மற்றைய கம்பெனிகளுக்கு அப்ளை செய்து காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில், மத்தியாகைலாஷ் கோவிலில் நடுநாயகமாக வீற்றிருக்கும் பிள்ளையாரிடம் சென்று வேண்டும் போதெல்லாம், ‘சாமி உன்னை நான் இதுக்கப்புறம் பாக்கக்கூடாது. இந்த கோவிலுக்கு வரக்கூடாது. நான் சென்னைலயே இருக்கக்கூடாது’ என்று தான் வேண்டிக்கொண்டேன். அப்பாய்ண்ட்மண்ட் ஆர்டர் அடித்தாரோ இல்லையோ, ஒரே போடாக நாக்பூருக்கும், குஜராத்திற்கும் தூக்கி அடித்தார். சென்னை வந்த புதிதில் ‘சென்னைலாம் ஒரு ஊராடா? எப்டித்தான் குப்பை கொட்டுரானுங்களோ?’ என்ற நண்பனிடம் மல்லுகட்டிய பிளாஷ்பேக் கொசுவார்த்து சுருளாக விரிந்தது. ஹோம்ஸிக்காகி, காலை உணவாக ஆலு சமோசாவை ஈஸ்ட்மன் கலர் சட்னியில் முக்கிச்சாப்பிட பழகி, மதிய உணவில் அரைகிலோ வெல்லம் கலந்த சாம்பாரை (குஜராத் ஸ்டைல் !!! ) ஊற்றி குழப்பியடித்து, இரவில் வரட்டி போன்ற ரொட்டியுடன் மிளகாய் ஊறுகாய் என்று தொட்டு சாப்பிட்டு பசியை போக்க முயற்சித்ததில் செலவே இல்லாமல் உடல் எடை குறைந்து வாடி வதங்கி, ‘இட்லி, சட்னி என்று புலம்பி மயங்கி விழுந்த போதுதான் மத்தியாகைலாஷ் பிள்ளையாரின் குசும்பைப்புரிந்துகொள்ள முடிந்தது. எங்கு நோக்கினும் சக்தியடா என்கிற பாணியில், எங்கு நோக்கிலும் எச்கிலடா என்பதுபோல் கையில் வைத்து பதமாக கசக்கிய கைனியை (சுபாரி) வாயில் அதக்கி துப்பிக்கொண்டே இருந்தனர். அசந்தால் மூஞ்சியில் கூட ஒரு ‘புளிச்’ விழலாம். குக்கரில் வைத்த அரிசி மற்றும் தேநீரைத்தவிர மற்ற எல்லா பதார்த்தங்களிலும் ஆலுவை (உருளை) கலந்து சமைத்து கலவரப்படுத்தினர். சுற்றிலும் ‘கியா?, அச்சா, டீக் ஹை, எய்சா ஹை கியா?’ என்று ஒரே ஹிந்தி மயம். சுந்தரத்தமிழ் காணவில்லை. தமிழோ தமிழ் சார்ந்த வஸ்து ஏதேனும் கண்ணில் பட்டால் மின்சார கம்பியை பார்த்து காலை தூக்கும் நாய் போல் உவகை பெருகியது. ஆச்சி மசாலாத்தூள் பாக்கெட்டை சூப்பர் மார்கெட்டில் பார்த்தது, வதோதரா ஸ்டேஷன் வாசலில் தினகரன் நாளிதழின் ஒரு துண்டு பறந்து போனதை பார்த்தது இவற்றில் அடங்கும். தமிழ்நாட்டில் 15 ரூபாய், வெளி மாநிலங்களில் 17 ரூபாய் என்ற போடப்பட்டிருந்த மாத இதழ்களை பார்க்கும்போதெல்லாம், இதெல்லாம் போயி மத்த ஸ்டேட்ல எவன் வாங்குவான்? என்று நினைத்து பின்னொருநாள் வதோதராவில் 17 ரூபாய் குடுத்து மாத இதழை வாங்கியபோது யாரோ தலையில் குட்டியது போன்றும் கண்ணின் ஓரத்தில் நீர் துளிர்த்தும் இருந்தது. ‘சாப்பிட்டியா?’ என்று கேட்கவோ,’ ஏலே மக்கா’ என்று தோளில் கை போட்டு பேசவோ ஆளில்லாது வாடித்தான் போனேன்.

ஹைபர்நேஷன் மோடில் இருந்த மத்திய கைலாஷ் பிள்ளையார் மீண்டும் கண்ணைத்திறக்க, ஒன்ஸ்மோர் சென்னை. MRTS ரயிலில் அதிகம் பயணம் செய்து (ஜனம் கம்மி) பழகியிருந்த எனக்கு தாம்பரம் பீச் வண்டியை பார்த்தாலே இரண்டு மாத கர்ப்பிணி போல் வயிற்றை புரட்டியது. அதுவும் சைதாபேட்டையில் எப்படித்தான் குடியிருக்கிறார்களோ என்று அங்கலாய்த்து அடுத்த ஒரே வருடத்தில் சைதாபேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் குடிபெயர்ந்து, தாம்பரம் பீச் வண்டியில் முதல் முறை ஏறி போனபோது மீண்டும் தலையில் குட்டி லார்ட் கணேஷா பேக்ரவுண்டில் சிரித்தார். காரணி கிராமம் என்றழைக்கப்பட்ட சைதையில், புராதனமான காரணீஸ்வரர் கோயில் போதும், சைதையை கெட்டியாக பிடித்து கொள்வதற்கு. எந்த ஒரு விழாவாகினும் சரி, விமரிசையாக, இல்லை இல்லை, மிக விமரிசையாக கொண்டாடுகிறார்கள். மாதந்தோறும் திருவிழா.

புத்தருக்கு போதி மரம் என்றால், சென்னைக்கு தாம்பரம் பீச் மின் தொடர் வண்டி. எத்தனை எத்தனை மனிதர்கள். எவ்வளவு பயணங்கள். விதவிதமான உணர்ச்சிகளை வெளிபடுத்தும் முகங்கள். பலதரப்பட்ட வர்க்கங்கள். ரயில் பயண நட்புகள். இன்னும் பல. ஒவ்வொரு நாளும் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு விஷயங்களை பொதிந்து வைத்துக்கொண்டு பறக்கிறது சபர்பன் மின் தொடர் வண்டி.
கைகளால் தடவிக்கொண்டே ரயில் பெட்டியில் சரியாக ஏறி, பாப்கார்ன், முறுக்கு, செல்போன், ரேஷன், பாஸ்போர்ட் கவர்கள், எர் பட்ஸ், விளையாட்டு பொம்மைகள், விசில், ஊக்கு, ஊசி, பாசி என்று விற்று பிழைக்கும் கண் தெரியாதவர்கள் போதும், நம்மிடம் நம்பிக்கை விதையை ஆழமாக ஊன்ற. கால்கள் முற்றிலும் செயலிழந்த் இளைஞனை நெல்லூர் வண்டியில் தினமும் பார்த்திருக்கிறேன். ஊனம் என்று கை ஏந்தாமல் ஒரு அழுக்கு துணியை வைத்துக்கொண்டு பெட்டி பெட்டியாக கைகளால் துடைத்து சுத்தம் செய்து முடிந்தால் கொடு என்று அடுத்த பெட்டிக்கு நகருகின்றான். கண் தெரியாத பல பேரை இன்றும் ராகதேவன் இளையாராஜா கௌரவமாக வாழ வைத்துக்கொண்டிருக்கிறார். எண்பதுகளின் மெலடி பாடல்களை இவர்கள் பாடும்போது தங்கள் பால்யத்தில் கரைந்து தொலைந்து விடும் 40+ ஆசாமிகள் தட்டில் அதிக காசுகளை போடுவதை கவனித்திருக்கிறேன்.

ஏறியது முதல் இறங்கும் வரை கொஞ்சம் கூட டிஸ்டர்ப் ஆகாது தூங்கியே பயணம் செய்யும் ஆசாமிகள், காலை ஐந்து மணிக்கே எழுந்து சமைத்து குழந்தைகளை வழியனுப்பி டிபன் பாக்ஸில் ரொப்பி எடுத்துக்கொண்டு ஈரமான கூந்தலை கூட துவட்ட நேரமில்லாது மூச்சிறைக்க ஓடி வரும் நடுவயது இல்லத்தரசிகள், ஐம்பது மணி நிமிட பயணத்தை கீரை ஆய்ந்தும், காய்கறி நறுக்கியும், பூ கட்டியும் உபயோகமாக செலவழிக்கும் பெண்கள், ஸ்ரீ தேவி மகாத்மியம், ரிக் வேதம், கந்தரனுபூதி என்று படித்து பாராயணம் செய்து வரும் ஐயராத்து மாமாக்கள், தூக்கவே முடியாத தலையணை போன்ற பேராசைக்காலஜி, ஹியூமன் அநாட்டமி புத்தகங்களை படித்து வரும் மருத்துவ மாணவர்கள், ரயிலில் தொடங்கி தண்டவாளத்தில் காதலை பலி கொடுக்கும் இளந்தாரிகள் எனப்பலபல ரகங்கள்.

எத்தனை கொடூரமான வெயிலையும் கூட சென்னை சமாளித்துவிடுகிறது. ஆனால் சிறிது அதிகமாக மழை பெய்தால் மட்டும் மூக்கொழுகுவது போன்று ஜல்ப் பிடித்துவிடுகிறது. அதனால் தான் என்னவோ சென்னை இரண்டே இரண்டு க்ளைமேட்டை மட்டும் தனதாக்கி கொள்கிறது. ஒன்று சம்மர். இன்னொன்று ஹாட் சம்மர். பத்து நாள் மட்டுமே மழை பெய்கிறது (இந்த வருட கணக்கு வேற) அந்த பத்து நாளிலும் கூட சாலையெல்லாம் குளம்போல் தேங்கி போட் விட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறது.
என்னோடு அலுவலகத்துக்கு ரயிலில் பயணம் செய்யும் ஒருவர், பார்க் ஸ்டேஷன் வந்தவுடனேயே, ‘ஹாரிபிள்’,’பேத்தடிக்’,’சாகடிக்கிறாணுங்க’ என்று புலம்பித்தள்ளிவிடுவார். வருடத்தின் 365 நாட்களும், நாள் தவறாது புலம்புவார். நாணையத்தின் இரு பக்கங்களைப்போல சென்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று பிதுங்கிவழியும் கூட்டம், மற்றொன்று வேர்வை நாற்றம் (அதிக ஹியுமிடிடி ஒரு காரணம்), இந்த இரண்டையும் சகித்துக்கொண்டோ, அலட்சியப்படுத்தியோ நம் பயணத்தை தொடர்ந்தோமானால் சென்னை ஒரு சொர்க்கம். இல்லையெனில் ஒவ்வொரு நாளும் நகரம் தான்.

நான் வேலைப்பார்த்த கட்டுமானத்தொழில் கற்றுக்கொடுத்தவை பல. வெறும் நூற்றி நாற்பது ரூபாய்க்கு பீஹார், ஒரிசா, பெங்கால் போன்ற மாநிலங்களிலிருந்து வந்து கொத்தடிமைகள் போல் வேலை செய்து, ஆறு மாதம் ஒரு வருடம் என்று குடும்பத்தை கூட பாராது இங்கேயே தங்கி தாங்களே சமைத்து, உண்டு, வெயில் மழை என்று பாராது புழுதியிலும் சகதியிலும் வேலை செய்து, சொச்ச சம்பளத்தில் இரண்டாயிரம் மூன்றாயிரம் என்று மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்புவதை பார்க்கும்பொழுது, நம் நிலையை நினைத்து நித்தம் நித்தம் இறைவனிடம் நன்றி கூறத்தோன்றுகிறது. அதுமட்டும் இல்லாது வேலை செய்யும் நாட்களில் ஏதேனும் நோய் தாக்கினாலோ, உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிர் இழந்தாலோ, உயரத்தில் இருந்து கீழே விழுந்து உடல் சிதறி இறந்துபோனாலோ, அடுத்த நாளே உடற்கூறு பரிசோதனை செய்து உடலை துண்டு துண்டாக்கி ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வெல்டிங் அடிக்க அவசரபடுத்துவார்கள். சிதை எரிந்த தணல் அடங்குவதற்கு முன்னரே வேலை ஆரம்பித்தாக வேண்டும். துக்கம் அனுஷ்டித்து ஆசுவாசப்படுத்துவதற்கு கூட நேரமில்லாது ஓட வேண்டும். உயிருக்கு சற்றேனும் மதிப்பில்லை. ஒரு மணி நேர வெயிலுக்கு வேர்வையும் களைப்பும் அடையும் பொழுது வெயில் மழை என்று பாராமல் புழுதி மணலில் அழுக்குடன் போராடும் கூலித்தொழிலாளர்களை நேர்கொள்ளும்போது தலை குனிந்து வெக்கம் கொள்ளச்செய்கின்றன.

நூறு பேர் கொண்ட குழுவில் இரண்டு மூன்று பேராவது அத்திபூத்தாற்போல் நல்லவர்கள் இருக்கிறார்கள். அருகில் இருந்தே குழிபறித்து புதைத்துவிட்டு மீண்டும் தோண்டி பார்த்து உயிர் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் மீதமிருக்கும் தொன்னூற்றியெழு பேருடன் இணைந்து இயங்கி வேலை பார்க்கும் சர்வைவல் டெக்னிக்கை கற்றுக்கொடுத்திருக்கிறது. தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்று நினைக்கும் குதர்க்கமானவர்களை பார்க்கும்பொழுதும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ரெட்டை நாக்கு கொண்டவர்களை பார்க்கும்பொழுதும் அருவருப்பை காட்டாது புன்சிரிப்புடன் அவ்விடத்தை கடந்துபோகும் முதிர்ச்சியை கற்றுத்தந்துள்ளது.

உண்மையான அன்பை காட்டும் அன்னையைத்தவிர மற்ற
எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்க முடிகின்ற சென்னையில் புத்தங்களுக்கும் பஞ்சமில்லை. எத்தனை புத்தகங்கள். எத்தனை எழுத்தாளர்கள். கடந்த ஆறு வருடத்தில் குறைந்தது ஐநூறு புத்தகங்களாவது கடந்திருக்கும், வலியை மறக்கவைக்கும் லாகிரி வஸ்துவாக, சந்தோஷத்தை ரெட்டிப்பு ஆக்குபவையாக, துக்கத்தை பகிர்ந்து கொண்டு பாதியாய் குறைப்பவையாக, உபதேசிக்கும் தந்தையாக, கற்றுக்கொடுக்கும் ஆசானாக, மடி மீது தலை வைத்து தூங்க முயற்சி செய்யும் காதலியாக, ஒரு மாலை நேர மழை நாளில் தேநீர் அருந்திக்கொண்டே அளவளாவி மனதை லேசாக்கும் உற்ற தோழனாக எத்தனை எத்தனயோ பாத்திரங்களை சுமந்து கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. புத்தகச்சந்தை, புத்தகத்திருவிழா என்று தேடித்தேடி படிப்பதற்கு ஊக்கப்படுத்தியிருக்கிறது.

வாத்தியார் சுஜாதா சொல்வதைப்போல் பெருநகரங்களில் ஒருவித அனானிமிட்டி கிடைக்கிறது. அது வெட்கத்தை விட்டொழித்து எல்லாவித சந்துஷ்டிகளையும் முயற்சி செய்து பார்ப்பதற்கோ, ஈடுபடுவதற்கோ தூண்டுகோலாக அமைகிறது. கடந்த ஆறு வருடங்களில் அதீத ஜனத்தொகை கொண்ட இந்த பெருநகரத்தில் முகவரி தெரியாதவனாய் தொலைந்து போவதில் உள்ள சுகம் அலாதியாகவும் அதிகமாகவும் ஆகிக்கொண்டே செல்கிறது. சென்னையின் மீதுள்ள காதலை மென்மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read