சிட்டியிலிருந்து ஆறேழு கிலோமீட்டர் தொலைவில் சில மாதங்களாக ஃபேக்டரி ஷெட்டை போன்று மஞ்சள் வண்ணத்தில் அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து கொண்டிருந்தார்கள். வீட்டிற்கு முன்நிற்கும் கிரில் கதவோ அல்லது கோயில் வாசலில் இருக்கும் ரேழி போன்ற அமைப்போ அல்லது காண்டாமணி போன்ற ஏதோ ஒரு சமாச்சாரத்தை வைத்து வெல்ட் அடிக்கும் பட்டறையாக இருக்கலாம் என்று சந்தேகித்த பொழுது திறந்தேவிட்டார்கள். ரிலையன்ஸ் ஷாப்பிங் மால். பூரண மஞ்சள் வண்ணம்.

ஓரளவு விசாலமான கார் பார்க்கிங் மற்றும் கவர்ந்திழுக்கும் வாயில் தோரண விளக்குகள் சகிதமாக ஒருவாரம் களைகட்டியிருந்தது. ஒரு புனித புதனில் விசிட் அடித்தோம். வாயிலில் குறைந்தது ஐநூறு டிராலி நிறுத்தப்பட்டிருந்தது. கூடையை மட்டுமே தூக்கிக்கொண்டு சின்ன சின்ன ஷாப்பிங் மாலில் முட்டு சந்து  போல உலா வந்த குடும்பங்களுக்கு, இது குட்டீஸோடு குதூகலமாய் ஷாப்பிங் செய்வதற்கான புது அனுபவம். நுழையும் பொழுதே குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு பில் என்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை இனாம் போன்ற பஞ்ச் டிஞ்ச்களோடு நோட்டீஸ் பேனர்கள் வரேவேற்றன.. டிவி, பாத்திரங்கள், கார்பெட்கள், பல்புகள், சோப்பு, மசாலா, காய்கனிகள், அய்ஸ்க்ரீம் என்று வகை தொகையில்லாமல் அடுக்கியிருந்தார்கள். நம்மவர்களும் சளைத்தவர்களில்லை. ஷெல்ஃபில் குனிந்து பார்த்து அடியில் தோண்டித்துருவி ஆஃபர் அதிகமாக உள்ள பொருட்களாக சல்லடை போட்டு கரடி கூட உட்காரும் டிராலியில் பத்து ரூபாய் சாக்கோஸ் எடுத்துபோட்டுவிட்டு கிங்பிஷர் ஏர்லைன்சில் துபாய் செல்வதற்கு போர்டிங்க் போவது போல் உற்சாகமாக நடை பயின்றுகொண்டிருந்தனர்.

ஏ.சி. இன்னும் போடவில்லை. பனிவிழும் மலர்வனம் அல்லது உயிரே  போன்ற பாட்டுகளோ இன்ஸ்ட்ரூமென்ட் மியூசிக் வகைகளோ ஒலிக்கவில்லை. இதயம் நல்லெண்ணை எங்கே? என்ற கேட்ட பெண்மணியிடம், ஸ்டோர் அசிஸ்டண்ட் ஒருவர் பருத்திவீரன் சித்தப்பு குரலில், அங்க மேல இருக்குல்ல என்று மீசை முறுக்கிக்கொண்டிருந்தார். இவை முழுதும் சரிசெய்ய இன்னும் சில வாரங்களாகலாம்.

நூற்றி பத்து ரூபாய் என்றால் கூட அசாதாரணமாக கார்ட் தேய்க்கும் மால்கள் வரிசையில், இங்கு கார்ட் தேய்க்கும் மெஷின்கள் தேமே என்று வாய் மூடி உட்கார்ந்திருந்தன. கௌண்டரில் மங்கள் அண்ட் மங்கள் ஜூவல்லரியில் இனமாக கொடுக்கும் சிறு மணிபர்ஸில் இருந்து எவ்வளுப்பா?, நானூத்தி முப்பெத்தெழு ரூபா அம்பது காசா?’ என்று ஒரு பெண்மணி சில்லறை தேடிக்கொண்டிருந்தார். லெகிங்க்ஸ் மற்றும் ஒரு சைஸ் கம்மியான குர்தி போட்டு பிதுங்கிக்கொண்டு, மாஸ்டரா? விசாவா?’ என்று பெண்கள் கேட்பதற்கு ஓரிரு வருடங்கள் பிடிக்கலாம்.


எது எப்படியோ? பாருங்க சார். ரிலையன்ஸ் மால் வந்துருச்சு. நாளைக்கு ஏர்போர்ட் வரும்னு சொல்றாங்க  விலையெல்லாம் ஏறிப்போச்சு என்று ஸ்குயர்ஃபீட்டில் நூறு இருநூறு ஏற்ற காத்திருக்கும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொண்டாட்டம் தான். 

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read