உலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும், மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் மட்டுமே என்பது எனது தாழ்மையான கருத்து. கவனிக்க பொறியியல் துறை மத்தியில் மட்டுமே இந்த ஒப்பீடு.. சுட்டெரிக்கும் வெயில், புயல் மழை, குப்பை, மண், தூசி, மற்றும் இயற்கை சீற்றங்களை உள்வாங்கிக்கொண்டோ அல்லது சகித்து கொண்டோ வேலை செய்தாகவேண்டிய கட்டாயம் கட்டுமான பொறியாளர்களை மட்டுமே சாரும். கட்டுமான பொறியாளர்கள் என்று நான் இங்கு பொதுவாக குறிப்பிடுவது சிவில், மெக்கானிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளை. மின் நிலையங்களோ, கப்பல் கட்டுமான தளங்களோ, தேசிய நெடுஞ்சாலை, மெட்ரோ என எந்தவொரு வேலையாகட்டும் இவர்களின் பாடு சொல்லி மாளாது.
வாரத்திற்க்கு ஐந்து நாள் மட்டும் கம்ப்யூட்டர் பொட்டியை தட்டும் வேலையை விட்டுவிட்டு, வாராத்தின் ஏழு நாளும் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையை எண்ணி நொந்து கொள்ளாத நாளே இல்லை எனலாம். வாரத்தின் எல்லா நாட்களும் திங்கள் கிழமையாகவே தோன்றுவது ஒரு நரக வேதனை. இக்கரைக்கு அக்கரை பச்சை தானேன்றாலும், இங்கு கரையே இல்லையே காலூன்ற. வந்து பார்த்தாலன்றி முழுவதும் உணர்ந்து கொள்ளல் சிரமம். அதுவும் கார்பரேட் வசதிகளை சில காலம் அனுபவித்து விட்டு இந்த கச்சடாவில் மீதி வாழ்வை கழிப்பது நித்தம் நித்தம் ஒரு சாதனையாகவோ அல்லது சோதனையாகவோ இருக்கிறது. தற்சோதித்ததில் சில.

1.   கட்டுமான தளங்களில் இருக்கும் இந்நிறுவனங்களில், இயற்கை உந்துதலை கழிப்பதற்கு ஏதேனும் அடிப்படை வசதிகள் இருந்ததேயானால் அதை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதலாம். ஏனெனில் ஒரு நாளின் தொண்ணூறு சதவீதத்தை பகலவனின் நேர் கண்காணிப்பில் கழிப்பதால், அங்கு வளரும் மரம் செடிகளுக்கு இயற்கை உரம் கிடைக்கப்பெறுவதற்கு இதை ஒரு மறைமுக ஏற்பாடாக இந்நிறுவனங்கள் கருதுகின்றன.

2.   தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படம் கி.மு. வில் வந்தது. படத்தை பார்த்த எல்லோருக்கும் தாகத்தை உணர வைத்திருப்பார் இயக்குனர் சிகரம். அது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தண்ணீர் என்று தேடி பார்த்தாலும் 105 டிகிரியின் கானல் நீரைத்தவிர வேறெதுவும் தென்படாது. வருடத்தின் 365 நாளும் மேன் Vs வைல்டு பியர் கிறில்ஸ் போல தண்ணீர் பாட்டிலுடன் அலைவது சாத்தியப்படாத ஒன்று.

3.   நம்ம வீட்ல ஒருத்தர் நான் தூங்கின பிறகு வந்துட்டு காலைல எந்திக்கிறதுக்கு முன்னாடி போறாரே? அவரு யாரு மம்மி?. அவர் தான்மா உங்க அப்பா. சிவில் இஞ்சினியரா வேல பாக்குறாரு.

இது ஏதோ மிகைபடுத்தபட்ட நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் வாரத்தின் ஏழு நாட்களும் விடுமுறையே இன்றி காலை ஏழு முதல் இரவு வரை சைட்டில் காலம் தள்ளும் அனைவரும் இந்த கேள்வியை அனுபவித்திருப்பார்கள்.

4.   Social Life’ என்று அழைக்கபடும் சமூக வாழ்க்கைக்கு சிறிதும் இடம் கொடுக்காத தொழில் இது. ஏன்? குடும்ப உறுப்பினரிடம் கூட நேரம் செலவிட முடியாது. உறவினரின் நல்லது கெட்டது என்று எதுவானாலும் கேள்விக்குறிதான். 90 சதவீத கட்டுமான பணிகள் நகரத்தின் எல்லைக்கு பல மைல் தொலைவில் அமைந்திருப்பதால் (சுற்றுப்புற சூழல் காரணமாக) ஒரு முறை வேலைக்கு சென்று வருவதற்கே நித்திய கண்ட பூர்ணாய்சாகிவிடுகிறது. வீட்டிற்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்குவதற்கே அல்லாத வேண்டியுள்ள நிலைமையில் மற்றவைக்கு போதிய நேரம் கிட்டுவதில்லை.

5.   முன்பு பார்த்த மென்பொருள் வேலையில் நானும் கம்ப்யூட்டர் பொட்டியும் சில எருமை மாடுகளுடன் (டேமேஜர்) அன்றைய பொழுது கழிந்துவிடும். ஆனால் இங்கு வந்த பிறகு ரெட்டேரி லாரி டிரைவர் முனியாண்டி முதற்கொண்டு நொய்டா பொது மேலாளர் தாஸ் வரை பாலோ அப் என்ற பெயரில் போனை போட்டு அவனுக்கு நமைச்சல் கொடுத்து பின் பன் வாங்குவது அலாதி எரிச்சல்.

6.   லஞ்சத்தின் புகலிடம் இந்தத்துறையே. நுழையும் வாயிலில் இருந்து வெளியேறும் கழிவு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்து ரூபாயிலிருந்து பத்து கோடி வரை. ஒரு டீயிலிருந்து கார் வரை கூச்சமின்றி பிச்சையெடுக்கிறார்கள். அதுவும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நெற்றியில் திருநாம பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, சீசன் தவறாது மாலை, அன்னை தெரசா காந்தி போல அறிவுரை சஷ்டியை நோக்க’, ‘முருகனை கூப்பிட்டு என்ற மொபைல் ரிங்க்டோன்கள். அப்பப்பா இவர்கள் அட்ராசிட்டி தாளவில்லை.

7.   ஒருவேளை நீங்கள் ஹரிச்சந்திரன் போல் நேர்மை சத்தியம் நியாயம் என்று சூளுரைப்பவரா? இந்த தொழிலுக்கு சற்றும் லாயக்கில்லாதவராக அறியப்படுவீர்கள். விடுகிற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே இறக்க கடவது. நாளையே தாஜ்மஹால் கட்ட முடியுமா என்று கேட்டால், நாளைக்கு என்ன, இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள முயற்சி பண்றேன் என்ற சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கேட்டால், ட்ரைனிங் கொடுக்கறாராம். போடா ங்கோ....

8.   திட்டியவுடன் கோவம் வருகிறதா? சுடுசொல் சொன்னால் பதிலடி கொடுக்க தோன்றுகிறதா? இது போல் வேறு ஏதாவது, வெக்கம் மானம், சூடு, சுரணை இத்தியாதி என இருந்தால் தயவு செய்து அதை வீட்டில் வைத்துவிட்டு வரவும். அதையும் மீறி எடுத்து வந்தால் நாலாக மடித்து சட்டை பைய்யில் போட்டுக்கொள்ளவும். பின் விளைவுகள் விளக்கமுடியாதது. வஞ்சம் வைத்து காலை வாரும் ஓநாய் கூட்டம் இங்கு அதிகம்.

9.   உலகத்தில் ஏதோ எல்லா பெண்களுமே மாயமாய் மறைந்து ஆண்கள் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை தருவது. ஏற்கனவே ஆணாதிக்க மிக்க சமுதாயத்தில், சிறிதும் பெண்களை சீண்டாத அல்லது கருத்துக்கு மதிப்பு கொடுக்காத களம். அதிகமாக இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பெண்களை கொண்டது இந்த கட்டுமானத்துறை. .

இவற்றை நினைத்து தினம் நொந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பூங்கா ஸ்டேஷன் சப்வேயில் நாள் முழுதும் நின்றுகொண்டு காலை நான்கு பத்து ரூபாய், மதியம் ஐந்து பத்து ரூபாய் இரவு ஆறு பத்து ரூபாய் என்று விற்கும் சமோசாக்காரனும், சேத்பட் ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பார்மில் இரவு வெறுந்தரையில் படுத்துறங்கும் நாடோடி மக்களும், சத்யம் தியேட்டர் அருகில் இருக்கும் உஷா அப்லயன்சஸ் கடைக்கு எதிரில் தார் ரோட்டில் கொசுக்கடியில் புட்டி பாலை குடித்து கொண்டே வெட்டவெளியில் தூங்க முயற்சிக்கும் கைக்குழந்தையும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தட்டு தடுமாறி ரயில் பெட்டியை தடவிக்கொண்டே ஏறி இறங்கி கட்டை குரலில் ஒருவ்ர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டே மொபைல் கவர், டார்ச் லைட் என விற்கும் கண் தெரியாதவர்களும், காலை ஐந்து மணிக்கே பஸ் வசதியில்லாமல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மீஞ்சூரில் ரயிலை பிடித்து அத்திப்பட்டில் இறங்கி ஷேர்ஆட்டோவை பிடித்து வெறும் இருநூறு ரூபாய்க்கு சித்தாள் வேலை பார்க்கும் என் அம்மா வயதுடைய பெண்கள், அங்கேயே நான் மினரல் வாட்டரில் தண்ணீர் குடிக்கும்பொழுது டேங்கர் லாரியின் பைப்பை திறந்து தண்ணீர் குடிக்கும் மேஸ்திரி வரை ஒவ்வொருவரும் தலையில் குட்டி நிதமும் ‘You are Gifted’ என்று ஞாபகப்படுத்துகிறார்கள்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read