சமீபத்தில் அகஸ்மாத்தாக நடந்த இரு சம்பவங்கள் நினைவுக்கு வரவும் நண்பனிடம் பகிர்ந்துகொண்டிருந்தேன். ஒன்று, சில மாதங்களுக்கு முன்னாள் எங்கள் கம்பெனியிலிருந்து வேறு ஒரு கம்பெனிக்கு தாவியவர். இங்கிருந்து கழன்று சென்ற பின் ஒரு முறையேனும் போன் காலோ, மெய்லோ இல்லை. சில நாட்கள் கடந்த பின்பு அவரை பற்றிய ஞாபகம் குறைந்து போனது. நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். ஒரு மூன்று நாட்களாக அவருக்கு போன் செய்ய வேண்டும்... என்ற ஒரு எண்ணம் எழுந்திருந்தது. நினைவு வரும்பொழுது கால் செய்ய முடியாத சூழலிருக்கும். தோதுவான நேரம் வரும்பொழுது கால் செய்யும் ஞாபகம் இராது. சரியாக மூன்றாவது நாள் ஒரு நம்பரிலிருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசினால் அதே நண்பர்.

‘என்ன சார். உங்களுக்கு தான் போன் பண்ணணும்னு நினைச்சிட்டே இருந்தேன். ஆனா நேரம் சரியா அமையல.’

‘அதே தான் பாஸ். ஒரு மூணு நாளா உங்க ஞாபகம் வந்தது. சரி எப்டி இருக்கீங்கனு கேக்கலாம்னு போன் பண்ணினேன்’ என்றார்.

பரஸ்பர விசாரிப்புகளுடன் உரையாடல் முடிந்தது.

சம்பவம் இரண்டு. துபாய்க்கு வேலை சென்ற மறு நாளே போட்டோ, மெசேஜ் என்று வாட்ஸ் அப்பில் கலக்கிய உறவுக்காரப்பைய்யன் கடந்த ஒரு வருடமாக அட்ரெஸ் இல்லாமல் இருந்தான். பேஸ்புக்கிலாவது தேடி பிடிக்கலமென்று கொஞ்ச நாளில் அதிக சிரமமில்லாமல் மறந்தே போனேன். இரு நாட்களுக்கு முன் பழைய ஆல்பங்களை புரட்டி கொண்டிருந்தபோது கண்ணில் பட்டான். போன் பண்ணலாமென்று நினைக்கையில் துபாய் நம்பர் தெரியவில்லை. வாட்சப்பில் மெசேஜ் செய்யலாமேன்றால் போனை சமீபத்தில் தான் ரீசட் பண்ணிருந்தேன். இதே நினைவாக அந்த நாள் ஓடிவிட, மறு நாள் போனில் ஒரு ISD அழைப்பு. எடுத்து பேசினால் துபாய் பைய்யன்.

இந்த இரு சம்பவங்களும் அண்மையில் நடந்தது, முன்னொரு காலத்தில் படித்த ‘மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி’ மற்றும் தொலைவில் உணர்தல் புத்தகங்களை ஞாபகமூட்டின. ஆசிரியர் மறைமலையடிகள். புகழ்பெற்ற தமிழறிஞர். ஆய்வாளர். டெலிபதி மூலமாக தனது சிஷ்யனிடம் மற்றொரு நாட்டிலிருந்து தகவலை பரிமாறிக்கொண்டவர். அவரது இவ்விரு புத்தகங்களை படித்தால் மனிதன் தமிழாராய்ச்சி செய்தாரா அல்லது மாந்திரீகத்தில் ஆராய்ச்சி செய்தாரா என்று சந்தேகமெழுமளவுக்கு எழுதியிருப்பார்.

இப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசிட்ருந்தா பக்கத்தில இருந்த அந்த பக்கி, ‘மச்சான் ஒரு மூணு நாளா எனக்கு பராக் ஒபாமா நினைப்பாவே இருக்குது. அவரு எனக்கு கால் பண்ணுவாரானு?’ கேக்குது.

என்னா ஒரு வில்லத்தனம். நீயெல்லாம் என் ஆஃபிஸ் கேண்டீன்ல போடுற பொங்கல் சாப்டே செத்துபோய்டுவனு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read