கடந்த வாரத்தின் ஒரு நிகழ்வு. அது பீச் முதல் தாம்பரம் செல்லும் மின்தொடர் வண்டி. நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரவும் ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறிக்கொண்டார். ஏறிய வேகத்தில் கீழ் காணுபவற்றை சத்தமாக சொல்ல ஆரம்பித்திருந்தார்.

 ‘சார் இத...ு பர்ஸ்ட் கிளாஸ். முதல் வகுப்பு பெட்டி. தயவு செஞ்சு மஞ்சள் டிக்கட் வச்சிருக்கவங்க கீழ இறங்கிடுங்க. பிடிச்சா 500 ரூபா அபராதம். யாரும் கோவப்படாதீங்க. தவறா எடுத்துக்க வேண்டாம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.

கூட்டம் முழுதும் அவரை திரும்பி பார்த்தது. அவர் தொடர்ந்தார்.

அய்யா படியில நிக்காதீங்க. உங்களுக்கும் நல்லதில்ல உங்களுக்காக வீட்டில காத்திட்ருக்கிற மனைவி, அம்மா, அப்பா, மகன், மகள், நண்பர்கள் என யாருக்கும் நல்லதில்ல. தயவு செஞ்சு உள்ளவந்துடுங்க. இங்க நிறைய இடம் இருக்கு.

படியில் நின்றுகொண்டு ஆம்ஸ் காட்டிய சிங்கங்கள் பார்த்தன. சில முறைத்தன. ஒன்றாவது நகரவில்லை. கிறுக்கன் என்ற வசவு கூட கேட்டது. வண்டி கிளம்பிய சில நொடிகளில்,

அய்யா எல்லாரும் ஒரு அரை அடி நகந்துக்குங்க. படியில் நம்ம நண்பர்கள் தொங்கிட்டுவராங்க. அவங்க வீட்ல அவங்கள எல்லாரும் எதிர்பார்பாங்க. சிரமம் பாக்காம ஒரு அரை அடி நகந்து வாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் என்று ஒவ்வொருத்தராய் கேட்டு கொண்டிருந்தார்.

கூட்டம் நகரவே மனசில்லாமல் அவரது வெங்கலக்குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கமுடியாமலும் முனகி கொண்டே நகர்ந்தது. அவர் தொடர்ந்தார். எவனோ மெண்டலா இருப்பான் போல என்று கமெண்ட் அடித்தனர், சத்தமில்லாமல்.

காதுல ஹெட்போன் மாட்டிருக்கவங்க தயவு செஞ்சு அத களட்டிடுங்க. வீட்டுல போயி போட்டு கேளுங்க. உங்க கவனம் மின்தொடர் வண்டி மேல இருக்காது. கோவிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு சென்னைல மட்டும் நாலு பேரு போன் பேசிட்டே தண்டவாளத்த கடக்கிறதுனால இறக்குறாங்க. கவனம் தேவை. ப்ளீஸ்

ஹெட்போன் மாட்டியது எதுவும் திரும்பக்கூட இல்லை. அடுத்ததாக பக்கத்து சீட்டை எட்டிபார்த்தவர்

சார் ப்ளீஸ் எதிர் சீட்ல கால வைக்காதீங்க. அடுத்தவங்க உக்காரனும். கொஞ்சம் மதிப்பு கொடுங்க என்றார்.

இதற்கு முன் ஒரு முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரின் கணீரென்ற குரலும் படபடப்பான பேச்சும் சிறிது எரிச்சலை கொடுத்தால் கூட அவர் சொல்லிய ஒவ்வொன்றும் தனிமனித ஒழுக்கங்கள். பல் தேய்த்தபின் வாய்கொப்பளிக்க வேண்டும் என்று பிறர் சொல்லித்தான் செய்யவேண்டும் என்பதில்லை அது போலவே இதுவும் படுகின்றது. ஏதேனும் விபத்தில் தன் சொந்தங்களை பரி கொடுத்துவிட்டு அந்த வலியை பிறர் உணரக்கூடாது என்ற அக்கறையில் அவர் பேசியதாகத்தான் எனக்கு தோன்றியது. அடுத்தவரின் மீது அக்கறை எடுத்து கொள்பவர்கள் தானே இப்பொழுதெல்லாம் பைத்தியமாகத்தெரிகின்றனர். மாம்பலத்தில் அவர் இறங்கும் நேரத்தில், அவருக்கு கை கொடுக்கலாம் என்று தோன்றியது. கையை நீட்டினேன். அழுத்தமாக குலுக்கிவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினார். ‘அய்யா படியில நிக்காதீங்க.’ என்ற சத்தம் வண்டி கிளம்புமுன் கேட்டது.
See More

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read