பெக்குலியரான இரண்டு கேரக்டர்களை என் மகளிடம் கவனித்திருக்கிறேன். ஒன்று எதை கைய்யில் எடுத்தாலும் கொடுத்தாலும் முகர்ந்து பார்ப்பது. அல்வா, பிஸ்கட், பூரி, கேக், என எதுவானாலும் சரி. ஒரு தடவை மூக்குக்கு போகும். அங்கு ஓகே என்றால் அதன் பிறகு வாய்க்...கு போகும். தாத்தாவின் (அப்பா) பழக்கம். இரண்டாவது எதை எடுத்தாலும் தூக்கி எறிவது. பொதுவான ஒன்றுதான் என்றாலும் ஒரு வயதிலேயே ஆரம்பித்துவிட்டாள். அப்பாவின் (நான்) பழக்கம். தூக்கி எறியும் பழக்கத்திற்காகவே வீட்டிலிருந்து அலுவலகம் நண்பர்கள் வரை பலரிடம் திட்டு வாங்கியிருந்தாலும் அந்த பழக்கம் போவதாய் இல்லை. இப்போது மகளுக்கு தொற்றியிருக்கிறது. இன்னும் பல இருக்கலாம். இதெல்லாம் அவளுடைய ஜீன், DNA போன்ற சமாச்சாரங்களில் பதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், சேமிப்பது, சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, ஆன்மிகத்தில் நாட்டம், மனைவி அம்மாவை மதிப்பது அல்லது மிதிப்பது, முன்கோபம், சார்ந்திருத்தல், முடிவெடுக்க அதிக குழப்பம், பயம், படிப்பு. விளையாட்டு, வாசித்தல், அதிகாரம், வளைந்து கொடுத்தல், பணிவு, பொறாமை, சுயக்கட்டுப்பாடு, சந்தேகம், பரோபகாரம் எனப்பல குணங்களை குழந்தைகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொடுக்கும் கர்த்தாவாய் இருப்பது பெற்றோர்களே.  

 


 அலுவலக நண்பருடன் இது சம்பந்தமான ஒரு விசாரணையுடன் கூடிய ஆரோக்கியமான விவாதம் அன்று ஓடிக்கொண்டிருந்தது. சான்றாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

‘நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க சார். இந்த காலத்து பசங்க எந்த அளவுக்கு கவனிக்குறாங்கங்கறது ஆச்சர்யமா இருக்கு?’

அவர் வயது நாற்பத்திரெண்டு. இரண்டு மகன்கள். பத்து மற்றும் ஏழு.

‘என்ன நடந்தது சார்?’ என்று விசாரித்தேன்.

‘எங்க அப்பா அப்பப்போ கோப்பபடுவார். இங்க இருக்குற கோவத்த அங்க கொட்டுவார். அங்க காமிக்க வேண்டிய கோவத்த இங்க கொட்டுவார். ரிசண்டா ஒரு நாள் இதேபோல என்ன நார் நாரா கிழிக்க ஆரம்பிச்சிட்டார். என் மேல தப்பே கிடையாது. என்ன நினைச்சாரோ தெரியல என் மேல அன்னைக்கி அவ்ளோ கோவம். ஆனா, ஒரு மகனா, நான் என்னோட பேரண்ட்ஸ்ஸ எதிர்த்து பேசினதே இல்ல. இந்த ஹாபிட் என்னோட ஸ்கூல் brought up. நினைவு தெரிஞ்ச நாள்ளேந்து ஒரு வார்த்த எதிர்த்ததே கிடையாது. அவர் கோவப்பட்டு முடிக்கிற வரைக்கும் பொறுமையா இருந்தேன், அதுக்கப்புறம் அவர் போய்ட்டார். என் வைஃப், பசங்கல்லாம் என்னோட ஹால்லத்தான் இருந்தாங்க.’

‘உங்க மேல தப்பு இல்லேன்னா நீங்க பொறுமையா கூட எடுத்து சொல்லிருக்கலாமே.?

‘சார்ர்ர். ஒண்ணு புரிஞ்சிக்கங்க. எல்லா கேள்வியும் பதிலே எதிபார்த்து கேக்கப்படுறது கிடையாது. அதே போலத்தான் கோவமும். அத விடுங்க. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு என்னோட சின்ன பைய்யன் என்கிட்ட வந்து சொன்னதுதான் ஆச்சர்யம்’ அவன் சொல்றான்.

‘உன்ன மாதிரி நானும் உன்னைய நல்லா வச்சுப்பேன் டாடி’

‘என்னடா சொல்ற?’

‘நீ ரொம்ப கிரேட் டாடி. நீ தப்பே பண்ணல. தாத்தா உன் மேல கோவப்படுறது நியாயமே இல்ல. இருந்தாலும் நீ எவ்ளோ அமைதியா இருந்தே. நானும் அதே மாதிரி உன்ன பாத்துப்பேன் டாடின்றான்’ என்று சிலாகித்து சொன்னார்.

ஒரு ஏழு வயது பைய்யனுக்கு அப்பா மகன் என்ற உறவைத்தாண்டி தாத்தா அப்பா என்ற உறவு வரை பகுத்து பார்த்து அந்த உணர்வை புரிந்து கொள்ளமுடிகிறது என்பது குழந்தைகளின் மெட்சுரிட்டியையும் பெற்றோர்களின் குணநலன்களையும், சீரான வளர்ப்பையுமே காட்டுகிறது. ‘உங்கள உரிச்சு வச்சிருக்குறான் சார் உங்க பைய்யன்.’ என்று அவருக்கு ஓர் சபாஷ் சொன்னேன்.

கவலைப்படும்போதோ அல்லது அதீத சந்தோசத்தின் போதோ, ‘BE A WITNESS’ என்ற புத்தரின் பொன்மொழி ஞாபகத்திற்கு வரும். அதனுடைய சாராம்சம் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாமல் சாட்சியாய் மட்டும் இரு. சுக துக்கங்களுக்கு நீ காரணம் என்று நினையாதே. நடக்கும் அனைத்து செயல்களிடமிருந்தும் தூர விலகி ஒரு பார்வையாளனாய் மட்டும் இரு என்பதே. அதுபோல் ஒரு WITNESS ஆக இருக்க முயற்சி செய்யும் அதே தருணத்தில் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் ஒரு WITNESS, உங்கள் அருகிலேயே உங்களை ஒட்டியே உங்களுடனே வளருகிறது என்பதை நினைவில் இருத்தி கொள்ளுங்கள்.

உங்களின் புற அழகை காண வேண்டுமானால் கண்ணாடியைப்பாருங்கள் அக அழகு தெரிய வேண்டுமானால் உங்கள் குழந்தையை உற்று கவனியுங்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள். .

‘மரணப்படுக்கையிலும் மறவாது கண்மணியே’ என்பது போன்ற ஒரு பயணம் சமீபத்தில் வாய்த்தது. ரம்ஜானை ஒட்டிய விடுமுறையின் போது, ஊருக்கு செல்வதற்காக டிக்கட் புக் செய்ய ரயில்வேயின் தட்கல் சேவாவை நம்பி கொண்டிருந்தேன். காலை ஒன்பது மணியிலிருந்தே மூன்று நான்...கு பேஜ்களில் லாகின் செய்து கிளிக்கி கொண்டிருந்தேன். பத்து பத்துக்கு வெயிட்டிங் லிஸ்ட் விழுந்தது. வேறு வழியில்லாது ரெட் பஸ்ஸில் தஞ்சமடைந்தால் எல்லா டிக்கட்டும் காலி. டிக்கட் கூஸ் அதிலும் ஸ்வாஹா. கூகலிட்டு ஒருவழியாக மேக் மை ட்ரிப்.காம் பஸ் சர்வீஸ்ஸில் ஒரு சீட் கிடைத்தது. ‘ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ்’. பேரை கேள்விபட்டதே இல்லை. அப்போவே யோசிச்சிருக்கணும். சரி கிடைத்ததை ஏன் விடுவானேனென்று அதை புக் செய்தேன். வண்டி CMBT யிலிருந்து கிளம்புகிறது. அங்கு செல்ல நேரமில்லாத காரணத்தினால் Guindy ஆசர் கானாவில் போர்டிங். அடுத்த நாள் சரியாக டிக்கட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது போல ஆறு முப்பதிற்கு ஆசர் கானா சென்றடைதேன். ஒரு முறை உறுதிபடுத்திக்கொள்ள அந்த ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ் நம்பருக்கு கால் செய்தேன். 

 


‘வண்டி அஞ்சு நிமிஷத்துல கிளம்பிடும் சார்.’

‘சீட் நம்பர் ஒண்ணு என்னோடது. நான் கிண்டில போர்டிங் சார்’

‘என்ன நம்பர் சொன்னீங்க?’

‘ஒண்ணு. சீட் நம்பர் ஒண்ணு.’

‘சீட் நம்பர் ஒண்ணு ரெண்டுல கவிதா, ரமணினு ரெண்டு பேரு இருக்காங்க’

இன்னும் கொஞ்ச நேரம் கிளறியதில் கிருஷ்ணா டிராவேல்ஸ், ரெட் பஸ்ஸில் மட்டுமே புக் செய்யமுடியும் என்றும், மேக் மை டிரிப்பில் டீலிங் கிடையாது என்றும் விளக்கம் வந்தது. ஒரு அரை மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு அவர்கள் விடாப்பிடியாக நிற்க

‘சார் நீங்க ஸ்ரீ கிருஷ்ணா டிராவேல்ஸ் பேர மாத்திடுங்க’

என்னணு’?

‘சுந்தர டிராவேல்ஸ்னு’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.

நானாவது தனியாக நின்றிருந்தேன். எனக்கருகில் இன்னொரு ஃபேமிலி கைக்குழந்தையோடு(பைய்யன் ங்கா ங்கா என்று கத்தி கொண்டிருந்தான்) இரண்டு முதியவர்களுடன் நின்றுகொண்டிருந்தனர். மேக் மை டிரிப்பில் இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு புக் பண்ணினோம் சார். பாவமாக இருந்தது. அங்கு ஏதும் வண்டி நிற்காததால் தாம்பரம் சென்றேன். அங்கு பத்து பதினொரு மணிக்கு மேல் தான் வண்டி வரும் என்பதால் ஒரு ஓபன் டிக்கட் எடுத்து ஒன்பது ஐம்பதுக்கு வந்த பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் தொற்றிக்கொள்ளலாம் என்று நினைத்தது பெரும் தவறு என்று அப்போது விளங்கவில்லை. அன்ரிசர்வ்ட் முழுவதும் கூட்டம் அம்மிக்கொண்டிருந்தது. படியில் அரிசி போடக்கூட இடமில்லை.

அதன் அருகிலிருந்த S12 பெட்டியில் ஏறினேன். என்னோடு ஒரு பத்து பேர் வேறு ஏறிக்கொண்டனர். எதிர்பார்த்தது போல் டி‌டி‌ஆர் வந்து கத்த ஆரம்பித்தார். கெஞ்சி கூத்தாடி ஒவ்வொரு பெட்டியாக மாறவும், ‘விடாது கருப்பு’ போல் துரத்திக்கொண்டே இருந்தார். ஒரு நூறு ரூபாய் தாளை நீட்டினே...... என்னாது என்று முறைக்கவும், சார் பைன் கட்டிடுறேன். இப்படி ஓரமா நின்னுட்டே வந்துட்றேன்’ என்று எவ்ளோ சொல்லியும் கேளாது கழுத்து பிடித்து தள்ளாத குறையாக விழுப்புரத்தில் எல்லோரையும் இறக்கி விட்டார்.

அன்ரிசர்வ்ட் படியில் ஏறுவதற்கு மட்டும் இடமிருந்தது. படியில் இருந்து சௌச்சால்யா வரை மட்டுமே ஒரு முப்பது பேர் நின்று கொண்டிருந்தனர். டாய்லெட்டில் எட்டி பார்த்தால் அதற்குள் ஒரு ஐந்து பேர் உட்கார்ந்து கொண்டிருந்தனர். தமிழகம் மெதுவாக பீஹார் ஆகி கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் இடுப்பில் இருந்து ஒரு பன்னீர் பாட்டீல் போன்ற வஸ்துவை கைய்யில் எடுத்தான். தலையில் தட்டி பிளாஸ்டிக் டம்ப்ளரில் ஊற்றினான். பன்னீர் இல்லை. தண்ணீர் பாக்கெட். சட்டை பைய்யில் மாங்காய் ஊறுகாய். ஐந்தே நிமிடத்தில் நிற்கக்கூட இடமில்லாத இடத்தில் காலுக்கடியில் படுத்துக்கொண்டான். இடையில் வேறு ஒரு பத்து பெண்கள் வரிசையாக ‘எப்பா எந்த்ரிப்பா பாத்ரூம் போனும்’ என்று உள்ளிருந்தவர்களை காலி செய்து, சென்று வந்து கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து மீண்டும் அதே ஐந்து பேர் உள்ளே உட்கார்ந்துகொண்டு பயணம். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணி தாண்டியும் நின்று கொண்டே இருந்ததால் காலில் வெரிகோஸ் வெயின்ஸ் வந்தது போல் ஒரே வலி. கால் மாற்றி மாற்றி அபிநயம் பிடித்தாலும் வலி குறைந்தபாடில்லை. அரியலூர் தாண்டியபோது அதே காரிடாரில் குத்த வைக்க இடம் கிடைக்கவும், அந்த சௌச்சால்யா அருகில் மூக்கை பிடித்துக்கொண்டு உட்கார்ந்த போது ஒரு SMS மேக் மை டிரிப்பிலிருந்து.

‘Dear Sir, We would like to hear from you? How was the travel? என்று.

மரணப்படுக்கையிலும் மறவாது என் கண்மணியே என்று ரிப்ளை அனுப்பினேன். .

சம்பவம் நடந்த இடம் – சுப்ரியா ஆந்த்ரா மெஸ், TCS எதிரில், வேளச்சேரி.

சம்பவம் நடந்த நேரம் – 2008 இல் வெயில் கொளுத்தும் ஒரு ஞாயிற்றுக்கிழமை, நண்பகல் ஒன்று முப்பது.
 


நான், பாண்டி மற்றும் ஒரு நண்பன்(இப்போதைக்கு ஒரு பேச்சுக்கு சிங்கம் என்று பேர்... வைத்துக்கொள்ளலாம்) தே.மு.தி.க. கட்சி பிரமுகர் ஒருவர் நடத்தும் M.S.மேன்ஷனில் ஒரே ரூமில் அடைக்கலாமாயிருந்தோம். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தவரை சனி ஞாயிறு என்று இரண்டு நாள் விடுமுறை கிடைத்தது ஒரு வகையில் மட்டற்ற மகிழ்ச்சி என்றாலும் அந்த இரண்டு நாட்களும் மதிய வேலை உணவுக்காக அல்லோலப்படும் சிரமம் ஒரு தனிக்கிளைக்கதை. காலை மற்றும் இரவு பக்கத்தில் இருக்கும் முருகலெக்ஷ்மி அல்லது சக்தி மெஸ் அபயமளித்தது. ‘பரோட்டா சூடா இருக்கா?’ என்ற முருகலெக்ஷ்மி மெஸ்ஸில் கேட்ட கேள்வியை பாண்டி மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த மதியவேளை புல் மீல்ஸ் சாப்பிடுவதுதான் ஒரு பெரிய அறப்போராட்டம்(!!!). நாங்கள் தங்கியிருந்த தரமணியில் (சரியாக சொல்லவேண்டும் என்றால் கானகம்) நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ ஒரு 360 டிகிரி என்று எந்த பக்கம் திரும்பிபார்த்தாலும் பேருந்து நிலையத்திற்கோ இந்திரா நகர் MRTS ஸ்டேஷன் போவதற்கோ குறைந்தது இரண்டு கிலோமீட்டர் நடந்தே ஆகவேண்டும். வண்டி கிடையாது. அதுவும் சாயங்கால வேலையென்றால் பராக்கு பார்த்துக்கொண்டே வேர்க்கடலை சாப்பிட்டுவிட்டு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் நடக்கும் ஷூட்டிங்கை பார்த்துக்கொண்டே நடந்து விடலாம். எனினும் சுட்டெரிக்கும் மதிய வேளையில் சற்றே சிரமம் தான். இந்திரா நகர் MRTS ஸ்டேஷனுக்கான ஓவர் பிரிட்ஜில் ஒரு முறை ‘MGR இல்லைங்க நம்பியாரு இல்லைங்க நாங்களெல்லாம் நடுவில’ என்று ஒரு பாடலை ஜீவா மற்றும் குழுவினர் கம்பியை பிடித்துக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர். ‘யுத்தம் செய்’ படத்தில் சேரன் ஒரு பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு செய்யும் வரலாற்று சிறப்புமிக்க சண்டைக்காட்சி எடுக்கப்பட்டதும் இதே பிரிட்ஜ் தான் என்பது இதன் தனிச்சிறப்பு. நிற்க!!!

40 டிகிரி வெயிலில் குடைபிடித்து நடந்து ஸ்டேஷன் வந்து டிக்கெட் எடுத்து (கவனிக்க) பின்பு பெருங்குடி ஸ்டேஷனில் இறங்கி மீண்டும் ஒரு கிலோமீட்டர் நடந்து வெளேச்சரி மெயின் ரோட்டை கிராஸ் செய்தால் நான் முன்பு அடிகோடிட்ட சுப்ரியா மெஸ். ஒரு சாப்பாட்டிற்கு இத்தனை அக்கப்போரா என்றால் உரக்க சொல்வேன். ஆமாம்.

பலதரப்பட்ட ஆந்திரா மெஸ்ஸில் கபளீகரம் செய்திருந்தாலும் சுப்ரியா மெஸ்ஸின் டேஸ்ட் அலாதி. தலை வாழை இலையும், பூப்போன்ற சாதமும், பப்பு பொடியுடன் ஆயில் அப்பளம், வெஜிடபிள் ஃப்ரை (மை பேவரைட்), பருப்பு, அவியல், ஏதேனும் காய் போட்ட சுவையான சாம்பார், ரசம், மஜ்ஜுக புளுசு என்று அழைக்கப்படும் மோர்க்குழம்பு, கட்டியான தயிர், ஆவக்காய் அல்லது வடுமாங்காய் ஊறுகாய். இதனுடன் இடையிடையே கோங்குரா சட்னி, புலி துவையல் என்று ஆந்திரா ஸ்டைலில் செய்து ஒரு கிண்ணத்தில் டேபிளில் வைத்திருப்பார்கள். அதுவும் இறுதியாக அந்த கட்டித்தயிரில் சாப்பிட்டபின் வருவது தூக்கமே அல்ல, ஒரு மயக்கம். இதற்காகவே ஏழுகடல் ஏழுமலை ஜம்பலாம்..
சம்பவத்திற்கு வருகிறேன். அன்று மதியம் நாங்கள் மூவரும் ஒரு டேபிளை பார்த்து அமர்ந்துவிட்டோம். கொலைப்பசி. பொறுமையில்லை.

அப்போதுதான் டேபிளில் இருந்த அந்த கிண்ணம் எங்கள் பார்வையில் பட்டது. பருப்பு பொடி, புளிக்காய்ச்சல், கோங்குரா இதை தவிர்த்து நாலாவதாக ஒன்று. ஆனால் என்னவென்று தெரியவில்லை.

சிங்கமும் இதை கவனித்தது.

இலை போடப்பட்டது. தண்ணீர் தெளித்து சாதம் வைக்கப்பட்டு,
என்னடா இது புதுசா இருக்கு என்று பாண்டி கொளுத்திபோபோட ஆமால்ல என்று நான் அதில் எண்ணையை ஊற்றினேன்.

ஒருவேளை சிக்கன் குழம்பு மாதிரி வைச்சு எல்லா டேபிள்ளையும் ப்ரீயா சாப்பிடுங்கன்னு வச்சிட்டாங்ளோ? சிங்கம் அதன் சிறு மூளையை கசக்கி பிழிந்து யோசித்து பார்த்து சீரியசாக சொன்னது

ஆமா அப்படித்தான் இருக்கும் போல என்று நாங்களும் தலையை ஆட்டினோம். சரி சும்மா சாப்பிட்டு டேஸ்ட் பாரேன் என்றோம்.

சிங்கம் ஒரு ஸ்பூனை எடுத்து அந்த கிண்ணத்தில் போட்டு நக்கி பார்த்தது. ம்ம்ம். டேஸ்ட் சூப்பரா இருக்குடா. புது ஐட்டம் போல. ஐ. நான் இதையே போட்டு சாப்பிடப்போறேன் என்று சாதத்தில் போட்டு பிசைய ஆரம்பித்து சாப்பிட ஆரம்பித்தது.

எனக்கும் பாண்டிக்கு சந்தேகம் வர, சர்வரை கூப்பிட்டோம்.

‘இது என்னதுங்க. புதுசா இருக்கு?’

‘ஓ. சாரி சார். உங்களுக்கு முன்னாடி உக்காந்து சாப்பிட்டு போனவங்க வச்சிட்டு போன சிக்கன் கறி சார். எச்சி கப்பு.(!?!?) எடுக்க மறந்துட்டேன். இப்போ எடுத்துடுறேன் சார்’ என்றான்

சிங்கத்தை பார்த்தால், அதன் முகத்தில் ஈயாடவில்லை. ‘ஏண்டா கொஞ்ச நேரம் முன்னாடியே இத கேட்டிருக்கலாமே?’ என்று முழி பிதுங்கி விழித்தது.

முன்னாடியே கேட்ருந்தா நீ சாப்ட்ருக்க மாட்டியே என்று சொல்லிவிட்டு பப்புபோடி பிசைய ஆரம்பித்தோம்.

அந்த சிங்கக்குட்டி வேறு யாருமில்லை, இந்தியாவின் திமிங்கலம், கோபியர்களின் கண்ணன், மிஸ்டர்.ரோமியோ தமிழகத்து பெண்களின் தூக்கத்தை கெடுப்பவன், அமெரிக்க ஆணழகன், GCE இன் கலாபக்காதலன் என்று பலதரப்பட்ட பாத்திரங்களை அனாயாசமாக சுமக்கும் நண்பன் Ramesh Kumar Balasubramanian


‘The Intouchables’ எனும் ஒரு ஃபிரெஞ்சு மொழி படம் காண வாய்ப்பு அமைந்தது. படத்தை பற்றிய ரிஷி மூலம் ஆராய்ந்ததில் உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் IMDB அதனை சிறந்த 250 படங்களும் 61 ஆவது படமாக தெரிவு செய்து அடையாளப்படுத்தியது. படத்தின் முதல் பதினைந்து நிமிடம் அதிகளவில் ஈர்க்கவில்லையென்றாலும் ஒமர் எனும் கறுப்பின நடிகரின் அலட்டிலில்லாத அசாத்திய நடிப்பு நம்மை சிறுக சிறுக படத்தினுள் இழுத்து கட்டிப்போடுகிறது.
 
கதை மிகவும் எளிமையானது. மிகப்பெரிய ஒரு செல்வந்தரின் கேர் டேக்காரக வேலைபார்க்கும் ஒமருக்கும் அந்த கனவானுக்கும் ஏற்படும் நட்பே படத்தின் பிரதானம். பாரா கிளைடிங்க் பயிற்சியின் போது ஏற்படும் விபத்தில் கழுத்து முதல் பாதம் வரை செயலிழந்து Tetraplegica ஆக முடங்கிப்போகிறார் செல்வந்தர் பிராங்க் க்லுசே. கேர் டேக்காருக்கான நேர்காணலின் போதே குறும்பு செய்யும் ஒமரின் கேரக்டர் அவருக்கு பிடித்துபோய் விடுகிறது. Selected. வேலையில் சேரும் ஒமர் தன்னை ஒரு வேலையாளாக பாவிக்காமல் பிராங்கின் நண்பராக அவரை ஆளுமைபடுத்துகிறார். மனைவியை இழந்து தவிக்கும் பிராங்கிற்கு அந்த உறவு ஒரு வடிகாலாக தோன்றுகிறது. செல்வந்தரின் செக்ரெட்டரியை கரெக்ட் செய்யத்துடிக்கும் ஒமரின் நடிப்பு Subtle Comedy.  நூற்றிபதினைந்தாவது நிமிடத்தில் பிராங்கின் காதலியையும் தேடிப்பிடித்து அவர் கைய்யில் ஒப்படைத்து பிரிந்து போகிறார். Blue Streak இன் Martin Lawrence மற்றும் Senseless இன் Marlon Wayons ஐ மிஞ்சும் ஒரு அசாதாரண நடிப்பை போகிற போக்கில் உதிர்த்து செல்கிறார் Omar Sy. பிராங்க் க்லூசோவை எங்கோ பார்த்தது போல் இருக்கவே கூகுளிட்டதில் ‘Dustin Hoffman’ என்ற விடை கிடைத்தது. படம் ஒரு ஆஸ்காருக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லையென்றாலும் ஒரு ‘Feel Good Movie’ யை பார்த்த திருப்தி உறுதி.

கடந்த வாரத்தின் ஒரு நிகழ்வு. அது பீச் முதல் தாம்பரம் செல்லும் மின்தொடர் வண்டி. நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் வரவும் ஒரு ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏறிக்கொண்டார். ஏறிய வேகத்தில் கீழ் காணுபவற்றை சத்தமாக சொல்ல ஆரம்பித்திருந்தார்.

 ‘சார் இத...ு பர்ஸ்ட் கிளாஸ். முதல் வகுப்பு பெட்டி. தயவு செஞ்சு மஞ்சள் டிக்கட் வச்சிருக்கவங்க கீழ இறங்கிடுங்க. பிடிச்சா 500 ரூபா அபராதம். யாரும் கோவப்படாதீங்க. தவறா எடுத்துக்க வேண்டாம். உங்க நல்லதுக்குதான் சொல்றேன்.

கூட்டம் முழுதும் அவரை திரும்பி பார்த்தது. அவர் தொடர்ந்தார்.

அய்யா படியில நிக்காதீங்க. உங்களுக்கும் நல்லதில்ல உங்களுக்காக வீட்டில காத்திட்ருக்கிற மனைவி, அம்மா, அப்பா, மகன், மகள், நண்பர்கள் என யாருக்கும் நல்லதில்ல. தயவு செஞ்சு உள்ளவந்துடுங்க. இங்க நிறைய இடம் இருக்கு.

படியில் நின்றுகொண்டு ஆம்ஸ் காட்டிய சிங்கங்கள் பார்த்தன. சில முறைத்தன. ஒன்றாவது நகரவில்லை. கிறுக்கன் என்ற வசவு கூட கேட்டது. வண்டி கிளம்பிய சில நொடிகளில்,

அய்யா எல்லாரும் ஒரு அரை அடி நகந்துக்குங்க. படியில் நம்ம நண்பர்கள் தொங்கிட்டுவராங்க. அவங்க வீட்ல அவங்கள எல்லாரும் எதிர்பார்பாங்க. சிரமம் பாக்காம ஒரு அரை அடி நகந்து வாங்க. ப்ளீஸ் ப்ளீஸ் என்று ஒவ்வொருத்தராய் கேட்டு கொண்டிருந்தார்.

கூட்டம் நகரவே மனசில்லாமல் அவரது வெங்கலக்குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கமுடியாமலும் முனகி கொண்டே நகர்ந்தது. அவர் தொடர்ந்தார். எவனோ மெண்டலா இருப்பான் போல என்று கமெண்ட் அடித்தனர், சத்தமில்லாமல்.

காதுல ஹெட்போன் மாட்டிருக்கவங்க தயவு செஞ்சு அத களட்டிடுங்க. வீட்டுல போயி போட்டு கேளுங்க. உங்க கவனம் மின்தொடர் வண்டி மேல இருக்காது. கோவிக்கக்கூடாது. ஒரு நாளைக்கு சென்னைல மட்டும் நாலு பேரு போன் பேசிட்டே தண்டவாளத்த கடக்கிறதுனால இறக்குறாங்க. கவனம் தேவை. ப்ளீஸ்

ஹெட்போன் மாட்டியது எதுவும் திரும்பக்கூட இல்லை. அடுத்ததாக பக்கத்து சீட்டை எட்டிபார்த்தவர்

சார் ப்ளீஸ் எதிர் சீட்ல கால வைக்காதீங்க. அடுத்தவங்க உக்காரனும். கொஞ்சம் மதிப்பு கொடுங்க என்றார்.

இதற்கு முன் ஒரு முறை அவரை பார்த்திருக்கிறேன். அவரின் கணீரென்ற குரலும் படபடப்பான பேச்சும் சிறிது எரிச்சலை கொடுத்தால் கூட அவர் சொல்லிய ஒவ்வொன்றும் தனிமனித ஒழுக்கங்கள். பல் தேய்த்தபின் வாய்கொப்பளிக்க வேண்டும் என்று பிறர் சொல்லித்தான் செய்யவேண்டும் என்பதில்லை அது போலவே இதுவும் படுகின்றது. ஏதேனும் விபத்தில் தன் சொந்தங்களை பரி கொடுத்துவிட்டு அந்த வலியை பிறர் உணரக்கூடாது என்ற அக்கறையில் அவர் பேசியதாகத்தான் எனக்கு தோன்றியது. அடுத்தவரின் மீது அக்கறை எடுத்து கொள்பவர்கள் தானே இப்பொழுதெல்லாம் பைத்தியமாகத்தெரிகின்றனர். மாம்பலத்தில் அவர் இறங்கும் நேரத்தில், அவருக்கு கை கொடுக்கலாம் என்று தோன்றியது. கையை நீட்டினேன். அழுத்தமாக குலுக்கிவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினார். ‘அய்யா படியில நிக்காதீங்க.’ என்ற சத்தம் வண்டி கிளம்புமுன் கேட்டது.
See More

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read