சம்பவம் நடந்த இடம் – சுப்ரியா ஆந்த்ரா மெஸ், TCS எதிரில், வேளச்சேரி.

சம்பவம் நடந்த நேரம் – 2008 இல் வெயில் கொளுத்தும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் ஒன்று முப்பது.
 


நான், பாண்டி மற்றும் ஒரு நண்பன்(இப்போதைக்கு ஒரு பேச்சுக்கு சிங்கம் என்று பேர்... வைத்துக்கொள்ளலாம்) தே.மு.தி.க. கட்சி பிரமுகர் ஒருவர் நடத்தும் M.S.மேன்ஷனில் ஒரே ரூமில் அடைக்கலாமாயிருந்தோம். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவரை சனி ஞாயிறு என்று இரண்டு நாள் விடுமுறை கிடைத்தது ஒரு வகையில் மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் அந்த இரண்டு நாட்களும் மதிய வேலை உணவுக்காக அல்லோலப்படும் சிரமம் ஒரு தனிக்கிளைக்கதை. காலை மற்றும் இரவு பக்கத்தில் இருக்கும் முருகலெக்ஷ்மி அல்லது சக்தி மெஸ் அபயமளித்தது. ‘பரோட்டா சூடா இருக்கா?’ என்ற முருகலெக்ஷ்மி மெஸ்ஸில் கேட்ட கேள்வியை பாண்டி மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த மதியவேளை புல் மீல்ஸ் சாப்பிடுவதுதான் ஒரு பெரிய அறப்போராட்டம்(!!!). நாங்கள் தங்கியிருந்த தரமணியில் (சரியாக சொல்லவேண்டும் என்றால் கானகம்) நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ ஒரு 360 டிகிரி என்று எந்த பக்கம் திரும்பிபார்த்தாலும் பேருந்து நிலையத்திற்கோ இந்திரா நகர் MRTS ஸ்டேஷன் போவதற்கோ குறைந்தது இரண்டு கிலோமீட்டர் நடந்தே ஆகவேண்டும். வண்டி கிடையாது. அதுவும் சாயங்கால வேலையென்றால் பராக்கு பார்த்துக்கொண்டே வேர்க்கடலை சாப்பிட்டுவிட்டு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடக்கும் ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டே நடந்து விடலாம். எனினும் சுட்டெரிக்கும் மதிய வேளையில் சற்றே சிரமம் தான். இந்திரா நகர் MRTS ஸ்டேஷனுக்கான ஓவர் பிரிட்ஜில் ஒரு முறை ‘MGR இல்லைங்க நம்பியாரு இல்லைங்க நாங்களெல்லாம் நடுவில’ என்று ஒரு பாடலை ஜீவா மற்றும் குழுவினர் கம்பியை பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். ‘யுத்தம் செய்’ படத்தில் சேரன் ஒரு பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சண்டைக்காட்சி எடுக்கப்பட்டதும் இதே பிரிட்ஜ் தான் என்பது இதன் தனிச்சிறப்பு. நிற்க!!!

40 டிகிரி வெயிலில் குடைபிடித்து நடந்து ஸ்டேஷன் வந்து டிக்கெட் எடுத்து (கவனிக்க) பின்பு பெருங்குடி ஸ்டேஷனில் இறங்கி மீண்டும் ஒரு கிலோமீட்டர் நடந்து வெளேச்சரி மெயின் ரோட்டை கிராஸ் செய்தால் நான் முன்பு அடிகோடிட்ட சுப்ரியா மெஸ். ஒரு சாப்பாட்டிற்கு இத்தனை அக்கப்போரா என்றால் உரக்க சொல்வேன். ஆமாம்.

பலதரப்பட்ட ஆந்திரா மெஸ்ஸில் கபளீகரம் செய்திருந்தாலும் சுப்ரியா மெஸ்ஸின் டேஸ்ட் அலாதி. தலை வாழை இலையும், பூப்போன்ற சாதமும், பப்பு பொடியுடன் ஆயில் அப்பளம், வெஜிடபிள் ஃப்ரை (மை பேவரைட்), பருப்பு, அவியல், ஏதேனும் காய் போட்ட சுவையான சாம்பார், ரசம், மஜ்ஜுக புளுசு என்று அழைக்கப்படும் மோர்க்குழம்பு, கட்டியான தயிர், ஆவக்காய் அல்லது வடுமாங்காய் ஊறுகாய். இதனுடன் இடையிடையே கோங்குரா சட்னி, புலி துவையல் என்று ஆந்திரா ஸ்டைலில் செய்து ஒரு கிண்ணத்தில் டேபிளில் வைத்திருப்பார்கள். அதுவும் இறுதியாக அந்த கட்டித்தயிரில் சாப்பிட்டபின் வருவது தூக்கமே அல்ல, ஒரு மயக்கம். இதற்காகவே ஏழுகடல் ஏழுமலை ஜம்பலாம்..
சம்பவத்திற்கு வருகிறேன். அன்று மதியம் நாங்கள் மூவரும் ஒரு டேபிளை பார்த்து அமர்ந்துவிட்டோம். கொலைப்பசி. பொறுமையில்லை.

அப்போதுதான் டேபிளில் இருந்த அந்த கிண்ணம் எங்கள் பார்வையில் பட்டது. பருப்பு பொடி, புளிக்காய்ச்சல், கோங்குரா இதை தவிர்த்து நாலாவதாக ஒன்று. ஆனால் என்னவென்று தெரியவில்லை.

சிங்கமும் இதை கவனித்தது.

இலை போடப்பட்டது. தண்ணீர் தெளித்து சாதம் வைக்கப்பட்டு,
என்னடா இது புதுசா இருக்கு என்று பாண்டி கொளுத்திபோபோட ஆமால்ல என்று நான் அதில் எண்ணையை ஊற்றினேன்.

ஒருவேளை சிக்கன் குழம்பு மாதிரி வைச்சு எல்லா டேபிள்ளையும் ப்ரீயா சாப்பிடுங்கன்னு வச்சிட்டாங்ளோ? சிங்கம் அதன் சிறு மூளையை கசக்கி பிழிந்து யோசித்து பார்த்து சீரியசாக சொன்னது

ஆமா அப்படித்தான் இருக்கும் போல என்று நாங்களும் தலையை ஆட்டினோம். சரி சும்மா சாப்பிட்டு டேஸ்ட் பாரேன் என்றோம்.

சிங்கம் ஒரு ஸ்பூனை எடுத்து அந்த கிண்ணத்தில் போட்டு நக்கி பார்த்தது. ம்ம்ம். டேஸ்ட் சூப்பரா இருக்குடா. புது ஐட்டம் போல. ஐ. நான் இதையே போட்டு சாப்பிடப்போறேன் என்று சாதத்தில் போட்டு பிசைய ஆரம்பித்து சாப்பிட ஆரம்பித்தது.

எனக்கும் பாண்டிக்கு சந்தேகம் வர, சர்வரை கூப்பிட்டோம்.

‘இது என்னதுங்க. புதுசா இருக்கு?’

‘ஓ. சாரி சார். உங்களுக்கு முன்னாடி உக்காந்து சாப்பிட்டு போனவங்க வச்சிட்டு போன சிக்கன் கறி சார். எச்சி கப்பு.(!?!?) எடுக்க மறந்துட்டேன். இப்போ எடுத்துடுறேன் சார்’ என்றான்

சிங்கத்தை பார்த்தால், அதன் முகத்தில் ஈயாடவில்லை. ‘ஏண்டா கொஞ்ச நேரம் முன்னாடியே இத கேட்டிருக்கலாமே?’ என்று முழி பிதுங்கி விழித்தது.

முன்னாடியே கேட்ருந்தா நீ சாப்ட்ருக்க மாட்டியே என்று சொல்லிவிட்டு பப்புபோடி பிசைய ஆரம்பித்தோம்.

அந்த சிங்கக்குட்டி வேறு யாருமில்லை, இந்தியாவின் திமிங்கலம், கோபியர்களின் கண்ணன், மிஸ்டர்.ரோமியோ தமிழகத்து பெண்களின் தூக்கத்தை கெடுப்பவன், அமெரிக்க ஆணழகன், GCE இன் கலாபக்காதலன் என்று பலதரப்பட்ட பாத்திரங்களை அனாயாசமாக சுமக்கும் நண்பன் Ramesh Kumar Balasubramanian

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read