சுஜாதாவை வாசிக்க ஆரம்பித்து குறைந்தது பத்து வருடங்களாவது கடந்திருக்கும். அநேகமாக அவர் எழுதி புத்தகமாக வெளிவந்ததில் தொண்ணூறு சதவீதம் கடந்தாகிவிட்டது.. கல்லூரியின் எந்த ஒரு பருவ தேர்வின்போதும், வாத்தியார் புத்தகம் அருகில் இல்லாமல் படித்தது இல்லை. அதற்கென்றே சில புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிடுவேன். விஞ்ஞானச்சிறுகதைகள், கணேஷ் வசந்த் சிறுகதைகள் போன்ற தொகுப்புகள் ஏதோ ஒரு உற்ற நண்பன் அருகில் இருந்துகொண்டு சொலவாடுவதை போன்ற ஒரு மயக்கநிலையை தரும் உணர்வைக்கொடுக்க வல்லது. அவரின் மொழி நடை, எழுத்து வசியம், கடினமான் அறிவியல் வார்த்கைகளைக்கூட அநாயசமாக உபயோகப்படுத்தும் பாங்கு, என்று பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போனாலும், இங்கு சொல்ல வந்தது வேறு.  அவரின் எழுத்துக்களைத்தவிர்த்து  அவ்வப்போது ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், கல்கி, ரங்கராஜன், வேணுகோபாலன், எம்.ஜி.சுரேஷ், அசோகமித்திரன், இந்திரா சௌந்தராஜன், கி.ரா, வண்ணதாசன், சு.ரா, ஜெயகாந்தன், எஸ்.ரா என்று சமகாலத்தைய எழுத்தாளர்கள் சிலரின் புத்தகங்களை படித்திருந்தாலும், வாத்தியாரின் எழுத்துக்களை தொடர்ந்து அதிகம் பாதித்தது எஸ்.ராமகிருஷ்ணன் மட்டுமே.
 

பொதுவாக நாமே தேடி எடுத்ததை விட இதை படித்து பாருங்களேன் என்று பரிந்துரைக்கபட்ட புத்தகங்கள் பலவும் ஆதியோடு அந்தமாக வாசிக்கபட்டும் ரசனைக்கு ஒருவாறு தீனி போடுவதை போலவும் அமைந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அவ்வாறில்லாமல் நானே தேடி எடுத்ததில் முத்தாக அமைந்த ஒரு சில புத்தகத்தில் முக்கியமானது  தேசாந்த்ரி. ஏனெனில் அதுவே எனக்கு எஸ்.ராவை அடையாளம் காட்டியது. தலைப்பிற்கேற்றார் போல் தான்தோன்றியாக தான் மேற்கொண்ட பயணங்களை பற்றியான கட்டுரையே தேசாந்த்ரி. இதை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அப்படிக்கப்படியே மௌசையும் லேப்டாப்பையும் அதே இடத்தில் வைத்துவிட்டு, கையில் எவ்வளவு காசிருக்கிறது என்றோ, சாப்பாட்டுக்கு நேரமாகிவிட்டதா என்றோ, எங்கே செல்கிறோம் என்ற இலக்கில்லாமல் ஒரு பயணத்தை உங்களால் தொடங்க முடியுமா? ஆனால எஸ்.ரா. இதேபோன்று தொடங்கிய பல பயணங்கள், காடு, மலை, நெடுஞ்சாலை என்று சுற்றித்திரிந்த அனுபவங்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒரு மலை வாழ் மக்களின் வீட்டில் எதிர்பாரா உறவினராக ஓர் அன்னியனாக நுழைந்து இரவு உணவருந்தி பின் அதே இரவில்  அவர்களிடம் ஒரு நண்பனாக அளவளாவி என திகைக்கவைக்கிறார்.  
 
இந்த போக்கே முதலில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையயும் அதன் பின் அவரின் பாலுள்ள மதிப்பையும் கூட்டுகிறது, ஒவ்வொரு வார்த்தையும் அவரது மனதின் அடியாழத்திலிருந்து துளிர்த்து எழுந்தவை என்பதை அறுதியிட்டு கூறமுடியும். அவரின் சொல்லாடல், அழுத்தமான வார்த்தைப்ப்ரயோகம், அடர்த்தியான அர்த்தம் கொண்ட கருத்துக்கள் எனப்பல அவரின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் அடையாளங்கள்.

அவருடைய மற்றைய தொகுப்புகளான சிறிது வெளிச்சம்’, மலைகள் சப்தமிடுவதில்லை’, அதே இரவு அதே வரிகள்’, விழித்திருப்பவனின் பகல்’, துணையெழுத்து என ஒவ்வொன்றும் ரத்தினங்கள். ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்தெடுத்த சிப்பிக்குள்ளிருக்கும் முத்துக்கள். சில சந்தோஷத்தின் வெளிப்பாடாகவும், சில வலிகளோடு போராடுவனவாகவும், சில துக்கத்தின் பாடலாகவும் சில உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் ஆதார உணர்ச்சிகளை வெளிக்கொணருபவையாகவும் நம்முள் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டும் முகத்தில் உறைந்தும் விடுகின்றன. ஒவ்வொரு வார்த்தைகளையும் கண்கள் அள்ளி அள்ளி விழுங்கிவிடுகின்றன. வாழ்க்கையின் உன்னதங்களை பட்டியிலுடுகின்றன. ஆறாத ரணத்தையும் ஆற்றுபடுத்துகின்றன. உணர்வுகள் ஊற்று போல் பீறிடுகின்றன.

சுஜாதாவிற்கு அடுத்து இப்பொழுது எஸ்.ரா என்ற பெயர் கொண்ட புத்தகங்களை எங்கு பார்த்தாலும்  வாங்கிவிட வேண்டும் என்று ஆவல் முற்படுவதை தவிர்க்கமுடிவைல்லை.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read