ஈரானிய மற்றும் கொரிய மொழிப்படங்களுக்கு எப்பொழுதுமே உலக சினிமா வரிசையில் தனி அங்கீகாரம் உண்டு. அந்த வரிசையில் மஜீத் இயக்கிய ‘Children of Heaven’ என்ற ஒரு படம் போதும், ஈரானிய படங்களாகத்தேடித்தேடி பார்க்க வைக்க. எடுத்தாளப்பட்டிருக்கும் கரு மிக எளிமையானது. தவறுதலாக தன் தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்துவிடுகிறான். அண்ணன் தங்கை இருவரும் இத்தவறை ஏழையான தங்கள் அப்பாவிடமிருந்து சாதுரியமாக மறைத்து எப்படி அன்பை... பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதை படு சுவாரசியாமாக சொல்கிறார் மஜீத். 

 


முதல் காட்சியிலேயே கதைக்கு வந்துவிடுகிறார் இயக்குனர். ஷூவை தைக்கப்போகும் இடத்தில், அலி (அண்ணன்) அதை தொலைத்துவிடுகிறான். வீட்டிற்கு வரும் அலியிடம் சாரா (தங்கை) தன் ஷூவை கேட்கிறாள். தொலைந்துவிட்டது என்பதை நம்ப மறுக்கிறாள். தந்தையிடம் சொல்லாதே, இந்த மாதம் அப்பாவிடம் பணம் போதவில்லை என்று அலி கெஞ்சுகிறான். அலி தன்னுடைய ஷூவை வைத்து இரண்டு பேரும் சமாளித்துக்கொள்ளலாம் என்று தைரியம் அளிக்கிறான். இந்த உரையாடல் முழுவதுமே தங்கள் எதிரில் உட்கார்ந்திருக்கும் பெற்றோருக்கு தெரியாமல் நோட்டில் மாற்றி மாற்றி எழுதி பேசிக்கொள்கின்றனர்.

காலையில் பள்ளிக்கூடம் செல்லும் சாரா, அலியின் அழுக்கான ஷூவைப்போட தயங்குகிறாள். வேறு வழியில்லாமல் அதை போட்டு பள்ளிக்கு செல்கிறாள். பள்ளி முடிந்ததும் வேகுவேகமாக ஓடி வந்து ஷூவை காத்துக்கொண்டிருக்கும் அலியிடம் கொடுக்கிறாள். ‘ஏன் தாமதம்?’ என்று அண்ணன் கேட்க, ‘முட்டாள், நான் மூச்சிறைக்க வேகமாக ஓடி வந்தேன்’ என்கிறாள் சாரா. தாமதமாக பள்ளிக்கு செல்லும் அலி, தலைமையாசிரியரால் கண்டிக்கப்படுகிறான்.

இதற்கிடையில் தன் பள்ளியில் பிரேயர் அஸ்ஸெம்ப்ளியின் போது ஒரு மாணவி தன் தொலைந்துபோன ஷூவை அணிந்திருப்பதை சாரா பார்த்துவிடுகிறாள். பள்ளி முடிந்ததும் அவள் பின்னே சென்று அவள் வீட்டை கண்டுபிடிக்கிறாள். அடுத்த நாள் தன் அண்ணன் அலியுடன் அந்த வீட்டிற்கு வருகிறாள். அந்த பெண்ணின் தந்தை பார்வையற்றவர் என்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிடுகின்றனர். ஒன்றும் பேசாமல் குழந்தைகள் திரும்பிவிடுகின்றனர்.

ஒரு மராத்தான் ஒட்டப்பந்தைய போட்டியில் மூன்றாவது பரிசாக ஷூ அறிவிக்கப்படுகிறது. தங்கைக்கு எப்பாடு பட்டெனும் அந்த ஷூவை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று அலி அந்தப்போட்டடியில் கலந்து கொள்கிறான். பாதி தூரம் கடந்து சோர்ந்து விடும் நேரத்தில், ஒரே ஷூவை வைத்து இரண்டு பேரும் சமாளிக்கும் போது தங்கை வேகுவேகமாக ஓடி வந்தது வாய்ஸ் ஓவரில் ஞாபகம் வருகிறது. பிறகென்ன? உத்வேகத்துடன் ஓடி மராத்தானில் முதல் பரிசை வென்று விடுகின்றான். மூன்றாவதாக வந்து ஷூவை வெல்லாதது அவனுக்கு மிகுந்த துக்கத்தை அளிக்கிறது. சந்தையில் இருந்து வீட்டிற்கு பொருட்களை வாங்கி வரும் அவன் அப்பா, அலி சாரா இருவருக்குமே ஒரு ஷூவை வாங்கி வருகிறார். இது தெரியாது வீட்டிற்கு வரும் அலி, முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டே சாராவிடம் வருகிறான். சாரா ஏமாற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி விடுகிறாள். மராத்தானில் ஓடி புண்ணான கால்களுடன் குளத்தில் காலை வைக்கிறான். மீன்கள் கடிக்க ஆரம்பிப்பதுடன் படம் நிறைவடைகிறது.

ஒரே ஒரு அறை மட்டுமே கொண்டது அலி, சாராவின் வீடு. மூன்றாவதாக ஒரு குழந்தையை பெற்றடுத்து பலவீனமாக இருக்கும் தன் அம்மாவிற்கு சாரா அனைத்து உதவிகளையும் செய்கிறாள்.

படம் முழுவதும் குழந்தைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். சந்து, பொந்து, தெரு, சாலை, வீட்டிற்குள் என்று எல்லா இடத்திலும் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். எங்கேனும் வாகனத்தில் முட்டி விழுந்து கதையை டிராஜேடியாக மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. நல்லவேளை அவ்வாறு ஒன்றும் ஏற்படவில்லை.

குடும்பத்தில் வறுமை என்று காமித்தாலும் பார்ப்பவர்களை அழுது மூக்கு சிந்தவைக்கவில்லை. மாறாக நெகிழ வைக்கின்றனர்.

குழந்தைகள் ஒரு முறை போட்ட உடையை மீண்டும் உடுத்துவது ரசிக்கத்தக்க யதார்த்தமாகத்தெரிகிறது. பல காட்சிகள் கவிதைத்துவம்.

இரு குழந்தைகளின் பரிபாஷானைகள் ஏதோ இரண்டு கடவுள் பேசிக்கொள்வது போல் அன்பை கொட்டி கொட்டி காமிக்கிறது.

படத்தில் அந்த சிறுவயதிலேயே அண்ணன் தன் தங்கையிடம் காமிக்கும் பாசம் நெகிழ்ச்சி, குழந்தைகளின் அப்பாவித்தனம், பரிசுத்தமான அன்பு என அனைத்துமே நம்மை பால்யத்துக்கு அழைத்து செல்கின்றன அல்லது ஏங்க வைக்கின்றன. இதற்காவே மூன்று நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து பார்த்து கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read