பெக்குலியரான இரண்டு கேரக்டர்களை என் மகளிடம் கவனித்திருக்கிறேன். ஒன்று எதை கைய்யில் எடுத்தாலும் கொடுத்தாலும் முகர்ந்து பார்ப்பது. அல்வா, பிஸ்கட், பூரி, கேக், என எதுவானாலும் சரி. ஒரு தடவை மூக்குக்கு போகும். அங்கு ஓகே என்றால் அதன் பிறகு வாய்க்...கு போகும். தாத்தாவின் (அப்பா) பழக்கம். இரண்டாவது எதை எடுத்தாலும் தூக்கி எறிவது. பொதுவான ஒன்றுதான் என்றாலும் ஒரு வயதிலேயே ஆரம்பித்துவிட்டாள். அப்பாவின் (நான்) பழக்கம். தூக்கி எறியும் பழக்கத்திற்காகவே வீட்டிலிருந்து அலுவலகம் நண்பர்கள் வரை பலரிடம் திட்டு வாங்கியிருந்தாலும் அந்த பழக்கம் போவதாய் இல்லை. இப்போது மகளுக்கு தொற்றியிருக்கிறது. இன்னும் பல இருக்கலாம். இதெல்லாம் அவளுடைய ஜீன், DNA போன்ற சமாச்சாரங்களில் பதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், சேமிப்பது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஆன்மிகத்தில் நாட்டம், மனைவி அம்மாவை மதிப்பது அல்லது மிதிப்பது, முன்கோபம், சார்ந்திருத்தல், முடிவெடுக்க அதிக குழப்பம், பயம், படிப்பு. விளையாட்டு, வாசித்தல், அதிகாரம், வளைந்து கொடுத்தல், பணிவு, பொறாமை, சுயக்கட்டுப்பாடு, சந்தேகம், பரோபகாரம் எனப்பல குணங்களை குழந்தைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொடுக்கும் கர்த்தாவாய் இருப்பது பெற்றோர்களே.  

 


 அலுவலக நண்பருடன் இது சம்பந்தமான ஒரு விசாரணையுடன் கூடிய ஆரோக்கியமான விவாதம் அன்று ஓடிக்கொண்டிருந்தது. சான்றாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

‘நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க சார். இந்த காலத்து பசங்க எந்த அளவுக்கு கவனிக்குறாங்கங்கறது ஆச்சர்யமா இருக்கு?’

அவர் வயது நாற்பத்திரெண்டு. இரண்டு மகன்கள். பத்து மற்றும் ஏழு.

‘என்ன நடந்தது சார்?’ என்று விசாரித்தேன்.

‘எங்க அப்பா அப்பப்போ கோப்பபடுவார். இங்க இருக்குற கோவத்த அங்க கொட்டுவார். அங்க காமிக்க வேண்டிய கோவத்த இங்க கொட்டுவார். ரிசண்டா ஒரு நாள் இதேபோல என்ன நார் நாரா கிழிக்க ஆரம்பிச்சிட்டார். என் மேல தப்பே கிடையாது. என்ன நினைச்சாரோ தெரியல என் மேல அன்னைக்கி அவ்ளோ கோவம். ஆனா, ஒரு மகனா, நான் என்னோட பேரண்ட்ஸ்ஸ எதிர்த்து பேசினதே இல்ல. இந்த ஹாபிட் என்னோட ஸ்கூல் brought up. நினைவு தெரிஞ்ச நாள்ளேந்து ஒரு வார்த்த எதிர்த்ததே கிடையாது. அவர் கோவப்பட்டு முடிக்கிற வரைக்கும் பொறுமையா இருந்தேன், அதுக்கப்புறம் அவர் போய்ட்டார். என் வைஃப், பசங்கல்லாம் என்னோட ஹால்லத்தான் இருந்தாங்க.’

‘உங்க மேல தப்பு இல்லேன்னா நீங்க பொறுமையா கூட எடுத்து சொல்லிருக்கலாமே.?

‘சார்ர்ர். ஒண்ணு புரிஞ்சிக்கங்க. எல்லா கேள்வியும் பதிலே எதிபார்த்து கேக்கப்படுறது கிடையாது. அதே போலத்தான் கோவமும். அத விடுங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு என்னோட சின்ன பைய்யன் என்கிட்ட வந்து சொன்னதுதான் ஆச்சர்யம்’ அவன் சொல்றான்.

‘உன்ன மாதிரி நானும் உன்னைய நல்லா வச்சுப்பேன் டாடி’

‘என்னடா சொல்ற?’

‘நீ ரொம்ப கிரேட் டாடி. நீ தப்பே பண்ணல. தாத்தா உன் மேல கோவப்படுறது நியாயமே இல்ல. இருந்தாலும் நீ எவ்ளோ அமைதியா இருந்தே. நானும் அதே மாதிரி உன்ன பாத்துப்பேன் டாடின்றான்’ என்று சிலாகித்து சொன்னார்.

ஒரு ஏழு வயது பைய்யனுக்கு அப்பா மகன் என்ற உறவைத்தாண்டி தாத்தா அப்பா என்ற உறவு வரை பகுத்து பார்த்து அந்த உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது என்பது குழந்தைகளின் மெட்சுரிட்டியையும் பெற்றோர்களின் குணநலன்களையும், சீரான வளர்ப்பையுமே காட்டுகிறது. ‘உங்கள உரிச்சு வச்சிருக்குறான் சார் உங்க பைய்யன்.’ என்று அவருக்கு ஓர் சபாஷ் சொன்னேன்.

கவலைப்படும்போதோ அல்லது அதீத சந்தோசத்தின் போதோ, ‘BE A WITNESS’ என்ற புத்தரின் பொன்மொழி ஞாபகத்திற்கு வரும். அதனுடைய சாராம்சம் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாமல் சாட்சியாய் மட்டும் இரு. சுக துக்கங்களுக்கு நீ காரணம் என்று நினையாதே. நடக்கும் அனைத்து செயல்களிடமிருந்தும் தூர விலகி ஒரு பார்வையாளனாய் மட்டும் இரு என்பதே. அதுபோல் ஒரு WITNESS ஆக இருக்க முயற்சி செய்யும் அதே தருணத்தில் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஒரு WITNESS, உங்கள் அருகிலேயே உங்களை ஒட்டியே உங்களுடனே வளருகிறது என்பதை நினைவில் இருத்தி கொள்ளுங்கள்.

உங்களின் புற அழகை காண வேண்டுமானால் கண்ணாடியைப்பாருங்கள் அக அழகு தெரிய வேண்டுமானால் உங்கள் குழந்தையை உற்று கவனியுங்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள். .

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read