ஆதிகாலம் முதலாய் மனிதனை பயம் கொள்ளச்செய்ய பல்வேறு சாத்தியக்கூறுகள் புற உலகில் விரவி கிடந்தாலும் த்ரில்லர் வகை படங்களை இயக்கும் ஜாம்பவான்கள் நம்புவது ஒரே கோட்பாட்டைத்தான். அது, உங்களுள் இருக்கும் பயத்தை வெளிக்கொணரச்செய்வது மட்டுமே. இதுநாள் வரை மனிதன் தீய சக்திகளை புறவெளியில் கண்டு பயந்ததை விட, தன் மனத்தினுள் அதெற்கென தான் கொடுத்து வைத்த பிம்பத்தை கண்டு பயந்ததே நிஜம். அதுவே நிதர்சனமும் கூட. சற்று நிதானமாக யோசித்து பார்க்கையில், பேய் பிசாசு, கொலைகாரன், சைக்கோ, திருடன், கற்பழிப்பவன், என்று பலரது பிம்பங்கள் திடமானதொரு உருவம் கொடுத்து நம் மனதினுள் ஆழ பதித்துள்ளோம். குளத்தில் கல்லெறியும்பொழுது மேலெழும்பி வரும் கலங்களை போல, நம் மனதினுள் இருக்கும் இப்பிம்பங்களை எழுப்பும் ஏதேனும் ஒரு திகில் காட்சியில் அடங்கியிருக்கிறது இயக்குனரின் அப்படத்திற்கான வெற்றி.
 

 ‘The Descent’, ‘Identity’, ‘Vacancy’, ‘Wrong Turn’ போன்ற த்ரில்லர் படங்களை பார்த்திருந்தாலும் அதிக பாதிப்பு ஏற்பட்டது இல்லை. ஆனால் சமீபத்தில் பார்த்த ‘Rec’, ‘Rec 2’, ‘Ils’, ‘Session 9’ ஆகிய நான்கு படங்களும் த்ரில்லர் பிரியர்களுக்கு ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியை தரும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறேன். ‘Rec மற்றும் Rec 2 ஸ்பானிய மொழி பேசும் படம். ஒரு பெண் ரிபோர்டர் அந்த வார கவரேஜுக்காக தீயணைப்பு படை வீரர்களை பேட்டி காணச்செல்கிறாள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு வீட்டிலிருந்து உதவி கேட்டு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதற்கு பின் வரும் பல காட்சிகள் மயிர்க்கூச்செறியும் விதத்தில் படமாக்கபட்டிருப்பதை ஒரு ISD போட்டாவது பாராட்டியே ஆக வேண்டும். படமாக்க உதவியிருக்கும் ஹேன்ட் ஹெல்ட் கேமராவின் பங்கு அளப்பரியது. ‘ILS’ ஒரு ஃபிரெஞ்சு மொழிப்படம். தனியாக வீட்டில் இருக்கும் ஒரு தம்பதியினர் சில நேரம் கழித்து தாம் தனியாக இல்லை என்று உணர்வதிலிருந்து வேடிக்கை ஆரம்பிக்கிறது. இவையெல்லாவற்றையும் விட அதிகம் ரசித்தது ‘Session 9’ சுத்தமான அக்மார்க் சைக்கலாஜிக்கல் த்ரில்லர். ஒரு பாழடைந்த மனநல மருத்துவமனையை செப்பனீடு செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழு வருகிறது. மருத்துவமனையின் பல இடங்களை நுட்பமாக காட்சியமைத்தும் அதன் பழைய கோரமான வரலாற்றை கதாபாத்திரத்தின் வழியாக மிக மெதுவாக மற்றும் அழுத்தமாக நம்மீது திணிக்கிறார் இயக்குனர். படத்தின் பின் பாதி நம்முடைய பல்ஸை எகிற வைக்கிறது. சமீபத்தில் பார்த்த ஆக சிறந்த த்ரில்லர்.
இவை அனைத்து படங்களையும் இரவில் தனியாக ஹெட்செட் மாட்டிக்கொண்டு முதுகெலும்பில் ஏற்படும் ஒரு ஜில்லிப்பு உணர்வுடன் பார்த்து பயந்த அனுபவம் உண்டு.

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘The Conjuring’ பலத்த வரவேற்பையும் ரேட்டிங்கையும் பெற்றிருப்பதை கண்டு, அதை ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தில் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தில் காணலாம் என்று முடிவெடுத்தது பெரும் தவறு என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். திகில் நிறைந்த காட்சிகள் வருகிற ஒரு இடத்தில், ‘வாங்கன்னா வணக்கங்கன்னா’ என்ற அருகிலிருந்தவரின் ரிங்டோன் மூடை சரியாக சொல்லிவைத்தார் போல் கெடுத்து வைத்தது. போதாக்குறைக்கு லேஸ் பாக்கெட்டின் சலசலப்பு, குழந்தையின் அழுகை, முந்தின ரோ கப்புள் சீட்டில் உட்கார்ந்திருந்த ஜோடியின் சில்மிஷம் என்று, அதுவும் இருட்டாக காட்சி வரும்போதெல்லாம் அவன் அவளை முத்தமிட முயல ‘டேய் என்னடா பண்ற’ என்று சில இடங்களிலும்,’ எந்த படத்தை பார்ப்பது என்று சில இடங்களிலும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. ஒரு முறை பார்த்த த்ரில்லர் படத்தை மறுமுறை பார்ப்பது திரில்லருக்கு செய்யும் துரோகம் என்பதலால், தியேட்டரில் இதன் பிறகு த்ரில்லர் படங்களை பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
See More

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read