உலக அளவில் சில பல (??!!) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில், நமது இயக்குனர்களான கே.பி, பாரதிராஜா, மகேந்திரன் போன்றோரின் காவியப்படைப்புகள் பார்க்காதிருப்பது ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்தி கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் கே.பி அவர்கள் நமது சூப்பர் ஸ்டாரை ஒரு கேள்வி கேட்பார். ரஜினி, நீ மீண்டும் நடிக்க விரும்பும் இயக்குனர் யார்?’ என்று. அதற்கு ரஜினி கூறிய பதில், மகேந்திரன். அப்பொழுதுதான் முள்ளும் மலரும் பார்க்க தோன்றியது. ஜானி ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் பார்த்திருக்கிறேன். அதேபோல், Conversations with ManiRatnam’ by ‘Bharadwaj Rangan’ என்ற ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தபொழுது, ‘உதிரிப்பூக்கள் படத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் சினிமா உலகிற்கு வந்ததற்கு உதிரிபூக்களும் ஒரு காரணம் என பேட்டியளித்திருந்தார். அடடே என்று விக்கியை சுட்டியதில், ‘நான் எடுக்கும் ஏதேனும் ஒரு படம், உதிரிபூக்களின் தரத்துக்கு அருகில் வருமானால், நான் மிக மகிழ்ச்சியடைவேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், ரத்னம். பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வாங்கிய ஒரு independent style மற்றும் freelance director மூலமாக நான் தெரிந்துகொண்டது தி கிரேட் மகேந்திரன்.

                    ஆக மகேந்திரனின் படைப்புகளை தேடியதில் முதலில் பார்க்க முடிவெடுத்தது முள்ளும் மலரும் (1978) மற்றும் உதிரிப்பூக்கள் (1979). படங்களும் இதே வரிசைக்கிரமாக தான் வெளிவந்தது. முதலில் முள்ளும் மலரும்.


                             ரஜினியின் நடிப்பிற்கு தீனி போட்டு சான்றிதழ் கொடுக்கும் மிகச்சில படங்களில் முக்கியமான படம். மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான். ரஜினி, அவர் தங்கை ஷோபா, ஜெயலக்ஷ்மி மற்றும் சரத்பாபு. பதினேழு வயது மட்டுமே நிரம்பிய நிலையில், பல படங்களின் தனது நடிப்பை நிரூபித்து ஒரு தேசிய விருது மற்றும் பல மாநில விருதுகளை குவித்து அந்த இளம் வயதிலேயே சாவைத்தேடியே ஒரு அபாராமான நடிகை. சோகமான காட்சிகளில்,  கிளோசப் ஷாட்டில், தனது கண்களால் மட்டுமே சோகத்தை காட்டும் அசாதாரணமான ஒரு நடிகை. கதை மிக எளிது. தனது உயரதிகாரியான சரத்பாபுவிற்கு தனது தங்கையை மணமுடித்து தர தயங்கும் அல்லது ஈகோ தடுக்கும் ஒரு விஞ்ச் ஆபேரட்டரின் கதை. விஞ்ச் ஆபரேட்டராக ரஜினி. தங்கைக்காக உயிரே கொடுக்கும் ஒரு கேரக்டர். ஷோபாவிற்கு அண்ணன். ஊருக்கு சண்டியர்.                       
                       ஊருக்கு புதிதாக வரும் சரத்பாபுவிடம் முதல் நாள் அன்றே உரசிக்கொள்கிறார். உயிர் காப்பாற்ற வேண்டிய ஒரு தருணத்தில், விஞ்ச் அருகில் இல்லாமல் ஊருக்கே வெளியே இருந்தது, அவர் வேலையை பறித்துக்கொள்கிறது. வேலையை பறித்தவர் சரத்பாபு. அந்த சோகத்தில் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்துகிடக்கும் நேரத்தில் ஒரு லாரி அவர் கை மீது ஏறிவிட, சரத் பாபு, ரஜினிக்கு வைத்திய உதவி செய்கிறார். அந்த விபத்தின் காரணத்தினால் அவர் கையை துண்டிக்க நேரிடுகிறது. அதன் பின் வீட்டிற்கு வரும் ரஜினி, தான் தங்கைக்கு உதவ முடியாது பாரமாக இருப்பதாக நினைத்து நினைத்து உருகுகிறார். அந்த சமயத்தில் சரத்பாபு ஷோபாவை பெண் கேட்டு வர, ரஜினியின் ஈகோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஊரில் போக்கிரியாய் திரியும் வெண்ணிறாடை மூர்த்திக்கு மணமுடிக்க சம்மதம் தெரிவிக்கவைக்கிறது. இதை ஊர் எதிர்க்க ரஜினி பிடிவாதமாக இருக்கிறார். ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து, ஷோபாவை அழைத்துக்கொண்டு, சரத்பாபுவிற்கு மணமுடிக்க செல்கிறார்கள். ரஜினி அங்கு வர, அண்ணனா, தனக்கு அமையப்போகும் நல்ல வாழ்க்கையா என்று முடிவெடுக்கும் தருணத்தில், அண்ணன் தான் வேண்டும் என்று ஷோபா ஓடி வந்து ரஜினியை கட்டிக்கொள்கிறார். அந்த இடத்தில் பெருமிதமாக சிரித்துவிட்டு ரஜினி, சரத் பாபுவிற்கு தான் தங்கையை மணமுடிப்பதோடு கதை நிறைவடைகிறது.

                     சரத்பாபுவிடம் முறைத்துக்கொள்வதாகட்டும், ‘என்ன பயபுள்ளைகளாஎன்று அடிக்கடி சொல்வதாகட்டும் அல்லது அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் தான் தங்கை தன்னிடம் வந்துவிட்டதை உணர்த்தும் அந்த சிரிப்பாகட்டும், ரஜினி மிளிர்கிறார். ஒரு காட்சியை சொல்லாமல் இருக்க முடியவில்லை. தன் வேலை பறிபோனபின், சரத்பாபுவை சந்தித்து, ‘காளி கெட்டவன் சார். அவன் எப்டி வேணாலும் பொழைச்சுக்குவான்என்ற ரஜினியின் டயலாக் டெலிவரிக்காகவே படத்தை பல முறை பார்க்கலாம். சோகமான பாத்திர படைப்புக்காகவே மட்டுமே கண்டுபிடிக்கபட்டவர் போல, பல காட்சிகளில் பேசாது ஸ்கோர் செய்கிறார். தீம் மியூசிக் கேட்கவே வேண்டாம். காட்சியுடன் இணைந்து பலம் சேர்க்கிறது. அதுவும் அந்த மலை முகட்டில், ரஜினியை நோக்கி ஷோபா ஓடி வரும் நேரத்தில் இசைக்கும் பின்னணி ஒன்றே சாட்சி சொல்ல போதும்.             

                    உதிரிப்பூக்கள் பார்க்கும் முன், படத்தின் கதையை தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆதலால் உதிரி பூக்கள் என்ற படத்தலைப்பின் அர்த்தம் முதலில் விளங்கவில்லை.  படம் பார்த்து முடிந்த பின், இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. விஜயன், அஸ்வினி, சரத்பாபு, அவர் மனைவி, சாருகாசன், மாஸ்டர் ஹாஜாஷெரீப் மற்றும் பேபி அஞ்சு என்று மொத்தமாக ஏழு அல்லது எட்டு பாத்திரங்கள் தான். இவர்களை சுற்றியே கதை நகருகிறது. தன் மனைவி அஸ்வினியை கொஞ்சம் கூட மதிக்காத, ஆண் ஆதிக்கம் மிகுந்த கேரக்டர் விஜயனுக்கு. ஊரில் முக்கிய புள்ளி. தன் கணவனை மட்டுமே தெய்வமாக நினைக்கும் ஒரு நோயாளியாக அஸ்வினி. அவரது தந்தையாக கடனாளியான சாருகாசன். ஊருக்கு புது ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் சரத்பாபு. இவர்களுடன் அந்த இரு குழந்தைகள். நோயாளியான அஸ்வினியை வெறுக்கும் விஜயன் அவரது தங்கையான மதுமாலினியை மணக்க யத்தனித்து, சாருகாசனிடம் பெண் கேட்கிறார், அவர் அதை மறுத்துவிட, அஸ்வினியிடம் தன் ஆசையை கூறுகிறார். இதர் நேரத்தில் சரத்பாபு அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார். பத்து வருடம் முன்பு அவர் சாருகாசனிடம் அஸ்வினியை பெண் கேட்கிறார். ஆனால் விஜயனுக்கு நிச்சயபட்டதால், சாருகாசன் மறுத்துவிட கண்ணியமாக விலகுகிறார். அந்த நட்பில், அவர் அஸ்வினி மற்றும் அவர் குழந்தைகளுக்கு உதவ, இதை தவறாக எடுத்துக்கொண்டு விஜயன் அஸ்வினியை சந்தேகத்தோடு பேசுகிறார். இந்த வருத்தம் மற்றும் நோய் காரணமாக அஸ்வினி இறந்து விட, விஜயன் வேறு ஒரு பெண்ணை மணமுடித்து ஊருக்கு அழைத்து வருகிறார். ஊரார் அனைவரும் விஜயனை வெறுக்கிறார்கள். இந்த நேரத்தில் அஸ்வினியின் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகிறது. தனக்கு கிடைக்காத கோபத்தில் விஜயன், மதுமாலினியை மானபங்கபடுத்துகிறார். இது ஊருக்கே தெரியவர, ஊர் விஜயனை துரத்துகிறது. விஜயனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய நிர்பந்திக்கிறது. லாங் ஷாட்டில் குழந்தைகள் இரண்டும் ஆற்றின் கரையோரம் நடக்க, உதிரிப்பூக்கள் என்ற  கார்டுடன் படம் நிறைவடைகிறது. படத்தில் மொத்தமாக ஒரு ஐந்து அல்லது ஆறு காட்சிகள் மட்டுமே இந்த இரு குழந்தைகள் வருகிறார்கள். ஆனால் படம் பார்த்து பத்து வருடமானாலும் அதிக பாதிப்பை தருவது அந்த இரு குழந்தைகளின் அப்பழுக்கற்ற முகமும், சிரிப்பும் தான். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணில் நீர் வழிவதை தவிர்க்க முடியவில்லை.


                  ஷோபாவை போன்றோரு கண்டுபிடிப்பு அஸ்வினி. அழுத்தமான பாத்திரங்களில் 
மிகையின்றி செவ்வேனே நடித்திருக்கிறார். இதன் பிறகு நண்டு என்றொரு படம் மகேந்திரன் 
இயக்கத்தில் நடித்திருக்கும் இவர், அதன் பின்பு நடித்த படங்களின் விபரங்கள் தெரிந்து கொள்ள
முடியவில்லை. முடிவெட்டுபவராக வரும் கதாபாத்திரம் அடிக்கடி அஸ்வினியிடம்,  ‘தம்பிக்கு (மாஸ்டர் ஷெரீப்) எப்போ முடி எடுக்கலாம்என்று கேட்கிறார். அதற்கு அஸ்வினி ஒவ்வொருதடவையும், ‘நேரம் வரும்போது எடுக்கலாம்என்று சொல்வதும், பின்பாதியில் அஸ்வினியின் இறப்பிற்கு, அவர் மொட்டை அடிக்க உட்காரும்போது, நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைகிறது. உதிரிப்பூக்கள் படம் முழுவதும் உயிர் நாடியாய் இருப்பது இளயராஜாவின் இசை. அதுவும் அந்த தீம் மியூசிக் இப்பொழுதும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

                     படம் முழுக்க யாரும் அதிர்ந்து பேசுவதில்லை. கோபாமானாலும் கூட சத்தம் போடாது அமைதியாய் பேசுகிறார்கள். அனைவருமே கம்போஸ்ட் கேரக்டராக படைத்திருக்கிறார் இயக்குனர். மகேந்திரனின் படைப்புகளில் இது அவரது ஸ்டைல் என சொல்லலாம். எந்த ஒரு கதாபாத்திரமோ அல்லாதோ காட்சியோ மிகைபடுத்தபடாது எடுத்திருக்கிறார். உணர்வுகள் திணிக்கபடவில்லை. உணர வைக்கிறார். ஐந்தாறு பாத்திரங்களில் அதன் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை வைத்து இரண்டு மணி நேரம் நம்மை கட்டிபோடும் ஆற்றல் மகேந்திரனின் படைப்பாற்றலுக்கு ஒரு சான்று. 


Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read