தமிழ்நாட்டு அரசியலில் கடந்த இருபது நாட்களுக்கும் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் நகர்ந்தன. கிஞ்சித்தும் பதவி ஆசை இல்லை என்றவர் முதலமைச்சர் நாற்காலிக்கு தன்னைத்தானே தேர்வு செய்துகொண்டார். தெய்வமகள் சீரியல் பிரைம் டைமில் முக்கால் மணிநேரம் ஊடகங்கள் வருவதற்கு அவகாசம் அளிப்பதற்காக தியானம் மேற்கொண்டு உலக அளவில் ஒரு மணி நேரத்திலேயே புனிதர் ஆகிக்கொண்டார் இன்னொருவர் . தொன்னூறு சதவீதத்தை தன்னுள்ளே புதைத்துக்கொண்டேன் என்று இடைசொருகலாக ஒரு ட்விஸ்ட் வேறு. இங்கு பத்து பதினொன்று அங்கு நூற்றி இருபத்தினான்கு என்று தமிழன் கணிதத்தை ஒவ்வொரு நாளும்  தூசு தட்டிக்கொண்டான். நடுவில் விளம்பர இடைவேளை போல் காம்பிளான் பாப்பா வேறு. ஒரு நாளைக்கு ஒரு முதல்வர் கோரிக்கை என்று ஆதரவு கடிதம் நீள, மும்பைக்கு ஆளுநர் அப்ஸ்காண்ட்.  சட்டசபையில் ஒருமுடிவுடனேயே உள்ளே சென்று சபாநாயகர் வரை அதகளபடுத்திய திமுக, என்று வாக்கெடுப்பு முடியும் வரை அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று நகம் கடித்து இருக்கையின் நுனியிலேயே உட்கார வைத்துக்கொண்டார்கள். ஸ்டாலினை பாராட்டியே ஆகவேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தில் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக சட்டசபையில் அடித்த ஹெலிகாப்டர் சிக்ஸை அவ்வளவு எளிதாக மறந்து விடத்தான் முடியுமா?. மீம் கிரியேட்டர்களுக்கு சற்றும் பயப்படாமல் கிழிந்த சட்டையுடன் வண்டியில் இருந்து இறங்கி போஸ் அளித்த வகையில் சிங்கம் 3 சூர்யாவுக்கே டஃப் கொடுத்தவர். முயன்ற வரையில் முயற்சி செய்தவர். சட்டசபையில் ஜனநாயகம் கொல்லப்பட்டது என்று சொன்னவர்களெல்லாம் கூவத்தூர் கூத்து எந்த வகையில் சேர்த்தி என்பதையும் தெளிவுபடுத்த விழைய வேண்டும்.

ஆட்சி கலைப்பு என்ற அஸ்திரத்தை பலர் கையில் எடுத்து போராடினாலும், ஆளுநர் அசைந்து கொடுக்காதது வியப்பளிக்கிறது. சொல்லப்போனால் ஸ்டாம்ப் பேட் போன்ற பதவி என்று நினைத்தவர்களுக்கெல்லாம் ஒன்றரை டன் வெய்ட்டுடா என்று சொல்லாமல் சொல்லியடித்தார் ராவ். வாவ். முன்னாள் முதல்வரின் மறைவு தொடர்பாக விசாரணைகமிஷன் என்று அறிவித்ததெல்லாம் உடான்ஸ் வேலையாகவே தெரிகிறது. அப்பல்லோ அவ்வளவு எளிதாக தங்களது ரெபுடெஷனை இழக்கத்துணியாது. எய்ம்ஸ் மருத்துவர்களும் சம்பந்தபட்டிருப்பதால் மத்திய அரசு பதில் சொல்லும் நிலைக்கு தரம் தாழ்ந்துவிடாது என்றே தோன்றுகிறது. நினைவு இல்லம் சாத்தியப்படலாம். அதன் மூலம் கொஞ்சம் வாக்கு வங்கியை தேற்ற ஒபிஎஸ் முனையலாம். என்னதான் மதுக்கடை மூடல் விவசாயக்கடன் நிவாரணம் என்று அறிக்கைகள் வெளியிட்டாலும், இன்னும் சில நாட்களில் மாஃபியாக்களின் அராஜகம் தொடங்கிவிடும். ஜல்லிக்கட்டை போன்றதொரு இன்னொரு தன்னெழுச்சி போராட்டத்திற்கு கடுகளவும் வாய்ப்பில்லை. அப்படியே தொடங்கினாலும் அவை இரும்புக்கரம்  கொண்டு ஒடுக்கப்படும்.

திராவிடம் அல்லாத ஒரு மாற்று கட்சி தமிழகத்தை ஆளுவதென்பது இலவு காத்த கிளி கதை போல. மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறார்கள். தவிர உரமிட்டு நீர்பாய்ச்சவும் தவறவில்லை. ஆதலால், காங்கிரஸ்,பி.ஜே.பி போன்றவை தமிழகத்தை தவிர்த்தல் நலம். புதியதோர் இளைஞர்கள் கட்சி என்பதெல்லாம் ஏட்டுசுரைக்காய் மட்டுமே. மீறி கறிக்கு உதவினாலும் அவற்றை பதமாக சமைக்க அனுமதியாது தீயத்து விடுவார்கள்,இந்த மலை முழுங்கி மஹாதேவேன்கள். சகிப்புத்தன்மையை பெரிதாக  வளர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லை இந்த நான்கு வருடங்களுக்கு. புத்தர் சொல்லியது போல நடப்பவற்றிற்கெல்லாம் சாட்சியாய் இருத்தல் மட்டுமே சாத்தியம். Be a witness.

எம்.ஜி‌.ஆரின் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியின் மீதுள்ள வெறுப்பினால் மட்டுமே ஆளும் கட்சி தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது. 2ஜி என்ற சொல்லுக்காகவே திமுக கடந்த இரு தேர்தலிலும் தோல்வியை சந்தித்தது. இம்முறை மக்கள் பெருந்திரளாக வாக்கள்ளிக்கப்போவது திமுக என்ற யானைக்கே. ஆனால் அது அதன் பேரில் உள்ள விருபத்தினால் அல்ல. அண்ணா திராவிட மன்னார்குடி கழகத்தின் மேலுள்ள வெறுப்பினால் மட்டுமே ஸ்டாலின் மகுடம் சூட்டிக்கொள்ளபோகிறார். மாற்றான் மேல் உள்ள வெறுப்பால் சம்பாதிக்கப்போகின்ற மகுடத்தை நாகரீக அரசியல் மூலமாக மக்களின் விருப்பத்தால் தக்கவைத்துக்கொள்ள முனைந்து செயல்பட அவரால் முடியும் என்று நமப்த்தோன்றுகிறது. பத்திரிக்கை சந்திப்பு, பேட்டி, முகநூல் என்று எதிலுமே டிப்ளோமெட்டிக்காக செயல்படும் தளபதிக்கே இந்த முறை பிரகாசமான வாய்ப்பு.


இலை உதிர்ந்து சூரியன் உதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.சிலருக்கு திரை விலக 60 நாட்கள் எடுத்துக்கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு 60 நாட்களிலேயே  திரை விலகியது அதிர்ச்சியை கொடுக்கலாம். ஆனால் திரை விலகிவிட்டது என்பது தான் உண்மை.

இவர் தான் தலைவர் என்று அறிவிக்கபட்டு பின் அந்த கட்சியையோ அல்லது அந்த கட்சியின் வேட்பாளரையோ நாம் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கிறோம். நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் நமது விருப்பமான கட்சியின் அடையாளமாக இருந்திருக்கக்கூடும். அல்லது நமக்கு பிடித்த வேட்பாளரின் பொருட்டு நாம் அந்த கட்சியை தேர்ந்தெடுப்பதற்கு இடமிருக்கிறது. இரண்டுமே இல்லாத ஒரு இக்கட்டான நிலைக்கு தற்போது தமிழக மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். வெறும் கையறு நிலை.

நகை முரண் யாதெனில், இவை அனைத்துமே நாம் பெரிதும் மதிக்கும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறது. அல்லது சட்டத்தின் அங்கங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்களால் மிக லாவகமாக கையாளப்படுகின்றன. காலவரிசைக்கிரமமாக நாம் இதை கவனித்தோமேயானால், காய்கள் மிக சரியாக, அதற்குரிய தருணத்தில் சற்றேனும் பிசகாமல் நகர்த்தபட்டிருக்கின்றன என்பதை யூகிக்க முடிகிறது. அவ்வாறு இருப்பின், இதற்கான திட்டமிடல் பல ஆண்டுகளாக நடத்தபட்டிருக்கலாமோ ஆன்ற ஐயமும் தொக்கி நிற்கிறது.

தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட முடிவிலிருந்தே, தேர்ந்தெடுக்கபட்ட அனைவர் கையும் கறைபடிந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முந்தைய தேர்தலில் பணத்தால் ஓட்டை விலைக்கு வாங்கமுடிந்ததேயானால், அதற்கு காரணம், கட்சியில் பிரபலமான முகம் இருந்தது, மக்களுக்கு அந்த முகம் கனவிலும் பரிச்சயமாகியிருந்தது. ஆனால் இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் முகமோ, மக்களின் வெறுப்பை சம்பாதித்து பிரபலமாகியுள்ளது. ஒருத்தர் மட்டுமல்லாது ஒவ்வொருத்தரிடமும் கோபம் மண்டியிருக்கிறது.

வீரனுக்கு போர்வாள் ஆயுதம், எழுத்தாளனுக்கோ கைபிடித்திருக்கும் பேனாவே ஆயுதம். ஆனால் சாமானியபட்ட மக்களின் ஆயுதம் ஓட்டுரிமை மட்டுமே. பாரத்தத்திற்கு மிகப்பெரிய ஜனநாயக நாடென்ற பெருமை உண்டு. அவ்வழியே ஜனநாயகத்தின் பாதையில் தன்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கிருக்கிறது. சகிப்புத்தன்மைக்கு பேர்போன தமிழர்களுக்கு அதைத்தவிர தற்போது வேறு உபாத்தியம் இல்லை. வலுவுள்ள வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் மட்டும் காத்திருக்கவில்லை, அலைகடலென திரண்டு ஓட்டளிக்க மக்களும் காத்திருக்கிறார்கள். வாக்களிப்பதின் மூலமாக மட்டுமே உரிமையை மீட்டெடுக்கும் முகாந்திரமிருக்கிறது.

மேய்ப்போனை என்றுமே ஆடுகள் பகைத்ததும் இல்லை, பட்டிதாண்டி ஓடியதுமில்லை. பகைத்துக்கொண்டால் இலை தழைகள் கிடைக்காது. பட்டிதாண்டினால் ஓநாய்கள் வேட்டையாடிவிடும். ஆனால் இலை தழைகளுக்கும் இலவசங்களுக்கும் மேய்ப்போனை பகைக்காமலிருக்கவும், ஓநாய்கள் வேட்டையாடும் வரை கைகள் பிணைந்திருக்கவும் தமிழக மக்கள் ஒன்றும் ஆடுகள் இல்லை.  திமிறி எழும் ஜல்லிகட்டு காளைகள்.

திமிறி எழு இளைஞனே. நாளைய உலகம் உன் கையில் !!!2015 மற்றும் 2016 என்று பொறுத்த பார்த்த தமிழன் இப்போது பொங்கி எழுந்திருக்கிறான். இதை ஜல்லிகட்டுக்கான புரட்சி என்று மட்டுமே பார்க்க முடியவில்லை. ஜல்லிக்கட்டையும் தாண்டி 2019 மற்றும் 2020 க்கான அரசியல் மாற்றத்தின் அடிநாதமாகவே தெரிகிறது. 2015 மற்றும் 2016 இல் அம்மா முதலமைச்சராக இருந்தார். அவர் ஏதேனும் முயற்சி செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலோ அல்லது காவல் துறையின் ஒடுக்கும் கரங்களை கொண்டு தங்களை அடக்கக்கூடும் என்ற உணர்விலோ இத்தகைய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை mixture meme மூலம் கலாய்க்கும் அளவுக்கு தைரியம் என்று கூறமுடியாவிட்டாலும், அவர் மீதான அவநம்பிக்கையின் வெளிப்பாடாகவே இந்த புரட்சியை பார்க்கமுடிகிறது. மக்கள் அரசின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டார்கள். விவசாயிக்கு அடைக்கலம் அளிக்காதது, ஜல்லிக்கட்டில் முரண்பட்டது, தமிழகமே வெறுக்கும் ஒரு குற்றவாளியை முன்னெடுத்து செல்வது, NEET தேர்வுக்கு ஆதரவு அளித்தது, உதய் மின் திட்டத்தில் சேர்ந்தது என்று தனக்கான குழியை தானே பறித்துக்கொண்டிருக்கிறது. அடுத்த தேர்தலில் இரட்டை இலை மற்றும் தாமரை இரண்டுமே மிக மோசமான தோல்வியை சந்திக்கக்கூடும். இவர்களுக்கு அடுத்து ஓரளவேணும் தெரிந்த முகமாக இருப்பது ஸ்டாலின் மட்டுமே. வெற்றி தானாகவே அவர்கள் மடியில் விழும். இது இவ்வாறாக இருக்க,

ஜல்லிக்கட்டின் போராட்டம் இத்தகய உச்சத்தை தொட்டிருப்பது, ஒவ்வொரு தமிழனின் ஏன் அனைத்து மாநில மற்றும் நாடுகளிலும் ஆச்சர்யத்தையும் அதனைத்தொடர்ந்து வரவேற்பையும் ஒரு சேரப்பேற்றிருக்கிறது. சுதந்திர போராட்டத்திற்கு பிறகு சாதி மாத இன பேதமின்றி மக்கள் ஒன்று திரண்டிருப்பது தமிழக வரலாற்றில் இது முதல் முறையாகும். முகநூல் மற்றும் வாட்ஸ்அப் இதில் முக்கிய பங்காற்றிருக்கிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் மூர்க்கமடைந்து தன்னுள்ளே ஆழமாக வேரோடிருந்த தனித்துவமிக்க அடையாளங்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. முன்னமே கூறியது போல், கீழடியில் தொல்லியில் ஆதாரங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. தமிழனின் அடையாளங்கள் ஒவ்வொன்றாக மறைக்கப்பட்டு அவனை வேரறுக்கும் நிகழ்வு நம் கண்முன்னே மெதுவாக நடந்துகொண்டிருக்கிறது. இத்தனை நாளும் தன்னுள்ளே சலித்துக்கொண்டு, அலுப்போடு ஒடுக்கபட்டிருந்த ஆதார உணர்ச்சிகள் பீறிட்டு கொப்பளித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்பட்டிருக்கும் அக நெருக்கடியை புறந்தள்ளி வைத்துவிட  முடியாது. மாற்றத்தின் ஆதார விதை இங்கே இப்போது தூவபட்டுக்கொண்டிருக்கிறது. அதை ஒரு ஆலமர விருட்சமாக துளிர்த்து அகன்ற நிழலாக வெடித்து வெளிக்கொணரும்  முகாந்திரம் ஒவ்வொரு தமிழனின் கைகளில் உறைந்துகிடக்கிறது.

வாழு. வாழ விடு

வாழ்க தமிழ். வெல்க தமிழ்.
இருபது நாட்களுக்கு முன்பு எனது பதின்மூன்று வருட பாரம்பரிய XL Super வண்டிக்கு பெட்ரோல் போடச்சென்றிருந்தேன். அதன் கொள்ளளவு 4.0 லிட்டர். பல நாட்கள் உபயோகபடுத்தாததால் வண்டி கிட்டதட்ட ட்ரை ஆகியிருந்தது. பெட்ரோல் போடும் பைப்பை உள்ளே சொருகியவன், கீழே டேங்கை ஆஃப் செய்ய சொன்னான். அது டைவர்சன் டெக்னிக் என்பது பின்பு தான் தெரிந்தது. கீழே குனிந்து ஆஃப் செய்து தலையை தூக்கிய அந்த அரை நொடியில் நான் சொன்ன இரண்டு லிட்டர் நிறைந்திருந்தது. என்ன நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடிந்திருந்தது. முன்னாள் சென்ற வண்டிக்கு ஐம்பது ரூபாய்க்கு போட்டவன் அதை ஜீரோவாக்காமல் அப்படியே போட்டிருந்தான். எனக்கு ஏமாந்த உணர்வு. சந்தேகம் வலுக்கவே மீண்டும் லைனில் சென்று டேங்கை ஃபுல் செய்யச்சொன்னேன். இப்பொழுது 2.64 லிட்டர் பிடித்தது. மொத்த கொள்ளளவு 4.0 லிட்டர் தானே. எப்படி நீ 4.64 போட்டாய் என்று கேட்டதற்கு CB CID யா? ஆளை கூட்டி வருவாயா என்று மேலும் சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தான். என் கையில் அப்போது மொபைல் வைத்திருக்கவில்லை. ஒனருக்கு போன் செய்ய முடியாது. தவிரவும் கைகலப்பு ஆகும் வாய்ப்பு இருந்தது.  ஆதலால் நீ செய்வது தவறு என்று சுட்டிவிட்டு மைய்யமாக புனகைத்து விடைபெற்றேன்.

வார்த்தை மோதலின்போது அவனின் பெயரை ஒருவன் உச்சரித்தது ஞாபகம் வந்தது. ஒனரின் நம்பரை ஆண்டவரிடம் கேட்டு கண்டுபிடித்து அவரிடம் இதை பற்றி விளக்கினேன். வருத்தம் தெரிவித்து அவனிடம் பேசுவதாக சொன்னார். நேரில் வரச்சொன்னார். ஆனால் அவரிடம் பேசும் முன்பே India Oil வெப்சைட்டில் நம்பிக்கையில்லாமல் பின் ஊட்டம் அளித்திருந்தேன். மேலும் முத்தாய்ப்பாக Public Grievance Portal இல் MPANG கேட்டகரியில் ஒரு புகார் அளித்திருந்தேன். அதன்பிறகு தான் ஹைலைட்.
Indian Oil பின்னூட்டத்திற்கு அடுத்த நாளே அவர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்து மேலும் அந்த ஊழியனை மூன்று நாட்கள் சஸ்பெண்ட் செய்துவிட்டதாகவும் கூறியிருந்தனர். மேலும் திருச்சி IOCL Sales office மேனேஜர் மூன்று முறை போன் செய்து தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இதெற்கெல்லாம் மேலாக Public Grievance Portal இல் பதிவு செய்த புகார் டெல்லி சென்று அங்கிருந்து IOCL HO க்கு route செய்யப்பட்டு பின்பு அங்கிருந்து சென்னை IOCL மூலம் திருச்சி IOCL வந்தடைந்து CCTV காமிரா வரை நிரூபணம் கேட்டு CBCID போல் விசாரித்து ஒரு பதில் அனுப்பியிருந்தனர். வினை விதைத்தவன் வினை அறுத்துவிட்டான் என்பது புரிந்துவிட்டது. .

இரண்டு நாட்கள் முன்பு பெட்ரோல் நிரப்புவதற்காக அதே பங்கிற்கு சென்றிருந்தேன். கார்ட் தேய்க்கும்பொழுது அங்கிருந்தவரிடம் மெதுவாக விசாரித்தேன். நீங்கதான் புகார் தெரிவித்தவரா என்று கேட்டு அதற்காகவே காத்திருந்தது போல் அவர் மேனஜரிடம் அழைத்து சென்றார். அவரும் மன்னிப்பு கேட்டு, அந்த ஊழியனை  காசாளரையும் வேலையில் இருந்து நிறுத்தியதை தெரிவித்தார். அங்கிருந்த அனைவருமே இது போல் ஒரு தவறு நடக்காது என்பதை உறுதிபடக்கூறினர். தாங்கள் மன்னித்துவிட்டதாக ஒரு கடிதம் கொடுக்கவேண்டும் என்றும் அதை நான் IOCL ஆபீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டிகேட்டுக்கொண்டார். முடிந்தால் வீட்டிற்கு வந்தே வாங்கிக்கொள்கிறேன் என்றும் கீழிறங்கி வந்தார். தங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம் என்றும் நானே வந்து தருகிறேன் என்றும் கூறி இன்னும் ஒரு மாதத்தில் தூக்கி எரியப்போகும் JIO நம்பரை கொடுத்துவிட்டு நான் எஸ்கேப்.
Grievance Redressal என்பது எல்லா சேவைகளுக்கும் அந்தந்த நிறுவனங்களே நடத்துகிறது எனபதும் மேலும் அவற்றை கவனிக்க மத்திய அரசின் குறை தீர் வெப்சைட்டும் உறுதுணையாக இருக்கிறதென்பதும் அவை செவ்வனே வேலை செய்கிறதும் என்பதும் இத்ன் மூலம் திண்ணமாகிறது.

இது ஒரு விழிப்புணர்வுக்காகவே எழுதபட்டது.

அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த சப்தம் அவரை அங்கு ஒரு நிமிடம் நிற்க செய்தது.
இரண்டு மணிநேரத்திற்கு முன்பு,

வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரத்தில், நரசிம்மனுக்கு அந்த பைலை பார்த்தது முதல் எரிச்சலாக இருந்தது. அதை கொண்டு வைத்த பியூனிடம் கடுகடுத்தார். இன்று மூல நட்சத்திரம், சாயுங்காலம் ஆஞ்சநேயர் கோவில் போக வேண்டும், அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதிலேயே பரபரவென்று பரத்திக்கொண்டிருந்தார். அரசாங்க கருவூலத்தில் காசை எண்ணி சரிபார்த்து ஒவ்வொரு நாளும் கணக்கை வரவு செலவு வாரியாக துல்லியமாக முடித்துவைத்து விட்டு வரும் காசாளர் அவர். ராம” நாம ஜபத்தை கிடைத்த நேரம் முழுவதும் ஜெபிக்கும் ஆசாமி. யார் வம்புக்கும் போகாதவர். அதே நேரத்தில் ராமன் ஆண்டால் என்ன் ராவணன் ஆண்டால் என்ன என்று தன் காரியத்தில் மட்டுமே குறியாக இருப்பவர். 
சார், இந்த பைல இன்னைக்கு தள்ளி விட்டுடுங்கோ என்று பியூன் கெஞ்சாத குறை.

“அதெல்லாம் முடியாதுடா அம்பி. மணி இப்போவே ஆறு. நாழியாய்டுத்து. கோயிலுக்கு போனும். பெருமாள சேவிக்கணும். எல்லாம் நாளைக்கு பாக்கலாம்டா” என்று வேஷ்டியில் படிந்த மண்ணை தட்டிவிட்டு கிளம்பிவிட்டார்

பைக் பஞ்சர், பஸ்ஸில் கூட்டத்தில் முண்டியடித்தது, கண்டக்டர் சில்லரை தராதது என்று கோவிலுக்குள் செல்லும் வரை நொந்துகொண்டே இருந்தார்.  சரியாக  அர்ச்சனை சமயத்துக்கு வந்துவிட்டது அவரை சிறிதேனும் ஆசுவாசுபடுத்தியது. பேரெல்லாம் கூறி அர்ச்சனை செய்து தீபாராதனை பார்த்து, காணிக்கை வைத்து, கண்ணில் ஒற்றி, துளசி தீர்த்தம் பருகிய பிறகுதான் பெருமூச்சு விட்டார்.

கோவில் பிரசாதத்தை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினார்.  எரியாத தெருவிளக்கை எண்ணி நொந்துகொண்டே வீட்டை நோக்கி நடந்தார். பழைய இருள் சூழ்ந்த பள்ளி கட்டிடத்தை தாண்டி சென்றுகொண்டிருந்தார். பசி வயிற்றை கிள்ளியது. ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு படையெடுத்தார்.
அப்பொழுது அந்த கட்டிடத்தில் இருந்து வந்த சப்தம் அவரை அங்கு ஒரு நிமிடம் நிற்க செய்தது. சில பொருட்கள் கீழே விழுவது போல் கேட்டன. காம்பவுண்ட் சுவரை ஒட்டிசென்று காதை வைத்தார். ஒரு பெண்ணின் அழுகையோ பேச்சோ தெளிவில்லாமல் கேட்டது. எவன் எக்கேடு கேட்டுபோனால் எனக்கென்ன என்று நகர ஆரம்பித்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பின்னங்கால் பிடரியில் அடிக்க கட்டிடத்திற்குள் ஓடினார். சத்தம் வந்த அறையை நோக்கி செல்லவும் அங்கு ஒருவன் ஒரு பெண்ணை பலவந்தபடுத்துவது இருட்டில் நிழலாக  தெரிந்தது. அவன் குடித்துவிட்டு நிலை கொள்ளாமல் தள்ளாடிக்கொண்டு அவளை பிடித்து கொண்டிருந்தான். அந்த பெண் ஓட முயன்று தோற்றுக்ண்டிருந்தாள். எங்கிருந்து வீரம் வந்ததோ தெரியவில்லை. ஓடி சென்று ஒரு பெரிய கல்லை எடுத்து ராமா ஆஞ்சநேயா என்று கத்திக்கொண்டு அவன் தலையில் ஓங்கி அடித்தார். அவன் கீழே விழவும், “அப்பா” என்று அழுதுகொண்டே அவருடைய மகள் அவரை கட்டிக்கொண்டாள்.

Not necessary that it should be your child.

Stop Violence and Save women
அவரின் வாழ்க்கை முழுவதுமே மர்மம் விரவிக்கிடந்திருக்கிறது. தன் வாழ்க்கையின் முன்பாதி முழுவதுமே இரு மனிதர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கபட்டிருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒன்று தன் தாய் சந்தியா. அவரின் தூண்டுதல் பேரில் திரையில் நடிக்கத்தொடங்கி கோலோச்சியது தனக்கு என்றுமே விருப்பமில்லாத ஒன்று என்று வருந்தியிருக்கிறார். மற்றொன்று தமிழக அரசியியலில் கர்ம வீரருக்கு நிகரான ஒரு பிம்பத்தை பெற்றிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் தவிர்க்கமுடியாத அரசியல் வாரிசாக உருவெடுத்தது. இதன் காரணமாகவே, தனது வாழ்க்கையின் மறுபாதியை யாருக்கும் இல்லாது தனக்கே தனக்காக வாழ வேண்டும் என்ற ஆசையை அந்த பேட்டியில் அடிகோடிட்டிருந்தார்.  ஆனால் அதுவும் பொய்த்துப்போனதை தொண்டர்கள் அறிவார்கள். மூன்று முறை கார்டனை விட்டு விலக்கிவைத்ததும் பின்பு மன்னித்து சேர்த்துக்கொண்டதும், கூடாநட்பு என்று தெரிந்திருந்தும் உறவாடியதும் விடைதெரியா கேள்விகள்.  கலைஞர் அவர்கள், கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று காங்கிரஸை விட்டு விலகியதும் பின்பு சுய ஆதாயத்துக்காக கண்கள் பனித்தன என்று மீண்டும் சேர்ந்த காரணத்தையும் தி.மு.க. தொண்டர்கள் அறிவார்கள். ஆனால் இந்த கூடா நட்பு ஏன் என்பது இன்று வரை லட்ச்சோப லட்ச தொண்டர்களின் புரியாத புதிர்.

பாபா ராம்தேவின் FMCG பொருட்கள் முழுவதும் பதஞ்சலி என்ற பேரில் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு எல்லா FMCG ஜாம்பவான்களுக்கு ஜன்னி கண்டதோ, அதே marketing  யுக்தி அம்மா சால்ட், அம்மா சிமெண்ட், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று கொணரப்பட்டு அடிமட்ட தொண்டன் வரையில் “அம்மா” வை ஞாபகம் வைத்துக்கொள்ளச்செய்தது தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ்.  தன்னை அம்மா என்று கூப்பிட குழந்தையில்லையே என்று வருத்தம் உங்களுக்கு வேண்டாம், நாங்கள் இருக்கிறோம் என்று கோடிக்கணக்கான மக்களை அம்மா என்று அழைக்கவைத்தது அதிரடி சரவெடி. நாற்பதும் நமதே, மக்களுக்காக நான், மக்களுக்காவே நான் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல. சரித்திரம்.

அவர் மறைவை இப்பொழுதும் கூட நம்ப முடியவில்லை. காய்ச்சல் என்று அனுமதித்து பின் உயிரற்ற சடலமாகத்தான் அவரை வெளியே கொண்டுவந்தார்கள். படோடப கல்யாணம், நகைகள், காலணிகள், அரசு ஊழியர்கள் கைது, கூடா நட்பு, தலமைச்செயலகத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது என்று பல முரண்பட்ட விஷயங்கள் நெருடிக்கொண்டிருந்தாலும் சொந்தபந்தங்களின்றி அந்த 75 நாட்களும் தனக்கு என்ன நடந்தது என்பது தெரியாமலேயே ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மரணத்தை தழுவியது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவர் தன்னை சுற்றி கட்டமைத்துக்கொண்ட வேலி அப்படிபட்டது. அந்த வேலி அவரால் விரும்பி ஏற்றுக்கொள்ளபட்ட ஒன்றா அல்லது அழுத்தத்துடன் மற்றவர்களால் கட்டமைக்கபட்டதா என்பது மற்றுமொரு புதிர்.

மருத்துவமனையில் செப்ட் 22 அனுமத்திதது முதல் டிசம்பர் 5 வரை வெளியிலேயே காத்துகிடந்து பல சேனல்கள் செய்திகளை மட்டும் சொல்லாது ஊகங்களையும் வாசித்தன. அதுவும் டிசம்பர் 5 அன்று, அந்த ECMO வை பிடுங்கி எறியுங்கள், எங்களுக்கு TRP rating , தலைவர்களை அழைத்து நேர்காணல், மற்றும் குழு விவாதம் என்று பலவற்றை செய்யவேண்டியிருக்கிறது என்பது போன்ற நடவடிக்கை மிகுந்த பயத்தை கொடுக்கிறது. அடுத்து அடுத்து என்று ஓடோடி சென்று குழிக்குள் மண்ணை போட்ட மூடிய பின் தான் ஊடகம் தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டது போல் தெரிகிறது. இதுதான் அவர்கள் தொழில் என்றாலும் அதில் கடைபிடிக்கவேண்டிய அறம், நெறிமுறைகள் பிறழ்ந்துவிட்டனவோ என்று அச்சம் தொக்கி நிற்கிறது, கொடுக்கப்பட்ட சிகிச்சை முதல் எம்பாமிங்க் செய்தி மற்றும்  மரணித்த நேரம், ஏன் நாட்கள் கூட, இப்பொழுது வரைக்கும் ரகசியாமாக இருக்கின்றன. பல ஊடகங்களுக்கு அவை தீனியாக செயல்படுகின்றன. இது ஆண் பெண், சாதி மதம் பேதமின்றி பிரபலங்கள் அனுபவிக்கும் சாபம்.

எது எவ்வாறாக இருந்தாலும் பல உண்மைகள் அவருடன் அந்த சந்தனப்பேழையயில் மீளா துயில் கொள்ள சென்றுவிட்டன.
மகாபாரதத்தில் காந்தாரி 101 பிள்ளைகளை பெற்றடுத்தது பற்றி அறிந்ததுண்டா? குந்திக்கு முன்பே கருவுற்ற போதிலும் காந்தாரியால் குழந்தையை பெற்றெடுக்க முடியவில்லை. கோபம் கொண்டு தன் வயிற்றில் தானே குத்திக்கொள்கிறாள். அதன் காரணமாக ஒரு சதை பிண்டத்தை மட்டுமே பெற்றெடுக்கிறாள். வியாச முனிவர் இதை அறிந்து அவளுக்கு உதவ முன்வருகிறார். அந்த சதை பிண்டங்களை 101 துண்டுகளாக வெட்டி ஒவ்வொன்றையும் நெய்யும் மூலிகையும் நிறைந்த குடங்களில் போட்டு வைத்து சில நாட்கள் கழித்து அவற்றை கௌரவர்களாக பெற்றெடுக்க உதவுகிறார். Why those 101 pots cannot be an incubator of that good old period? ஏன் அவை தற்காலத்திய இன்குபேட்டர்களாக இருக்க முடியாது? நெய் என்று குறிப்பு இருக்கிறதே தவிர அது ஒரு வகை எண்ணை என்ற பொருளிலே எழுதபட்டிருக்கிறது.

ராமாயணத்திலே வரும் புஷ்பக விமானம் பற்றி ஏன் நாம் பெருமை கொள்ளவில்லை? அவை ஏன் ஒரு fantasy கதைகளாவே பார்க்கபடுகின்றன? Epic என்று ஏன் அதை வரலாற்றிலிருந்து பகுத்தும் பிரித்தும் வைத்துள்ளோம்?  கண்ணால் பார்க்கமுடியாத கையால் தொட்டு உணரமுடியாத ஒன்றை நிஜமில்லை என்றே அறிவியல் கூறுகிறது. அவ்வாறெனில் “The lost city of Dwarka” by S.R.Rao என்றொரு புத்தகம் இருக்கிறது. பாகவத புராணத்தில் கிருஷ்ணன் துவாரகை என்றொரு நகரத்தை நிறுவி அதன் குடிமக்கள் அனைவருக்கும் நகர மக்கள் என்று அடையாளத்திற்காக லட்சிணை  கொடுத்துள்ளான். அந்த லட்சிணை எந்த வடிவத்தில் அதில் என்ன பொறிக்கபட்டிருந்தது மற்றும் எவ்வாறு இருந்தது என்பதற்கு பாகவத புராணத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது.  1981 இல் S.R.Rao தலைமையில் செய்யப்பட ஆழி அகழ்வாராய்ச்சியில் (marine expedition) சில தகவல்கள் கிடைக்கின்றன. நீண்ட சிதிலமடைந்த மதில் சுவர்கள், நகர வாயில் கோபுரங்கள், இடிபாடுடன் கூடிய கட்டிடங்கள். இவை அனைத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக அங்கு கிடைத்த உலோகத்தினால் ஆனா லட்சிணைகளின் அடையாளங்கள் பாகவத புராணத்தில் சொல்லபட்ட குடிமக்களின் லட்சிணையை ஒத்து போகிறது. மொத்தமாக 5% இடங்கள் மட்டுமே ஆராய்ச்சி செய்யபட்டுள்ளன என்றும் மீதம் 95% இடங்கள் identify செய்யபட்டு நிதி உதவிக்காக காத்துக்கொண்டிருக்கின்றன என்று இந்த புத்தகத்தில் S.R.Rao குறிப்பிட்டுள்ளார்.

பூம்புகார் கதியை தமிழகமே அறியும். தற்பொழுது முப்பது வருடங்கள் கழித்து ஒரு முழு அகழ்வாராய்ச்சிக்கு தயாராகிக்கொண்டிருந்த கீழடி கிராமம்,  இப்பொழுது மூடபட்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை வைத்துக்கொண்டு, ஊர் ஊராக விலாசம் தேடி மதுரைக்கு சென்று மனைவி மக்களுடன் பார்த்து வந்தோம். அங்கு கிட்டதட்ட் முப்பது குழிகள் தோண்டபட்டு இருந்தன. ஒவ்வொன்றும் பத்துக்கு பத்து அடிகள். தோண்டுவது என்றால் JCB கொண்டு அல்ல. தங்க ஆபரணம் செய்வது போன்று பெயிண்ட் பிரஷ் வைத்துக்கொண்டு இன்ச் பை இஞ்சாக செய்யும் நகாசு வேலை அது. அத்தனை வேலையாட்கள் கொண்டு செதுக்கி எடுக்கபட்ட குழி அது. ஒவ்வொன்றும் வரலாற்றுப்புதையல். தமிழின ஆதாரம். உரை கிணறு முழு வடிவத்தில் கிடைத்திருக்கிறது. இதுபோன்று முழு வடிவத்தில் வேறு எங்கும் கிடைத்ததில்லை என்று சந்தோசகமாக கூறினார் அங்கிருந்த ஒருவர். வீட்டின் சுவர், சமையல் அறை என்று ஒரு நகரமே காலுக்கடியில் இருப்பதை உணரமுடிந்தது. கண்டுபிடிப்பில் அவர்கள் அறுதியிட்டு கூறியது யாதெனில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் மார்க்கமாக ரோம் நகரத்தினருடன் வாணிபம் செய்தது திண்ணமாயிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு முன்பு கடல் மூலமாக வாணிபம் செய்திருக்கிறோமென்றால் தமிழ் நாகரிகத்தின் அடிச்சுவடு குறைந்தபட்சம் இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் முன்பு செல்லலாம். யுக்தி கல்பதாரு புத்தகத்தில் கப்பல் கட்டுவதை பற்றி அவ்வளவு தெளிவாக இருக்கிறது. மச்ச யந்த்ராவில் திசை காட்டும் கருவியை பற்றி சொல்கிறது. அக்னிபுராணத்தில் ஆயுதங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒரு பகுதியில் வில் அம்பு பற்றி தெள்ளத்தெளிவாக கூறபட்டுள்ளது. பயிற்சி செய்யும் அம்பு எவ்வாறு தயார் செய்யப்பட வேண்டும்?, எந்த காட்டு விலங்கை வீழ்த்த அம்பின் பின்னால் எந்த பறவையின் இறகை பயன்படுத்தவேண்டும்?, என்றெல்லாம் குறிப்பு காணக்கிடைக்கிறது. கீழடியில் கண்டெடுக்கபட்ட பானை ஓடுகள் ஒன்றிரண்டை ஞாபகமாக எடுத்து வைத்துக்கொண்டோம். யார்கண்டது அவை என் பாட்டன் அல்லது முப்பாட்டன் செய்ததாக இருக்கலாம்.
ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபொழுது அவர்கள் செய்த முதல் வேலை, நம்மிடமிருந்த கல்விச்செல்வத்தை அழித்ததுதான். குருகுலத்தை ஒழித்தார்கள். நூலகம் அனைத்தையும் அழித்தார்கள். சங்க கால திரட்டுகள் ஓலைச்சுவடிகள் எல்லாம் அழிந்துபோயின அல்லது எடுத்து செல்லபட்டன. வாணிபம் செய்ய இடம் கொடுத்து பின் வஞ்சிக்கபட்டு வேரறுக்கபட்டோம். ஒருவேளை இந்த வரலாற்றுச்சுவடுகள் அனைத்தும் உலகுக்கு தெரியவந்ததேயானால் தான் எழுதிய வரலாற்றை (timeline) முழுவதுமாக மாற்ற வேண்டிய கட்டாயதிற்கு உண்டுபடுவோம் என்று எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவை. குமரிக்கண்டமெல்லாம் தோண்டி எடுக்கப்ட்டால் முழுவரலாறும் மாற்றியமைக்கவேண்டிவரலாம். Supreme Court வருவதற்க்கு முன்பிருந்தே நம்மிடமிருந்த ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. அடுத்த தலைமுறைகள் அதை ஒரு ஆவணமாக மட்டுமே காணும். இதுபோல் இதுவரை எத்தனை இழந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. யாருக்காக இந்த விளையாட்டு என்பதும் புரியவில்லை. ஒன்று மட்டும் நிதர்சனம். நம்முடைய வேர்கள் நம்மிடமிருந்து ஒவ்வொன்றாக அறுந்துகொண்டிருக்கின்றன. நாம் அதை இருகபற்றிக்கொள்ளாமல் இந்த அநீதிக்கு சாட்சியாய் இருந்துகொண்டிருக்கிறோம். வரும் தலைமுறைகள் யார் நீ? என்று நம்மை கேட்கப்போகும் தூரம் வெகு தொலைவில் இல்லை.சமீப காலங்களில், ஏன் வாழ்நாளிலேயே அதிகமாய் கேட்ட பாடல் என்றால் அது ராசாளி தான். மிகச்சிறந்த வெரைட்டி கலந்த மெல்லிசை. நவீனமும், கர்நாடகமும் பின் பக்தி பாடளின் இசை என கூட்டு கட்டி கலந்தடித்த ராகமாலிகா. ராசாளியில் (கண்டு) பிடித்த சில விஷயங்கள்.

சத்யப்ரகாஷின் உச்ச ஸ்தாயி அருமை.

“ராசாளி..... பந்தயமா?“ என்பது இரண்டே வார்த்தைகள் தான் என்றாலும் மூச்சை பிடித்து இழுத்து அத்தனை ஆலாபனை செய்து படுவது சிரமமென்றாலும் அனாயாசமாக ஸ்கோர் செய்து விடுகிறார். 
அருணகிரிநாதரின் quondam and first ever rap in the world ,

“முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்“ என்ற பாடலின் ராசாளி வடிவமே,

“எட்டு திசை முட்டும் எனை பகலினில்,
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்,
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில்.. மடிவேனோ?
முன்னில் ஒரு காற்றின் களி முகத்தினில்,
பின்னில் சிறு பச்சை கிளி முதுகினில்,
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?”

முன்னே, VTV இல் “அன்பில் அவன்” பாடலில் மூன்று திருக்குறளை புகுத்தி square cut boundary அடித்தார் என்றால், ராசாளி பாடலில் Helicopter Six அடித்திருக்கிறார், நம்ம ARR.

ஷாஷா பாடும் நின்னுக்கோரி வர்ணம், ஒரு memorising மோகன ராகம். ஷாஷா, நின்னுக்கோரி என்று பாடி முடித்து பின் “வெய்யில் மழை வெட்கும் படி”  என்று சரணத்தை பாட ஆரம்பிப்பதற்கும் நடுவில் ஷ்ஷ் ஷ்” என்ற ஒரு pass வருவதை கவனித்தீர்களா? ஒருவேளை இந்த பாடலை பாடகர்கள் மேடையில் பாடும்போது மூச்சு விடுவதற்காக குடுக்கபட்ட pass என்பது அடியெனின் கருத்து.

ஏன் என்றால், சரணம் நம்பர் ஒன்றில் சத்யபிரகாஷ் பாடும்பொழுது
“வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ?” என்று முதல் தடவை பாடி பின்பு அதையே இரண்டாம் தடவை பாடும்பொழுது “விடுவேன்?” என்று முடித்து உடனே “ராசாளி இ இ இ இ இ இ” என்று இழுக்க போய்விடுவார்.  Hence the conclusion.

மொத்தத்தில் 100/100 கொடுக்கலாம். பாட்டின் விஷுவலை காண ஆவலாயிருக்கிறேன்.அது P.E.T பீரியட். எல்லாருமே சட்டையை கழட்டி ஸ்கூல் பேக்கில் வைத்துவிட்டு பனியனோடு மைதானத்திற்கு வரிசையாக நடக்க ஆரம்பிப்போம். பனியனில் எங்கள் John’s ஸ்கூலின் லோகோ, மோட்டோ என எல்லாம் சிகப்பு நிறத்தில் அச்சடிக்கபட்டிருக்கும். P.E.T மாஸ்டர் ரூமில் இருந்து எறிபந்து, வாலிபால், ஃபுட்பால், ரிங் என கிடைத்ததையெல்லாம் எடுத்து கொண்டு விளையாட போவோம். இல்லை போவார்கள். விளையாடுவதில் அதிகம் நாட்டமில்லாத்ததால் நானும் பாலா மற்றும் பிரிஜீத் மூன்று பேர் மட்டும் காலாற மைதானத்தை நடக்க ஆரம்பித்துவிடுவோம். கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் நடந்து மைதானத்திற்கு வெளியே இருக்கும் ஒரு பெட்டிக்கடையில் அந்த வாரம் முழுவதும் சேர்த்து வைத்த இரண்டு ரூபாயை வைத்து கொண்டு அப்பளப்பூ, இலந்தை பழம், கொடிக்காபுள்ளி, மிட்டாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு பங்குபோட்டு சாப்பிடுவோம். மீண்டும் காலாற நடந்து வந்தோமேயானால் அடுத்த பீரியட் தொடங்க சரியாக இருக்கும். இண்டெர்வெல்லில் டேவிடுடன் சேர்ந்து துரத்தி துரத்தி ஓணான் அடித்தது ஞாபகமிருக்கிறது. ஒரே வீச்சில் ரெண்டு துண்டாக காலி பண்ணிவிடுவான்.  ஸ்கூல் சர்சில் (chapel) மேத்தியு வுடன் சேர்ந்து மண்டிபோட்டு சிலுவையிடம் தேர்வுக்காக பிரார்தித்தது, ராகுலன், சோமா சீதா என்று மதிய நேரம் துண்டு விரித்து வேப்பமரத்தின் அடியில் டிபன்பாக்சை பிரித்து ஆரமர அளவளாவி உண்டது, முகமது அலியுடன் சேர்ந்து டெல்லி ஸ்கூல் டூரில் லூட்டியடித்தது என அவ்வப்போது இதுபோன்று பல நினைவுகள் மனதின் அடியாழத்தில் இருந்து சுழன்று வெளி வருகின்றன. இதையும் தாண்டி பல நண்பர்கள். ஒவ்வொன்றும் cherish able memories. சுகந்தம். சிந்தையில் தூளி கட்டி ஆடுகின்றன. கால இயந்திரத்தில் ஒருமுறை சென்று பார்த்து விடமுடியாதா என்பது போன்ற அள்ளி விழுங்கிக்கொள்ளும் ஞாபகங்கள். 

பள்ளி முடிந்து கல்லூரி சென்று பின்பு பாதைகள் மாறி பயணங்கள் மாறினாலும் நம் வருடக்கணக்கில் தொடர்புகொள்ளாமல் இருந்து விட்டு, பிரிதொரு நாள் நண்பனை அழைத்து பேசும்போது நேற்று இரவு தான் கடைசியாக பேசியது போன்று பேச்சு தொடர்வதற்கு நாமும் நண்பனும் மட்டும் அல்ல நட்பும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதுபோன்று விரலிலிருக்கும் எண்ணிக்கைக்கு நிகராகவாவது நண்பர்களை சம்பாதிதிருக்கிறேனா என்று அறிகிலேன். பள்ளி, கல்லூரி போன்ற நட்புகள் பணியிடத்தில் அமைவதில்லை. போட்டி பொறாமை பணிச்சுமை குடும்பம் குழந்தை என்று பல காரணங்கள் இருந்தாலும் ஒருவகையான் “in secured feeling” முக்கிய காரணியாகிவிடுகிறது. நமது வட்டத்தை சுருக்கிக்கொண்டு விடுகிறோம்.   Lifetime, evergreen அல்லது long-lasting பிரெண்ட்ஷிப் என்பது பணியிடத்தில் நடைமுறை சாத்தியமாற்றதாகிவிடுகிறது. அத்திபூத்தாற்  போல் அமைந்தாலும் அலுவலகம் குடும்பம் பிற உறவுகள் என்று சார்பு நிலையில் அந்த நட்பு வட்டத்திற்கு நம்மை adopt செய்துகொள்கிறோம்.பின் வினை தெரியாமல் பள்ளி கல்லூரியில் நண்பர்களிடம் பேசிய பேச்சுக்கள் இங்கே பெட்டிக்குள் முடக்கி வைக்கபடுகின்றன. வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டிதிருக்கிறது. “The countless words are getting counted now”. சுதந்திரமற்ற வார்த்தைகளில் கைதியாகி பல நேரங்களில் மௌனமாகிவிடுகிறோம். பழைய நண்பர்களின் தேடல் ஆரம்பமாகிறது. அதே கணத்திற்காக மனம் ஏங்குகிறது. கவலை மறந்து மனதை லேசாக்கும் பொக்கிஷமான படிமங்கள் அவை. Live Moments. 

எங்கோ படித்தது போல் வாழ்க்கை என்பது இலக்கு அல்ல. அது ஒரு பயணம்,. நம்மோடு சேர்ந்து பயணம் செய்து நமது பயணத்தை அர்த்தமுள்ளதாக்கி கொண்டிருப்பது நமது நண்பர்கள் தான்.  சிலர் அந்த பயணத்தில் இறங்கி கொள்ளாலாம். புதிதாக சேர்ந்து கொள்ளலாம். இறங்கிக்கொண்டது நண்பர்கள் மட்டுமே. ஆனல் அவர்களுக்கான என்னுடைய நட்பு என்னுடனேயே பயணித்துக்கொண்டிருக்கிறது. அறுபது எழுபது வயது தாத்தாக்கள் “வாடா போடா” என்று பேசிக்கொள்வதை பார்த்து பொறாமைபட்டிருக்கிறேன். முடிவற்ற உரையாடல்கள், பதில் தேவையற்ற கேள்விகள் என்று ஒரு தலைமுறைக்கான நட்பு அனிச்சையாக கண்முன்னே நிழலாடுகிறது. பால்யத்தில் இருந்து நட்பை இறுக்கப்பற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். பிழைப்பு தேடி வெளியிடம் செல்லும் நாம் அந்த பால்யகால நட்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான்.  தேடித்தேடி ஓய்ந்து இறுதியில் சோர்வாகி அகத்தனிமையுடன் உட்காரும்பொழுது மீதமிருக்கும் பயணத்தை கை பிடித்து இனிமையாக கூட்டி சென்று நம்மை மீட்டெடுப்பது அந்த நட்பு என்னும் ஆதார உணர்ச்சியே.. 

இன்றைய வாழ்க்கைச்சூழலில் அறுபதை தாண்டுவேணா என்பது முகத்தில் உறைந்திருக்கும் கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை காலவெள்ளத்தில் மிதந்து நான் கரை சேருவேனேயானால், எனக்காக காத்துக்கொண்டிருக்கும் அந்த நான்கு நண்பர்களை தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன். 

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை என்ற செய்தியை அவ்வளவு சுலபமாக கடந்து விட மனம் மறுக்கிறது. அதுவும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஓரிரு நாளாக அந்த அணையின் அருகே உட்கார்ந்திருக்கிறார்,. நீர் நிரம்பிய போது உவகையில் குதித்த அவர் உள்ளம், அந்த நீர் அணையை தாண்டாது தேங்கிய போது, வாடி துவண்டிருக்கிறது. சிறு பூனையை போல் அந்த அணையை அவர் சுற்றி சுற்றி வந்திருக்கிறார். நீர் அணையை தாண்டாதா என்று குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். நாமெல்லாம் ஏழைகள். மழை பொய்த்து ஆற்றில் நீர் வராது போனால் உண்ணும் உணவிற்கு வழியில்லை. உன்னை நன்றாக படிக்க வைக்க முடியாது” என்று தனது மகளிடம் வருந்தியிருக்கிறது அவரது மனம்  செய்தி குறிப்பில் அவரது வீட்டை காட்டிய போது, அழுக்கு படிந்த காரை சுவர்கள், எந்த ஒரு ஆடம்பர உபகரணமும் இல்லாது வெறிச் என்றிருக்கிறது. வீட்டில் உள்ள பெண்ணிடம் மஞ்சள் கயிறு மட்டும் கழுத்தில் தொங்க காது மூளியாக இருக்கிறது. . ஊருக்கே உணவிடும் விவசாயி ஏழை என்றால், அவனிடம் வாங்கி உண்ணும் நாம் யார் ? ஒருவேளை பிச்சைக்காரன் என்பதிற்கு அகராதியில் பணக்காரன் என்று ஞாபக படுத்தி வைத்திருக்கிறோமோ? வாங்கும் அளவிற்கு சக்தி இருப்பதனால் மட்டுமே எல்லாம் கிடைத்து விடுவதில்லை என்பதை எல்லோரும் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அவனது நிலையை உயர்த்தாது நாம் மட்டும் உயர்ந்து கொண்டிருப்பது பொருளாதார வளர்ச்சி இல்லை. பகல் கொள்ளை. பசித்தவனிடமிருந்து பிடுங்கி தின்னும் வழிப்பறி. தானும் மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியை தன்னை சார்ந்தவனுக்கும் உணர வைப்பதே முழுமையான வாழ்க்கை,. Every Human is a dependant animal என்பதை நாம் நாகரீகம் என்ற பெயரில் மறந்துவிட்டோம். அந்த விவசாயியின் தற்கொலைக்கு தடுப்பணை மட்டுமே காரணமில்லை. மண்ணில் விளையும் உணவை உண்ணும் ஒவ்வொரும் மனிதனிடமும் அந்த பாவக்கணக்கு ஏறிக்கொண்டே இருக்கிறது. உண்ணும் உணவும்‌, கசந்து கொண்டே இருக்கிறது. 

எ.மா.ச.வா? என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உடுமலை சாதிக்கொலை. அதுவும் நடுப்பகலில். நடுரோட்டில்.திருமணமான உடனோ அல்லது மறுநாளோ அல்ல. கிட்டதட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு. திருமணமாகி பல நாட்கள் தான் கழிந்து விட்டதே. இனிமேல் பிரச்சினை படிப்படியாக குறையும் என்று நம்பிக்கையுடன் இருந்தோம் என்று கூறியிருக்கிறார் இறந்தவரின் மனைவி. எட்டு மாதங்களாக இந்த திருமணத்தை சாதியை முன்னிட்டு ஏற்றுக்கொள்ளாது ஒவ்வொரு நாளும் வன்மத்துடன் வெந்துகொண்டிருந்த உறவினர்களின் மன நிலையை நினைத்து பார்க்கையில் மிகவும் அருவருப்பாயிருக்கிறது. ஜீரணிக்க முடியாத ஒன்றை உடல் எவ்வாறு தூக்கி எரிகிறதோ அதுபோல முற்றிலுமாக சமுகதிலிருந்து களையெடுக்கப்படவேண்டிய ஒன்று சாதி. ஒரு சமூகத்தின் (தமிழ்) பிரதிநிதியாக இருக்கும் ஒரு பெண்ணின் நம்பிக்கையை அணு அணுவாக சிதைத்த பங்கு நாம் எல்லோருக்கும் உண்டு. 

தெரிந்தோ தெரியாமலோ நம் கைகள் ஓரத்தில் அந்த கரை ஒட்டியே இருக்கும். சாதிக்கு ஆதரவாக நான் எதுவும் செய்யவில்லையே என்று கை கழுவி ஒதுங்குவதும் சாதிக்கு ஆதரவாக செயல்பட்டவரின் செய்கையை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதும் ஒன்றே. போதாக்குறைக்கு இரும்புக்கரம் கொண்டு சாதியை ஒடுக்க வேண்டிய அரசோ கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தை வைத்து அரசியலாக்கி ஆதாயம் தேடி அதில் ஒரு நாலு ஓட்டு தேற்றிவிட கட்சிகள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இறந்தவரின் உடலை தங்கள் வீட்டில் வைத்து துக்கம்  அனுசரிக்க கூட அனுமதியாத காவல் துறை, உடலை வலுக்கட்டாயமாக கைபற்றி நாடு இரவில் எரித்திருக்கிறது. மருத்துவமனை வளாகத்தை தாண்டி செல்லும் ஆம்புலன்ஸின் புறத்தே ஒரு மீடியாவின் காமிராமேன் ஓடிக்கொண்டே காமிராவை மட்டும் தூக்கி காண்ணாடி வழியாக ஃபோகஸ் செய்கிறார். அதில் என்ன காட்சியை படம்பிடித்து உலகுக்கு உணர்த்த போகிறார் என்று தெரியவில்லை. இது எல்லாமே We are not interested, but just curious” என்பதையே மீண்டும் மீண்டும் உணர்க்திக்கொண்டிருக்கிறது.


மதியம் சாப்பாடு முடிச்சிட்டு ஹாயா சேர்ல சாஞ்சிட்டு அந்த ஓரடி ஸ்கேல வச்சிட்டு முதுகு சொறிஞ்ச சமயம் பார்த்து மேனேஜர் வந்து கேட்டாரு.
என்னது? நீ முதுகு சொறிஞ்சத பாத்ததுக்கு அப்புறமும் அந்த ஸ்கேல கேட்டாரா?
சீ. சீ. அத கேட்டா கூட குடுத்துடலாமே.
பின்ன?
கொடுத்த வேலய முடிச்சிட்டியானு கேட்டாரு.
முடிச்சிட்டியா?
இல்லையே?
என்ன பண்ணின?\
நானா? அவ்வையாறு, மாமியாருக்கு அட்வைஸ் சொல்லிருக்காரு. அத பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.
என்ன உளர்ர? அவ்வயாறு எப்போ மாமியாரா பத்தி பேசினாரு?
பேசிருக்காரே?
அதான் எப்டின்றேன்?
நீ அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது பாட்டு கேட்டிருக்கியா?
ஆமா. முருகராண்ட பாடிகாமிப்பாரே. அதா?
ஆமா. அதேதான்.  அதுல கொடிது கொடிதுனு ஒரு லிஸ்ட் வருமே? ஞாபகம் இருக்குதா?
எனக்கா? டங்கா மாரி பாட்டு வேணா கேளு சொல்றேன்.
சரி நானே சொல்றேன் கேளு. 
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.
அந்த லிஸ்ட்ல பாத்தேன்னா, முதல்ல வறுமை, அதவிட மோசம் இளமையில் வறுமை, அதையும் விட மோசம் குணப்படுத்த முடியாத தொழு நோய், அப்புறம் அன்பில்லா பெண்கள், அப்டின்னு வரிசையா சொல்லிட்டு இதெல்லாத்தையும் விட மோசம் அந்த அன்பில்லாத பெண்கள் கையில சாப்பிடுறது னு முடிக்கிறார்.

ஆமாப்பா. அவ்வையார் சொல்றது கரெக்டு தான். திட்டிட்டே சாப்பாடு போட்ரவட்ட எவன் குடும்பம் நடத்துறது. .
அதில்ல அர்த்தம்.
பின்ன?
உனக்கு பாசமா சமைச்சு போட்றவங்க கிட்ட மனசு கோனாமா நடந்துக்கணும். இல்லேன்னா இந்த கழிசடை ஜென்மத்துக்கெல்லாம் வடிச்சு கொட்டனுமே திட்டிக்கிட்டே சாப்பாடு போடுவாங்க. அத உக்காந்து சாப்பாடுற கீழ்தரமான நிலைக்கு நம்ம ஆளாக்கக்கூடாது னு சொல்றார்.
ஓ....ஆனா இது எல்லா பொண்ணுங்களுக்கும் பொருந்துமே.
எல்லா பொண்ணுங்களும் கடைசில மாமியார்தானே?
ஓ.....இப்டிதான் அர்த்தம் பன்னிக்கணுமா?
வேற எப்டி?....இப்டிதான்ன்ன்ன் அர்த்தம் பன்னிக்கணும்.


ஸ்டார் விஜய் நைய்யாண்டி தர்பார் தொடங்கியபோது, யூகி சேதுவை பரிச்சயபடுத்தியது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு டாக் ஷோ அல்ல்து கரண்ட் அப்ஃபைர்சில் கலாய்த்தல், ஒரு பி‌ஜி‌எம் மியூசிக் குழு என்று வித்தியாசமான கான்செப்டில் கவர்ந்திழுத்தவர். வார்த்தை ஜித்தர். ரசிக்கும்படியான சிலேடை, அனாயாசமான பேச்சு என்று ஆயிரம் வாலாவாக வெடித்தவரை அதன் பிறகு அதிகமாக காணவில்லை. நிரம்ப நாள் கழித்து நேற்று காபி வித் டி‌டி ப்ரோக்ராமில் பிரதாப் போத்தனுடன் விருந்தினராக கலந்து கொண்டார். ஷோவை தனது அடுக்குமொழி பேச்சால் கலகலக்க வைத்தார். மிகப்பெரிய ஆளுமையாக கொண்டாடப்பட்ட பிரதாப் போத்தனால் சேது அளவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. Non Expressive. ஒரு வேளை அவரது படங்கள் அதிக  Expressive ஆக இருந்த காரணம் இருக்கலாம். 

ரேபிட் பயர் ரவுண்டில், ராதிகா என்றால் கொச்சைத்தமிழ், ராதா என்றால் Born Beauty மற்றும் ஸ்ரீப்ரியாவை, ஆண்கள் வரிசையில் நின்று காதல் சொல்லவைக்கும் அழகு என்று தனது ஸ்டைலில் பட படவென்று தெறிக்க வைத்தார். பிரதாப் போத்தன், தான் சிறு வயதில் கொஞ்சம் வைல்டு என்று சொன்னதும், ஆமா மைல்டா வைல்டு என்று ரைமிங் கட்டி கலங்கடித்தார். பாலசந்தர் பற்றிய கேள்விக்கு தன் பேனாவால் பெண்மைய்யை பற்றி எழுதி எழுதி தன் ஆண்மையை நிலை நாட்டியவர் என்றும், அஜித்தை பற்றிய கேள்விக்கு,’ Why don’t you love cinema?’ என்று பொட்டில் அடித்தார் போல் பதில் கூறியதும், அக்னி நட்சத்திரம் ரீமேக் பற்றிய கேள்விக்கு, அதை தொந்தரவு செய்ய வேண்டாம், A Perfect Film which has got Frozen in Time” என்று பழைய நைய்யாண்டி தர்பார் யூகி சேதுவாக பரிமளித்தார். டென்னிஸில் பல நாட்டு வீரர்கள் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் மகேஷ் பூபதியின் ட்ராப் ஷாட் மிக பிரபலம். ‘Killer’ என்று ஒருமுறை பெடெரரால் பாராட்டபட்டவர். மாய்ந்து மாய்ந்து தேடினாலும் யூட்யூபில் பூபதியின் வீடியோ கிடைப்பதில்லை. போலவே இந்த யூகி சேதுவின் நிலையும். நையாண்டி தர்பாருக்கு பிறகு ஒரு அற்புதமான டாக் ஷோ கலைஞனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டோம். அவருக்கென்று தனியொரு ப்ரோக்ராமை ஸ்டார் விஜய் ஏற்பாடு செய்யும் என்றே தோன்றுகிறது. அல்லது இந்த காபி வித் டி‌டி ப்ரோக்ராமையே யூகி சேதுவுக்கு கொடுத்தால் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சுவார். 

நேற்றைய நீயா நானாவில்...

தனிக்குடித்தனமா அல்லது கூட்டுக்குடித்தனமா என்ற தலைப்பில், தனிக்குடித்தனத்தில் இன்றைய நவ நாகரீக கன்னிகள் ஒரு புறம் மற்றும் இரு தலைமுறை அனுபவம் உள்ள மாமியார்கள் எதிர்புறத்தில். ஷோவின் ஆரம்பித்திலேயே கோபிநாத் முடுக்கிவிட்ட உங்கள் திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்பு என்ன?’ என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களின் ஆசைகள் தொண்ணூறு சதவீதம் நடைமுறைக்கு அப்பாற்பட்டே இருந்தன.  முழுக்க முழுக்க கனவுத்தொழிற்சாலை என்றழைக்கப்படும் சினிமாவை போன்றே தங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எதிபார்ப்பு திகிலையே தருகிறது. கிராமத்து பின்புலம் சார்ந்த பெண்களாவது பரவாயில்லை, எக்ஸ்போஷர் கம்மியென்று அவர்களை கனவு காணவிடலாம். நகரத்தில் வாழும் பெண்கள் கூட ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்ம்ம்ம்ம் என்ற ஜிங்கில்ஸ்க்கு பிறகு செட்டையே கலைத்துவிட்டு அடுத்த ஷூட்டிங்கிற்கு தயாராகும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை சாத்தியம் என்று எவ்வாறு கனவு காண்கிறார்கள் என்ற விஷயம் புரிபடவில்லை. அதிலும் சில பெண்கள் சில்லுனு ஒரு காதல் மாதிரியான வாழ்க்கை, ஆர்யா போன்ற ஃப்ரெண்ட்லியான ஹஸ்பண்ட், ஏதேனும் ஆர்.ஜே போன்ற செலிப்ரிடியுடனான வாழ்க்கை என்று சொல்ல கேட்டு மயக்கம் வராத குறைதான். காலையில் ஒரு ஹக், ஈவினிங் ஒரு ஹக், ஃப்ரைடே கம்பல்சரி அவுட்டிங்க், ஃபோர்ஹெட்டில் கிஸ், அலுவலகத்துக்கு பிக்கப் மற்றும் டிராப் செய்யும்பொழுது பை டார்லிங்க் என்று சொல்லிக்கொள்ளும் கியூட் ஃபீலிங்க் (மண்டையை பிளக்கும் வெயில் மற்றும் டிராபிக் ஊசலாட்டத்தில்), இவை எல்லாமே நித்தமும் நடக்கவேண்டுமென்று என்று சினிமாவை பார்த்து பார்த்தே ஒரு கோட் புக் எழுதி வைத்துள்ளார்கள்.  குறிக்கோள்  நூறு சதவீதம் இருந்தால்தான் எண்பது சதவீதத்தையாவது எட்டலாம் என்ற வாதம் சரிதான் என்றாலும், தங்களுடைய கனவு வாழ்க்கை எதிர்ப்பார்த்தது போல் நிறைவேறாத பட்சத்தில் நிதர்சனத்தை ஏற்று கொண்டு  அனுசரித்து செல்லும் பக்குவம் பெண்களிடத்தில் ஏன், இருபாலரிடமுமே குறைந்துகொண்டே வருகிறது தற்போது வெட்டவெளிச்சமாகிறது. விவேக் ஒரு படத்தில் சொல்வதை போல, லாங் ஷாட்டில் கைகோர்த்து கடற்கரையில் காதலர்கள் செல்வதுடன் எண்ட் கார்ட் போட்டு படம் முடிகிறது. ஆனால் அதன் பின் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டத்தை இயக்குனர் சொல்ல மறந்துவிட்டார் என்பதே நிஜ வாழ்க்கை. .

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன மாமியார்களிடத்தில் கோபிநாத் கேட்க, வயிறெரிந்து மண் தூற்றி சாபம் விடாத குறைதான். இவர்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகக்கூடாது என்ற விதத்திலேயே பல மாமியார்களின் பதில் இருந்தது. ஒருவாராக தனிக்குடித்தனத்திற்கான எதிர்ப்பு ஏன் என்ற கேள்விக்கு ஒட்டுமொத்த மாமியார்கள் அனைவருமே, தங்கள் பைய்யனை மருமகள் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாள் என்ற காரணத்தையே முன் வைத்தனர். சில மாமியார்கள் எதிர்புறத்தில் அமர்ந்திருந்த இளம் பெண்களின் கோரிக்கைகள் நியாயமாகத்தான் தெரிகிறது என்றதுமே, கோபிநாத், மாமியார்கள் முன்பு போல் இல்லை. இப்போதெல்லாம் இறங்கிவருகின்றனர், விட்டுக்கொடுக்கின்றனர். என்ற கைத்தட்டலை பரிசாக கொடுக்க, மாமியார்களின் ரியாக்க்ஷனை பார்த்தால், அவ்வாறு தெரியாவில்லை. இருங்கடி, எப்படியும் எங்க வீட்டுக்கு மருமகளா வராமையா போய்டுவீங்க. அப்போ பாத்துக்கலாம் என்று புலி பதுங்குவது பாய்வதற்காகவே எனும் ரேஞ்சிலேயே அவர்கள் முக மற்றும் மனோபாவம் இருந்தது.

ஆண்டாண்டு காலமாக மணமாகிய பெண்கள் பிறந்த வீட்டை பிரிந்து, புகுந்த வீட்டுக்கு சென்று, அங்குள்ள புதுப்புது மனிதர்களுடன் பழகி சகித்துக்கொண்டு ஒரு ஆணாதிக்க சமூகத்தின் வாழ்க்கையை கழித்ததற்கான ஒரு பழி வாங்கும் படலமாகவே தனிக்குடித்தனம் என்ற ஆயுதத்தை, பெண்கள் சமூகம் கையில் எடுத்துள்ளதோ என்ற கேள்வி தொக்கி நின்றதை தவிர்க்க முடியவில்லை


எது எப்படியோ, நாளை திருமணமாக காத்திருக்கும் புது மாப்பிள்ளைகளான இன்றைய பேச்சிலர் சிங்கங்கள், இருதலை கொல்லி எறும்பாய் தவிக்க போவதை நினைக்கும் போது சற்றே கண்கள் வேர்க்கிறது. 

பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். சாமி பட சூட்டிங். திருநெல்வேலி முழுவது அதகளப்படுத்தியிருந்தார்கள்.  டேய், விக்ரம சுமோல பாத்தேன். ஹைகிரவுண்ட் ரவுண்டானால அருவா வச்சிட்டு சண்ட போட்றாணுங்க, சோடா பாட்டில் பறக்குது. கிறிஸ்துராஜா ஸ்கூல்ல தான் விவேக் காமெடி எடுக்குறாங்க. வெள்ள வெள்ளெனு இருக்கான்ல. இப்படி ஏகத்துக்கு உசுப்பேத்தல். போதாக்குறைக்கு த்ரிஷா வேறு ஷூட்டிங்கில் இருப்பதாக பெட்ரோல் ஊற்றினார்கள்.

என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்ததில், சயின்ஸ் சென்டர் எக்சிபிஷன் ஞாபகம் வந்தது. நானும் நண்பனும் நேராக பிசிக்ஸ் வாத்தியாரான சாத்ரக் சாரிடம் சென்றோம்.

சார், சயின்ஸ் சென்டர்ல ஒரு ப்ரோக்ராம் போட்டுருக்காங்க. நாங்க ரெண்டு பேரு போயி பாத்துட்டு நம்ம ஸ்டூடண்ட்ஸ்க்கு ஓகேவா இல்லையானு செக் பன்னிட்டு டிக்கட் எவ்ளோனு விசாரிச்சிட்டு வரோம் சார். என்றோம்.

இவனுங்க பெரிய விஞ்ஞாஞி. அப்படியே விசாரிச்சு கிழிச்சிட்டாலும்.?’ என்று இழுத்தார்.

சார், ப்ளீஸ் சார்.

டேய். ஏதோ பிளான் போடுட்டீங்க. போயி தொலைங்கலே. என்று தண்ணி தெளித்து விட்டார்.

நண்பனின் XL சூப்பரில் புல்லட் போல பறந்து நேராக மார்க்கெட் நோக்கி ஒட்டினோம்.

நண்பன்,’ டேய் அவங்க ராஜா டவர்ஸ்ல தான் தங்கிருக்காங்க. நான் கூட்டிட்டு போறேன். அங்க போயி பாத்துக்கலாம் என்றான்.

வண்டியை நிப்பாட்டி ஐந்து நிமிடம் அவனை பாராட்டி அடுத்த பத்தாவது நிமிடத்தில் ராஜா டவர்ஸ்.

ரிசெப்ஷன் என்று எதுவும் இருந்ததாக ஞாபகம் இல்லை. நேராக லிஃப்டில் சென்று, எந்த ப்ளோர் டா?’

மூணாவது. கிங் சூட்ல விக்ரம். க்வீன் சூட்ல த்ரிஷா.

எப்பூடி ட இப்படி?’

நேத்துதாண்டா பசங்க பாதுட்டு வந்து சொன்னாங்க.

லிஃப்டில் இருந்து இறங்கிய பிறகு நேராக கிங் சூட் நோக்கி நடந்தோம். ஆனால் தெரியவில்லை.

ஒரு ரூம் திறந்திருந்தது. கொஞ்சம் பேர் சீட் ஆடிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்து, சார், விக்ரம் சார் இருக்குற கிங் சூட் எங்கே இருக்கு?’

நேர போய் லெப்ட்ல திரும்புங்க.

தேங்க்ஸ் என்று சொல்லி பத்து தப்படிகள் நடந்தபொழுது,

தம்பி, நில்லுங்க ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க  இங்க என்ன பண்றீங்க.?’

சற்றும் எதிர்ப்பார்க்காத தோரணையில் நண்பன், எங்க அப்பா டி.எஸ்.பி. மெட்ராஸ்ல தான் இருக்கார். விக்ரம் சார் எங்க அப்பா ரொம்ப ஃப்ரெண்ட். அதான் பாத்துட்டு வர சொன்னார். என்றான்.

, அப்பிடியா?, சரி போங்க.

ரூமை விட்டு வெளியே வந்து நண்பனின் சம்யோஜிதத்தை மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் பாராட்டி, கிங் சூட்டை நோக்கி நடந்தோம்.

இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் விக்ரமுடன் ஒரு ஆட்டோக்ராப், ஒரு போட்டோக்ராப், கைகுலுக்கல் போன்ற வரலாற்று நிகழ்வுகளெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டே கிங் சூட்டை அடைந்து கதவை தட்டும் நேரத்தில், நண்பன் ‘The seven Habits of Highly effective People’ புக்கை படித்தது போல சொன்னான்.

டேய், அவங்க சூட்டிங்க்லாம் போய்ட்டு வந்து டயர்டா இருப்பாங்க. இப்போ கதவ தட்டி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவங்க வெளில வரட்டும் என்றான்.

இவ்ளோ தூரம் வந்தாச்சு இனிமே என்னடா?. காதவ தட்டிடலாம். விக்ரம் குரல் கூட கேக்குது.

அதெல்லாம் வேண்டாம்.

தட்டப்போன கையை பிடித்து நிறுத்தி, இப்படியே ஒரு ஐந்து நிமிடம் வியாக்யானம் பேச, ஹோட்டல் சிப்பந்தி வந்தான்.

தம்பி, கீழ போங்க. இங்க நீக்காதீங்க.

நண்பன், மெட்ராஸ்ல எங்க அப்பா டி.எஸ்.பி என்றதும்,

தம்பி, நீங்களா போறீங்களா? இல்ல செக்யூரிடிய கூப்டனுமா?’ என்றதும் தலையை தொங்க போட்டுக்கொண்டே கீழிறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

வண்டியை ஸ்டார்ட் பன்னும்போது கூட டேய் அவங்க டயர்டா இருப்பாங்க. டிஸ்டர்ப் பண்ண கூடாதுடா என்றான், சீரியசாக, மீண்டும்.

அண்ணல் காந்தியடிகளின் வழி பற்றி போற்றி நடக்கும் அந்த அன்பிற்குரிய தன்மானச்சிங்கம் திரு  ,அவர்களே.
Total Pageviews

Popular Posts

Archive

Follow by Email

Most Read