கடந்த வாரத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள். இவை இரண்டும் இன்னும் மனிதம் தேய்ந்துவிடவில்லை என்று மிகைப்படுத்துவதற்காகவோ அல்லது கடவுள் இருக்கான் கொமாரு என்று சொல்வதற்காகவோ எழுதப்பட்டவை அல்ல. சொம்மா ஒரு பகிர்தல். அவ்வளவே.

முதல் சம்பவம்.

வண்டி ஒட்டப்பழகிய இரண்டாவது வாரமே ஒழுங்காக ரோட்டை பார்க்காது இடப்புறமாக பார்த்துக்கொண்டே வலப்புறமாக ஸ்டியரிங்கை ஒடித்ததில் சாலை நடுவில் டிவைடர் என்று சொல்லப்படும் கற்களில்  (ஒரு ரெண்டடி உசரம்) வண்டி ஏறி, மூளையிலிருந்து (இருக்கா??) அனுப்பப்ட்ட சமிக்னைகளை மெதுவாக உள்வாங்கி கால்கள் பிரேக் போட்ட சமயத்தில், வண்டியின் இரண்டு டயரும் காற்றின் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. கதவைத்திறந்து இறங்கி பார்த்தபொழுது கருப்பாக ஏதோ ஒரு வஸ்து (ஆயிலா??) இஞ்ஜினு\க்கடியிலிருந்து பிசிறிக்கொண்டிருந்தது. (கொஞ்ச நேரத்தில் பெய்ய ஆரம்பித்தது). அதற்குள்ளாகவே சாலை ஓரங்களில் கூட்டம் கூடி (பத்தில் ஐந்து பேர் என்னாச்சு? டைப்) வண்டிக்கு அருகில் வந்து நின்றனர். ஒருவர் டிக்கியை திறந்து ஜாக்கி எடுங்க என்றார். ஏற்கனவே காதல் பரத் போல ஙே என்று பேந்தபேந்த விழித்து கொண்டிருந்த நான், டிக்கியை திறந்து தடவி ஏதோ ஒன்றை எடுத்தேன். அலேக்காக ஒரு ஐந்து பேர் அந்த ஒரு டன் வண்டியை முட்டு குடுத்து தூக்க அடியில் பூந்து கல்லை நகட்டி டயரை தரையோடு ஒன்றா வைத்தபோது உஸ் என்று காற்றை கக்கியது. ஸிடெப்னி இருக்கா சார்? என்றார் ஒருவர். இன்னொருவர் டிக்கியை திறந்து ஸிடெப்னியை எடுத்துக்கொடுக்க மற்றொருவர் ஸ்பேனர் கொண்டு டயரை கழட்ட ஆரம்பித்திருந்தார். வண்டி ஒட்டிட்டு வந்தது யாருங்க?’ என்று இடையில் ஒருவர் இன்டர்வியூ எடுக்க நாந்தேன் என்று சப்ஜார்டாக ஆஜராகினேன். எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாத அளவுக்கு கால் டாக்சி டிரைவர்கள், கம்பெனி டிரைவர்கள், கம்பெனி ஊழியர்கள் என்று பலரும் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். நான் அதே ஙே’. படபடவென்று ஸ்டெப்னி மாட்டி பின் பார்த்தால் அதுவும் காயமே இது பொய்யடா வெறும் காற்றிழந்த பய்யடா என்று இளித்து கொண்டிருந்தது.

சார், அது இன்ஜின் ஆயில் போல தெரிது. நீங்க வேண்டி ஓட்ட வேணாம், ஓரம் கட்டிட்டு மெக்கானிக் கூப்டு பாருங்க என்றார் ஒருவர்.

கொடுங்க சார். நீங்க பதட்டமா இருக்கீங்க. நானே பார்க் பண்ணிட்றேன். இன்னொருவர்.
பேந்த பேந்த விழித்து கொண்டிருந்த போதே நன்றியை கூட எதிர்பாராது கடகடவென்று கலைந்து சென்று விட்டது கூட்டம்.

அடுத்த நாள் வண்டி எடுக்க வந்த மெக்கானிக், சார் நீங்க பூஜை போட்டிங்க்ளா? என்றார்.
இல்ல சார். பழைய வண்டிக்கு போய் எதுக்குனு?....’

என்ன சார் நீங்க. பழைய வண்டி வாங்கிருக்கீங்க. அதுவும் பாய்டேந்து. நம்ம பாய் வண்டிய ஒரு இந்து வண்டியா மாத்தணும்னா எப்படி? ஒரு பூஜை போட்டே ஆகணும் என்றார். 
லாஜிக்காக கூறினாரோ, அனுபவத்தில் கூறினாரோ அல்லது வெள்ளேந்தியாக சொன்னாரோ தெரியவில்லை. எது எப்படியோ வண்டி திரும்பி வரும் பொழுது நான்கு எழுமிச்சம் பழம் நசுக்கப்படும்.

இரண்டாவது சம்பவம்

பேங்கில் சேஃப்டி லாக்கர் திறக்கும் பொருட்டு நான்கைந்து முறை அலைந்து அன்று கீ வாங்க வந்துருங்க சார் என்று நான் எதிர்பார்த்திருந்த வார்த்தைகளை முத்து போல உதிர்த்தார் மேனேஜர். பேங்க் சென்று சில பல நிமிடங்கள் விட்டத்தை பார்த்து, தண்ணீர் குடித்து, கைக்குட்டையில் விசிறி, ஒருவழியாக உள்ளே கூப்பிட்டு இந்தாங்க சார் என்று சாவியை கொடுக்கும் பொழுது தான், ஆஆ...போனு...காணோம். பேங்கில் சல்லடை போட்டு தேடி, வண்டி பார்க் செய்த இடத்தில் தேடி உதட்டை பிதுக்கிய பிறகு, வந்த வழியாகவே (அதே ஙே லுக்கில்) தேடிபார்த்து இல்லை. யாரோ ஆட்டையை போட்டுவிட்டார்கள். மலேசியா விமானம் மிஸ்டரி போல கால் செய்து பார்த்ததில் இன்னும்  ரிங்கிக்கொண்டிருந்தது. கம்பெனி செக்யூரிட்டியிடம் சொல்லி, ஜிமெயில், FB, பேங்க் பாஸ்வார்டை மாற்றி வீட்டில் புயலாய் பூந்து IMEI நம்பரை தேடி போலீஸ் ஸ்டேஷன் அடைந்தபோது கால் செய்து பார்த்தேன். Switch Off. ஓகே. தூக்கிட்டான். போலீஸ் ஸ்டேஷனில் டிபிக்கள் தமிழ் சினிமா சீன் போல இருந்தது.

சார், கம்ப்ளேண்ட் கொடுக்கணும்.

என்ன விஷயம்?’

மொபைல் தொலைஞ்சு போச்சு.

ஏதோ எழுதிக்கொண்டிருந்தவர் (ஏட்டய்யா) இப்போது தலையை தூக்கி பார்த்து, அதுக்கு?’  என்று முறைத்தார்.

சார், 18000 ரூவா, மொபைலு. இந்த இடத்துல தொலைஞ்சுபோச்சு.

அதுக்கு நீங்க் அந்த ஸ்டேஷன் போகணும் சார்.

ஜஸ்ட் (அங்க தான் பிரச்சினை) ஒரு கம்ப்ளைண்ட்.

ஏட்டய்யா, மீசையை முறுக்கி தொப்பையை இறுக்கி, இங்க பாருயா. இவரு சும்மா ஒரு கம்ப்ளைண்ட் கொடுப்பாராம். நம்ம அத கிளோஸ் பண்ண நாக்கு தள்ளனுமாம். நல்லலாருக்குங்க. நீங்க பேசறது.

எங்கள் கம்பெனி இன்ஸ்பெக்டரின் பெயரை சொன்னவுடன்

, நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாமே சார், என்று சிரித்துக்கொண்டே உக்காரவைத்து, எங்கே, எப்படி என்ற விவரங்களை கேட்டுக்கொண்டு ஒரு ஒயிட் பேப்பரில் ஹிஸ்டரி ஜாகிரபி எல்லாம் எழுதிக்கொண்டனர். ஒருவழியாக சலாம் அடித்து கிளம்பி வீட்டுக்கு வந்த பொழுது அப்பா நம்பருக்கு கால் வந்தது.

சார், ஒரு பொன் பேங்க் வாசல்ல கடந்துச்சு. அது ஆபரேட் பண்ணவே தெரில. டிஸ்ப்லே வேற கீறிடுச்சு. சிம்ம கழட்டி நம்பர் தேடி என் மொபைல்லெந்து கூப்டுறேன்.

கும்பிடப்போன தெய்வம்....அட குறுக்கே குறுக்கே ...

குலதெய்வத்திற்கு நன்றி சொல்லி மொபைலை கண்டெடுத்தவருக்கும் நன்றி சொல்லி, பேரை கேட்டு குறித்து வைத்து கொண்டேன்.

சார், சைட் ஸ்டேண்ட் என்று கத்தும் ஒருவரிலிருந்தே ஆரம்பிக்கிறது. நம்முடைய அன்றாட அலுவல்களும் நடவடிக்கைகளும் பல யாரோ மற்றும் எவரோக்களால் இடைவெளியில்லாது செம்மைய்யாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு உணர்த்திய சம்பவங்களே இவை.

அவ்ளோதான்

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read