நேர்மையின் சிகரமாய் கடந்த ஐந்து வருடங்கள் தொழிலாளர் நலனுக்காக பணியாற்றி தேர்தலிலும் தொழில் சங்கத்தலைவராக வெற்றி பெற்ற நல்லசிவத்தை தீர்த்து கட்ட முடிவெடுத்திருந்தான் சண்முகம்.

காலை எழுந்ததும் கோடை விடுமுறைப்பயணமாக மலைவாசஸ்தலம் போகின்றோம் என்ற நினைப்பே, பத்தாம் வகுப்பு படிக்கும் நகுலனுக்கு பெரும் உவகையாக இருந்தது. மரத்தின் மேல் அமைக்கபெற்றிருந்த ‘Tree Hut’ டில் ஏணியில் மூச்சு வாங்க ஏறுவதாக கனவு கண்டு கொண்டே வாயில் கோழை வடிய தூங்கிப்போனான்.

பிசாசு கூட உறங்கிருக்கும் நேரமான அதிகாலை மூன்று மணியை சண்முகம் தேர்தெடுத்திருந்தான். எட்டு பரோட்டாக்களையும் மூன்று ஆம்லேட்டுகளையும் முழுங்கிய பிறகு தெரு முனையின் பாய் கடையில் வாங்கியிருந்த பட்டன் கத்தியை சரவணா ஸ்டோர்ஸ் கவரில் சுருட்டி வைத்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்திருந்தான். கே.கே.நகர் விஜயாவில் அந்தரங்கம்என்று ஒட்டபட்டிருந்த போஸ்டரை ஒரு முறை திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.

நகுலன் வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தனர். 23’c என்று காமித்து கொண்டிருந்தது வோல்டாஸ் ஏ.ஸி.

ஒரு மணல் மூட்டையின் முன் நின்று கொண்டிருந்த சண்முகம், பட்டன் கத்தியால் இரண்டு முறை குத்திபார்த்தான். மணல் சரிந்து தரையில் கொட்டியது. சிரித்துக்கொண்டான். மீண்டும் குத்தி மணல் சரிந்து சிரித்தான். மீண்டும்....

பன்னிரெண்டு மணிக்கு எழுந்திருத்து, நகுலன் அப்பா ஒரு முறை மூத்திரம் போனார்.

இரவு இரண்டு மணிக்கு களைத்து போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். Teachers Whiskey மற்றும் 100 கிராம் இருபது ரூபாய்க்கு வாங்கிய சிக்கன் 65 இரண்டையும் ஒரு முக்காலியில் வைத்தான். ஒரு ரூபாய் பிளாஸ்டிக் டம்ப்ளரில் மிக்ஸிங் செய்ய ஆரம்பித்தான்.

நகுலனின் அம்மா மூன்று மணிக்கு எழுந்து எதற்கும் இருக்கட்டும் என்று காலை சாப்பாட்டிற்கு இட்லி ஊற்றி வைத்து ஒரு பழைய பிரஷ்ஷில் பல் துலக்க ஆரம்பித்தாள்.

சண்முகம் இந்த ரகசிய காரியத்தை தான் ஒருவனே முடிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான். இரண்டு பேர் செய்தால் அது ரகசியமாயிராது என்பது மஷ்ரூம் கட் அடித்திருக்கும் அவன் தலைக்குள் இருக்கும் மூளை நியாபகப்படுத்தியது.

நகுலனின அப்பா டிரைவிங் சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அருகில் நகுலன், தம்பி அகிலன் மற்றும் அம்மா பின் சீட்டில் உட்கார தெரு முனைவரை கௌசல்யா சுப்ரஜாஎன்று பக்தியுடன் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி பாடிக்கொண்டிருந்த்.......நகுலன் சிடியை மாற்றி என்னமோ ஏதோஎன்று ஆலப் ராஜூவை கூப்பிட்டான்.

மூன்று மணி இருபது நிமிடம் கழித்து நல்லசிவத்தின் வீட்டிற்கு நடந்தே வந்திருந்தான் சண்முகம். உள்ளே சென்றிருந்த Teacher லேசாக வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். அவனுக்கு சாவி எப்படி கிடைத்தது என்பது முக்கியமில்லை என்பதால். அவன் இப்போது கதவை திறந்திருந்தான்.

எப்டியும் ஆறு மணிக்கு போயிடலாம் என்றார் நகுலனின் அப்பா. அந்த அகால வேளையில் லேஸ் ஸ்பானிஷ் டொமாட்டோ பாக்கெட்டை உடைத்திருந்தான் அகிலன்.

Rigar Mortis வந்த பிணம் போல் கை காலை நீட்டி நெற்றியில் மூன்று பட்டையுடன் விரைப்பாய் படுத்திருந்தார் நல்லசிவம்.  அவர் படுத்திருந்த கோலத்திற்கு வேஷ்டி சிறிது விலகி உள்ளே ஏதூம் போடவில்லையோ என்று தனக்கு எழுந்த சந்தேகத்தை தூர வைத்து பட்டன் கத்தியை வெளியே எடுத்தான் சண்முகம்.  

இன்னும் ஸ்பீட் இன்னும் ஸ்பீட் என்ற நகுலனிடம், இதற்கு மேல் வேகமாக போக முடியாது என்று அம்பதை தொட்டு கொண்டிருந்தார். அடுத்த லேஸ் பாக்கெட்.

தான் கொண்டு வந்திருந்த கைக்குட்டையால் அவர் வாயை மூடி வயிற்றில் ஒரு குத்து. இரண்டு சதக் கேட்டது. கழுத்தில் ஒரு குத்து. மீண்டும் இரண்டு சதக்.

மூன்று பேரின் ஒருமித்த கருத்தால் நகுலனின் அப்பா காரை ஓரங்கட்டி நகுலனிடம் ஓட்ட கொடுத்தார். தேநீரில் சிநேகிதம்என்று ஜேம்ஸ் வசந்தன் பீட்டை அதிகரிக்க ஆக்சிலேட்டரில் ஒரு காலால் ஏறி நின்று நூற்றியிருபதை தொட்டு அனைவரையும் பரவசபடுத்தினான். லைசென்ஸ் இல்லை.

நல்லசிவம், நல்லசிவம் என்று குனிந்து காதுக்கருகில் கூப்பிட்டான். தன் சுபரிசோதனையில் திருப்தியுற்று நிமிர்ந்த சண்முகம், கடமுடா என்ற சத்தம் போட்ட தன் வயிற்றை தடவி அபான வாயுவை சத்தமில்லாமல் வெளியேற்றி, திரும்பி மணி பார்த்த பொது நாலு பத்து என்று காட்டியது.

கார் அதே நூற்றியிருபது.

வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு, அரவமில்லாமல் தெருவை கடந்து வந்தான். விழித்திருந்த தேநீர் கடையில் டீ குடிக்கலாமென்ற யோசனையை ‘’குடி (டீ) குடியை (Teacher) கெடுக்கும் என்பதால் விட்டுவிட்டான். Teacher அதிகமாக வேலை செய்ய, நடையில் அதிகம் தள்ளாடினான்.

அந்த ஹைவேயின் குறுகலான திருப்பத்தை கட்க்க தள்ளாடிக்கொண்டே சாலையை அளந்தான். திருப்பம் வருகிறது என்று தெரிந்தும் நூற்றியிருபதை குறைக்காத நகுலன் காரை திருப்பவும் சண்முகம் சாலையை கடக்கவும், கன நேரத்தில் இருவரும் இருவரை கவனிக்கமுடியாது போய், லப்டப் சத்தம் காது வரை கேட்டு காரில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டான். லப்டப் நின்றிருந்தது. நூற்றிநாற்பதில் போ என்றார் நகுலனின் அப்பா, படபடப்புடன்.

 

 

 

 

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read