது ஞாபகமிருக்கிறது. ஒரே வீச்சில் ரெண்டு துண்டாக காலி பண்ணிவிடுவான்.  ஸ்கூல் சர்சில் (chapel) மேத்தியு வுடன் சேர்ந்து மண்டிபோட்டு சிலுவையிடம் தேர்வுக்காக பிரார்தித்தது, ராகுலன், சோமா சீதா என்று மதிய நேரம் துண்டு விரித்து வேப்பமரத்தின் அடியில் டிபன்பாக்சை பிரித்து ஆரமர அளவளாவி உண்டது, முகமது அலியுடன் சேர்ந்து டெல்லி ஸ்கூல் டூரில் லூட்டியடித்தது என அவ்வப்போது இதுபோன்று பல நினைவுகள் மனதின் அடியாழத்தில் இருந்து சுழன்று வெளி வருகின்றன. இதையும் தாண்டி பல நண்பர்கள். ஒவ்வொன்றும் cherish able memories. சுகந்தம். சிந்தையில் தூளி கட்டி ஆடுகின்றன. கால இயந்திரத்தில் ஒருமுறை சென்று பார்த்து விடமுடியாதா என்பது போன்ற அள்ளி விழுங்கிக்கொள்ளும் ஞாபகங்கள். 

பள்ளி முடிந்து கல்லூரி சென்று பின்பு பாதைகள் மாறி பயணங்கள் மாறினாலும் நம் வருடக்கணக்கில் தொடர்புகொள்ளாமல் இருந்து விட்டு, பிரிதொரு நாள் நண்பனை அழைத்து பேசும்போது நேற்று இரவு தான் கடைசியாக பேசியது போன்று பேச்சு தொடர்வதற்கு நாமும் நண்பனும் மட்டும் அல்ல நட்பும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுபோன்று விரலிலிருக்கும் எண்ணிக்கைக்கு நிகராகவாவது நண்பர்களை சம்பாதிதிருக்கிறேனா என்று அறிகிலேன். பள்ளி, கல்லூரி போன்ற நட்புகள் பணியிடத்தில் அமைவதில்லை. போட்டி பொறாமை பணிச்சுமை குடும்பம் குழந்தை என்று பல காரணங்கள் இருந்தாலும் ஒருவகையான் “in secured feeling” முக்கிய காரணியாகிவிடுகிறது. நமது வட்டத்தை சுருக்கிக்கொண்டு விடுகிறோம்.   Lifetime, evergreen அல்லது long-lasting பிரெண்ட்ஷிப் என்பது பணியிடத்தில் நடைமுறை சாத்தியமாற்றதாகிவிடுகிறது. அத்திபூத்தாற்  போல் அமைந்தாலும் அலுவலகம் குடும்பம் பிற உறவுகள் என்று சார்பு நிலையில் அந்த நட்பு வட்டத்திற்கு நம்மை adopt செய்துகொள்கிறோம்.பின் வினை தெரியாமல் பள்ளி கல்லூரியில் நண்பர்களிடம் பேசிய பேச்சுக்கள் இங்கே பெட்டிக்குள் முடக்கி வைக்கபடுகின்றன. வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டிதிருக்கிறது. “The countless words are getting counted now”. சுதந்திரமற்ற வார்த்தைகளில் கைதியாகி பல நேரங்களில் மௌனமாகிவிடுகிறோம். பழைய நண்பர்களின் தேடல் ஆரம்பமாகிறது. அதே கணத்திற்காக மனம் ஏங்குகிறது. கவலை மறந்து மனதை லேசாக்கும் பொக்கிஷமான படிமங்கள் அவை. Live Moments. 

எங்கோ படித்தது போல் வாழ்க்கை என்பது இலக்கு அல்ல. அது ஒரு பயணம்,. நம்மோடு சேர்ந்து பயணம் செய்து நமது பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி கொண்டிருப்பது நமது நண்பர்கள் தான்.  சிலர் அந்த பயணத்தில் இறங்கி கொள்ளாலாம். புதிதாக சேர்ந்து கொள்ளலாம். இறங்கிக்கொண்டது நண்பர்கள் மட்டுமே. ஆனல் அவர்களுக்கான என்னுடைய நட்பு என்னுடனேயே பயணித்துக்கொண்டிருக்கிறது. அறுபது எழுபது வயது தாத்தாக்கள் “வாடா போடா” என்று பேசிக்கொள்வதை பார்த்து பொறாமைபட்டிருக்கிறேன். முடிவற்ற உரையாடல்கள், பதில் தேவையற்ற கேள்விகள் என்று ஒரு தலைமுறைக்கான நட்பு அனிச்சையாக கண்முன்னே நிழலாடுகிறது. பால்யத்தில் இருந்து நட்பை இறுக்கப்பற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். பிழைப்பு தேடி வெளியிடம் செல்லும் நாம் அந்த பால்யகால நட்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.  தேடித்தேடி ஓய்ந்து இறுதியில் சோர்வாகி அகத்தனிமையுடன் உட்காரும்பொழுது மீதமிருக்கும் பயணத்தை கை பிடித்து இனிமையாக கூட்டி சென்று நம்மை மீட்டெடுப்பது அந்த நட்பு என்னும் ஆதார உணர்ச்சியே.. 

இன்றைய வாழ்க்கைச்சூழலில் அறுபதை தாண்டுவேணா என்பது முகத்தில் உறைந்திருக்கும் கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை காலவெள்ளத்தில் மிதந்து நான் கரை சேருவேனேயானால், எனக்காக காத்துக்கொண்டிருக்கும் அந்த நான்கு நண்பர்களை தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். 

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read