பன்னிரெண்டு ஆழ்வார்களையும் அவர் தம் பாசுரங்களை சொல்லும் நாலாயிர திவ்விய பிரபந்தத்தையும் வாசகர்களுக்கு எளிதாக சொல்லும் ஒரு அருபெரும் முய...ற்சியே இந்த நூல். வழக்கம் போல சுஜாதா தன் பாணியில் போற போக்கில் க்வாண்டம் சயின்ஸ், காஸ்மலஜி என்று விளக்குவது ஸ்வாரஸ்யம்.
 

 ஆழ்வார்களை படித்தவரை, நாராயணன் தவிர வேறொரு தெய்வம் இல்லையென்று கூறும் ஒரு adamancy தெரியவருகிறது. இங்கிருப்பவனும் அவனே, இல்லாதிருப்பவனும் அவனே என்று யாதும் யாதுமாகி போற்றி புளகாங்கிதம் அடையும் ஒரு அற்பணிப்பு. நாலாயிர திவ்விய பிரபந்தமாகட்டும், திருவாசகமாகட்டும் இவை எல்லாவற்றிலும் காணப்படும் உவமை கற்பனைக்கெட்டாதது. பிடித்த அல்லது வியந்த சில Genre களை கீழே தருகிறேன்.

'கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்'

திருமழிசை ஆழ்வாரும் அவர் தம் சிஷ்ய பிள்ளை கனிகண்ணனும் ஒரு கிழவியை குமரியாக்குகிறார்கள். இதை தெரிந்துக்கொண்ட அரசன், தன்னையும் குமாரனாக்க வேண்டும் என்று திருமழிசை ஆழ்வாரை பணிக்கிறான். முடியாது என்கிறார் ஆழ்வார். இருவரையும் நாடு கடத்துகிறான் அரசன். வெகுண்டெழுந்த திருமழிசை ஆழ்வார், கனிகண்ணனும் கிளம்பிவிட்டான், புலவன் நானும் கிளம்புகிறேன், மாதவா நீயும் இங்கு கிடக்க வேண்டா, உன் பாம்பு பாயை (ஆதிசேஷன்) சுருட்டிக்கொண்டு கிளம்பு என்கிறார். திருமாலும் கிளம்ப. லக்ஷ்மியும் பின் செல்ல, மற்ற பூதகனங்களும் கிளம்பிவிடுகின்றன. அதன் பின் நாடே சுபிக்ஷமற்று போய்விடுகிறது. இதை உணர்ந்து அரசன், ஆழ்வாரிடம் மன்னிப்பு கோர, பின் திருமாலை,

'கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டா
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்'

நீ திரும்ப வந்து படுத்துக்கொள் என்று பணிக்க, அவரும் வந்து தான் அனந்த ஷயணத்தில் படுத்துக்கொள்கிறார். தன் பக்தன், கிளம்பு என்றால் கிளம்பவும், வந்து படுத்துக்கொள் என்றால் படுத்துக்கொள்ளவும், திருமால் செவி சாய்க்கிறான் என்று ஒரு friendly attribute கொடுத்திருப்பது இதன் தனிச்சிறப்பு.

உவமைக்கு எடுத்துக்காட்டாக, குலசேகராழ்வாரின்,

'வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே'

(பிரித்து படிக்கவும்). வாளால் அறுத்து சூடு போட்டாலும் வைத்தியன் பால் நோயாளி கொண்ட நீங்காத அன்பு போல், நீ பல வித துன்பங்களை கொடுத்தாலும், உன்(திருமால்) மேல் உள்ள காதல் மாறாது என்கிறார்.

அடுத்ததாக பெரியாழ்வாரின்.

'சோர்வினால் பொருள் வைத்ததுண் டாகில் சொல்லு சொல்லென்று சுற்று மிருந்து
ஆர்வி னாவிலும் வாய்திற வாதே அந்தக் காலம்அடைவதன் முன்னம்
மார்வ மென்பதோர் கோயி லமைத்து மாத வனென்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வ மென்பதோர் பூவிட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலு மாமே'.

வயதான காலத்தில் சுற்றம் சூழ நின்று, சொத்து எங்கிருக்கிறது எங்கிருக்கிறது என்று வினவ, தன் தள்ளாத வயதின் காரணத்தினால் அதற்க்கு கூட பதில் கூற முடியாத நிலை வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பே உன் நெஞ்சில், திருமாலுக்கு ஒரு கோவிலெழுப்பி மலரினால் அர்ச்சனை செய்யக்கடவாய் என்கிறார்.

ஆழ்வார் பாசுரங்களிலேயே ஆண்டாளுக்கு தனி சிறப்பு உண்டு. திருமாலையே தன் கணவனாக எண்ணி, பல பாசுரங்களை பாடியவர் இவர். தன் தந்தையார்(பெரியாழ்வார்), திருமாலுக்கு தினம் பூத்தொடுக்க, அந்த மாலையை தனக்கு சூடி அழகு பார்த்து பின் திருமாலுக்கு அணிவிக்கிறார். இது ஒரு நாள் தந்தைக்கு தெரிந்துவிட, இதை தடுக்கிறார். ஆண்டாள் அணிந்து பின் கொடுக்கும் மாலையே தனக்கு உவப்பானது என்று பெரியாழ்வாரின் கனவில் திருமால் கூற, ஆண்டாளை அழைத்து கொண்டு, ஸ்ரீரங்கம் செல்ல, ஆண்டாள் நேராக கருவறையை அடைந்து இறைவன் திருவடி சேர்கிறார்.

ஆண்டாளின் அனைத்து பாடல்களிலும், தன்னை கடவுளுக்கு முழுதும் அர்ப்பணித்த ஒருவகை pure dedication தெரிகிறது. அவரின் ஒரு பாடல்,

'கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே'

திருமாலின் வாயிலிருக்கும் வெண்சங்கை பார்த்து, அவரின் வாய்ச்சுவையை சொல்லமாட்டாயா என்று கேள்வி கேட்குமாறு அமைந்திருக்கிறது. காதலர் தினத்தை ஆண்டாள் தினமாக மாற்றலாம் என்று கூறுமளவுக்கு சுஜாதா மேற்கொளிடுகிறார்.

சமீபத்தில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’ திரைபடத்தில் வரும், ‘உனை காணாத’ என்ற பாடலில் வரும் பல வரிகள் (அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாணுவெண், இங்கு பூலோகம் என்றொரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாலடி) கூட ஆண்டாள் பாடிய genre போல ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. பிர்ஜு மஹாராஜின் நடனம், தப்லாவின் இசை, கமலின் நளினம் என் இந்த பாடல் ஆண்டாளை முன்னிறுத்துகிறது என்றால் மிகையல்ல.

வெண்பா, திருச்சந்த விருத்தம் சந்தம், எட்டு சீர், ஆசிரியப்பா, கலியவிருத்தம் என்று சுஜாதா, அவ்வப்போது தட்டிவிடுகிறபொழுது, இது தெரியாமல் முழித்து கொண்டு, ஒரு விதமான shame feeling வருவதை தவிர்க்கமுடியவில்லை.

எவ்வாறாகினும்,ஆன்மிகம், திருமால், பக்தி இத்யாதி போன்ற காரணங்களை தவிர்த்து தமிழின் சுவைக்காகவாவது நாலாயிர திவ்விய பிரபந்தத்தை ஒரு முறை முயற்சி செய்யலாம்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read