திருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது, அது ஏதோ ஆழ்வார், திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித்திருந்தேன். அந்த கணிப்பை அடித்து நொறுக்கியது போல் இருந்தது அதை பற்றி தெரிந்து கொண்டபோது. திருவரங்கன் உலா ஒரு காரணப்பெயர். திரு அரங்கனின் உலாவே திருவரங்கன் உலா. அரங்கன்- ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவன். உற்சவர். எழுதியவர் ஸ்ரீ வேணுகோபாலன். இந்த பெயர் புதியதாக தோன்றினால், புஷ்பா தங்கதுரை என்ற பெயர் கேள்விபட்டது போல் இருக்கிறதா? அவரே தான் இவர். புஷ்பா தங்கதுரை இவரது புனை பெயர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.

திருவரங்கன் உலா என்றதும் ஏதோ உற்சவரை பல்லக்கில் உட்காரவைத்து அதன் பின் பாசுரங்கள் பாடிச்சென்றதை பற்றி என்று நினைத்தால், இல்லை. கி.பி. 1300 ஆம் ஆண்டு, சுல்தானியர்கள் படை தெற்கே படையெடுத்து வந்தபோது, நாட்டை கைப்பற்றியதோடல்லாமல் கண்ணில் தென்பட்ட கோவில் கோட்டை என்று எல்லாவற்றையும் சூறையாடினார்கள். குழந்தைகள் பெண்கள் என்று பாகுபாடின்றி துவம்சம் செய்தார்கள். அவர்களிடமிருந்து விக்கிரகங்களை காப்பாற்றி சிலர் மண்ணில் புதைத்து வைத்தார்கள், சிலர் கையில் தூக்கிக்கொண்டு கண் காணாத இடத்திற்கு ஓடினார்கள்  திருவரங்கத்தில் இப்பொழுது நீங்கள் தரிசிக்கும் அரங்க விக்கிரகம் அவ்வாறு தூக்கி செல்லபட்டு சுமார் அறுபது ஆண்டுகள் பல இடங்களில் சுற்றி திரிந்து பின்னர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பட்டது. இதுவே திருவரங்க உலாவக வடித்திருக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

முதல் இரண்டு பாகம் திருவரங்கன் உலாவாகவும், அதைத்தொடர்ந்து பின்னிரு பாகங்கள் மதுரா விஜயமுமாக படைத்திருக்கிறார். ஆரம்பித்த இரு பக்கங்களிலேயே குதிரை பாய்ச்சலாக கதை செல்கிறது. ஒரு இடமேனும் தொய்வில்லை. பொன்னியின் செல்வன் மற்றும் சிவாகமியின் சபதம் தொடர்ந்து மிக ஆவலுடன் படித்த ஒரு வரலாற்று பெட்டகம்.

குலசேகரன், திருவரங்கன் உலாவின் கதாநாயகன்.. குலசேகரனின் எச்சரிக்கையின் (சுல்தானியர்கள் படையெடுப்பு) பேரில் ஸ்ரீரங்கமே அரங்கனை தூக்கி கொண்டு ஓடுகிறது. ஒரு குழு ஸ்ரீரங்கத்து கோவிலை காக்க பின் தங்கி விடுகிறது. அடுத்த நூறு பக்கங்களுக்கு, ஒரு சிறு படையை வைத்து கொண்டு, சுல்தானியர்களின் படையிடம் அவர்கள் போரிட்ட விதத்தை மயிர் கூச்செரியும் விதத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் விளக்கியுள்ளார். கோவில் மதில் சுவரை கோட்டையாக, கொதிக்கும் எண்ணை மற்றும் தீப்பந்தத்தை ஆயுதமாக, முள்செடியே அரணாக, சாதாரண பாமர மக்களின் போருதவி என பல விடயங்கள் ஆச்சர்யத்தை அளிக்கின்றன.

இந்த சுல்தானியர்கள் திருவரங்கத்தின் மீது படையெடுத்ததற்கான காரணமே அலாதியானது. கி.பி. 1300 ன் ஆரம்பத்தில் சுல்தானியர் படையெடுத்து வந்து தெற்கை நாசபடுத்தி பல ஆபரணங்களை கொள்ளை அடித்து சென்றனர். அவ்வாறு எடுத்து செல்லபட்டவையில் திருவரங்கனின் விக்கிரகமும் ஒன்று. கொள்ளையடிக்கபட்ட பொருள்களெல்லாம் தில்லி கோட்டையில் பத்திரப்படுத்தபட்டன. சுரதானி என்று அழைக்கபடும் ஒரு சுல்தானிய இளவரசி, அந்த விக்கிரகத்தை பார்த்துவிடுகிறாள். அதன் சௌந்தர்யத்தின் மீது தீராக்காதல் கொண்டு அதையே நினைத்து உருகுகிறாள். அல்லும் பகலும் அதனுடனே கழிக்கிறாள். இவ்வாறு இருக்கையில் திருவரங்கனை இழந்து தவிக்கும் திருவரங்க வாசிகள் தில்லிக்கு வருகிறார்கள். ஆடல், பாடல் என்று சுல்தானை மகிழ்விக்கிறார்கள். அதில் மயங்கிய சுல்தான் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, தாங்கள் எங்களிடமிருந்து எடுத்து சென்ற பொருள் வேண்டும் என்று சொல்ல, சுல்தானும் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருவரங்க வாசிகள், விக்கிரகத்தை தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக திருவரங்கத்திற்கு வந்து சேருகிறார்கள். திருவரங்க விக்கிரகம் காணாது திகைக்கும் சுரதானி, ஒருவாறு உண்மையை தெரிந்து கொண்டு, ஒரே ஓட்டமாக திருவரங்கத்திற்கு வந்து சேர்க்கிறாள். அங்கே ஜோதியாய் வீற்றிருக்கும் அரங்கனை தரிசித்து அதே இடத்தில் மாண்டு விடுகிறாள். இதை கேள்விபட்ட சுல்தான், அந்த விக்கிரகத்தில் ஏதோ வசியம் இருக்கிறது என்று, அதை மீண்டும் கைப்பற்ற படையெடுத்து வருகிறார். அதன் பின்பு அரங்கனது விக்கிரகம் எவ்வாறு தப்புவிக்கபட்டது என்பதே திருவரங்க உலாவின் கதை. இல்லை இல்லை. வரலாறு. இந்த சுரதானியே, துலுக்க நாச்சியார் என்று பெயர் பெற்று கோவில் மதில் சுவரில் காட்சி தருகிறாள். Wiki Link

திருவரங்கனை தப்புவிக்க எவ்வாறெல்லாம் பிரயத்தனபட்டார்கள் என்று படித்தறியும்பொழுது சொல்லோன்னா வியப்பை அளிக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சிறு கிராமமாக அரங்கனை தூக்கி சென்றவர்கள், பின்னாளில் போரில் அடிபட்டோ, வயதான காரணத்தினாலோ, ஒவ்வொருவராக மடிந்து, இறுதியில் ஐந்து பேர் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அந்த ஐவரும் கொடவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள். சிங்கழகர், ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசர் என அந்த ஐவரின் பெயரையும் குறிப்பிடுவது, ஸ்ரீ வேணுகோபாலின் அற்பணிக்கபட்ட ஆராய்ச்சியை பறை சாற்றுகிறது.

ஒரு கட்டத்தில் அரங்கனை தூக்கிக்கொண்டு அவர்கள் மலை மீது ஏற முற்பட, சுல்தானிய படைகள் பார்த்துவிடுகிறார்கள். எப்பாடுபட்டாவது அரங்கனை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் இலை, கொடிகளை கயிராக திரித்து தன் உடம்பில் அரங்கனை அணைத்துக்கொண்டு கயிரை கட்டி, மலை மீதிருந்து உருண்டு மாண்டு விடுகிறார், ஒரு கொடவர். அவரது பிராயம் சுமார் எண்பது ஆண்டுகள். அதன் பிறகு கீழ் வரும் கொடவர், அந்த அரங்கனை எடுத்துக்கொண்டு சுல்தானிய படைகளிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் சென்று விடுகிறார். சுமார் இருபது ஆண்டுகள் தன்னந்தனியாக அரங்கனோடு, நிதமும் காட்டு கனிகளை கொண்டு நிவேதனம் செய்து, சித்தப்ரம்மையுடன் அரங்கனை போற்றி காத்து வருகிறார். ஆசைகளை அறவே அறுத்து அரங்கன் மீது அவர்கள் கொண்டுள்ள பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

அரங்கனை மீண்டும் கோவிலில் எழுப்ப ஒய்சள வள்ளலார், மதுரை மீது தொடுத்த படையெடுப்பின் மூலம் அவரது வீரமும் (சுமார் எண்பது பிராயம்) மற்றும் சுல்தானின் வஞ்சகத்தால் ஏமாற்றபட்டு கொலை செய்யப்பட்டதையும் வரலாற்றை ஒட்டியே பயணித்து ஆசிரியர் விவரிக்கிறார்.

முதல் இரு பாகத்தில் குலசேகரன் மற்றும் ஹேமாலேகாவின் பிரேமையும், பிந்தைய இரு பாகங்களில் வல்லபன் மதுராவின் பிரேமையும் கண்ணில் நீர் சொறியவைக்கின்றன. இருவரது காதலும் நிறைவேறவில்லை. மதுரா வல்லபனை மணக்காது ஒரு இளவரசனை மணந்து கொண்டதை கண்டு துக்கிக்கும் வல்லபன் மற்றும் வாசகர்களை, மதுரா சொல்லும் காரணங்கள் சமாதானபடுத்துவதோடு மட்டுமில்லாது மதுராவின் நியாயங்களையும் நிலை நாட்டிவிடுகின்றன. தூய பிரேமையை வெளிபடுத்துகின்றன.

திருப்பதியில் கட்டப்பட்டிருக்கும் அரங்க மண்டபம், அரங்கன் சில நாட்கள் திருப்பதியில் தங்கியிருந்த காரணத்தினால் எழுப்பபட்டிருக்கிறது. மேலும், சுல்தானை மது மாதுகொண்டு மயக்கி, அவரை பலவீனமாக்கிய கங்கணர் (விஜயநகர அரசர்), கண்ணனூர் மீது படையெடுத்ததின் (இப்போதைய சமயபுரம்) காரணமும், அரங்கனை மீண்டும் ஸ்தாபிக்கத்தான் என்று தெரிய வருகிறது.

அரங்கனை ஸ்தாபித்த பின், விஜயநகரம், மதுரயை நோக்கி படையெடுத்து செல்கிறது. மதுரையை கைப்பற்றி, மீனாக்ஷி கோவிலை மீட்டெடுத்து, இப்போதிருக்கும், பல கோபுரங்களை ஸ்தாபித்தனர்.

அரங்கன் இல்லாத நாற்பது வருடங்களும், திருவரங்க மக்கள் இன்னொரு அரங்க மூர்த்தியை வழிபட ஆரம்பித்திருந்தார்கள். முதல் தலைமுறை அழிந்து இரண்டாவது தலைமுறை நடந்து கொண்டிருந்தது. அரங்கனது கதையை எடுத்து சொல்ல ஊர் பெரியவர்கள் யாருமில்லை. இதன் காரணத்தினால், நாற்பது வருடங்கள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்த மூர்த்தியை, இவன் நமது அரங்கன் தானா என்று சந்தேகிக்கிறார்கள். அச்சமயம், அங்கு வந்து தேசிகர், ஒரு உபாயம் கூற, அவ்வூரிலேயே மிக வயதான ஒருவரை அழைத்து வருகிறார்கள். ஆனால் அவருக்கோ கண் பார்வை பறி போயிருக்கிறது. இருந்தும் அவர் அரங்கனை கண்டுபிடிக்க ஒரு வழி சொல்லுகிறார். அரங்கனின் அபிஷேக நீரை தீர்த்தமாக பருகியிருப்பதால் இரண்டு மூர்த்திகளையும் நீராட்டி, அதை கொணர சொல்லுகிறார். அரங்கனது மூர்த்தியில் இயல்பிலேயே ஒரு சுகந்தம் பரவியிருப்பதை அறிந்திருந்த அவர், திருவரங்கனை சரியாக அடையாளம் கண்டதையடுத்து வல்லபன் மற்றும் விஜயநகர சாம்ராஜியமே (போர் எடுத்த) சந்தோஷப்படுகிறது. இன்றும் அரங்க சன்னிதியில் இரு மூர்த்கிகளை தரிசிக்கலாம்.

மேலே கூறிய அனைத்தும் திருவரங்கன் உலா புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பெரியீர்காள்’, தேவரீர்’, பிள்ளைக்காள்’, சேவார்த்தி’, தேவர்மீன்’, பிள்ளைக்காள்’, என கி.பி. 1300 ஆம் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வந்த அனுபவத்தையும் அரங்கனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலையும் தருகிறது, திருவரங்கன் உலா.

4 comments:

இது வரைக்கும் வரலாற்று நாவல்கள் பெருமளவில் வாசிச்சதில்ல... ஆனா உன் விமர்சனம் படிச்சதுக்கப்புறம் இந்த புத்தகம் படிக்கணும்னு தோணுது.... கோயில், சம்பந்தப்படவைகளில் ஆர்வம் அதிகமோ? ;)

STD la konjam interest varuthu na

This comment has been removed by the author.

திருவரங்கன் உலாவின் அருமையான trailer தந்ததறகு மிக்க நன்றி. முழுக்கதையை படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீரகள் !!!

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read