கும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலங்களை தரிசித்து வரலாம் என்று கிளம்பினேன். பொன்னியின் செல்வன் படித்து முடிதிருந்த நேரமது. கீழப்பழையாறை, குடந்தை, தஞ்சை, என்று படித்து படித்து அதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற அவா நீண்ட நாட்களாக இருந்தது. தஞ்சை கோவிலை ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது என்றாலும், இம்முறை ஒரு மாறுதலுக்காக குடந்தை அருகில் உள்ள கோவில்களை தரிசிக்கலாம் என்று ஓர் முடிவு.

           திருமணம் ஸ்வாமிமலை என்பதால் அருகில் உள்ள பட்டீஸ்வரம் சென்றோம். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூகுளை சொடுக்கியதில் மும்முடிச்சோழர், நமது கதையின் கதாநாயகர், மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி உடையாளுர் என்னும் கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. யதேச்சையாக கிடைத்த இத்தகவல் மகிழ்ச்சியை அளித்தாலும் அதை காண்பதற்க்கு எப்பொழுது நேரம் அமையுமோ என்ற எண்ணம் வருத்தத்தை கொடுத்தது.

           ஆனால் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பட்டீஸ்வரத்திலிருந்து சரியாக மூன்று கிலோமீட்டரில் உடையாளுர் இருந்தது. தாமதிக்காமல் வண்டியை அந்த திசையில் திருப்பினோம். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜா ராஜா சோழன் கட்டிய பல கோயில்களில் ஒன்று கைலாசநாதர் ஆலயம். இருக்குமிடம் உடையாளுர். கோயில் மிக சமீபத்தில் புணரமைத்திருக்கிறார்கள். அருகிலேயே ஒரு பள்ளி கட்டப்பட்டிருக்கிறது.
Udaiyaaloor Kailasaanathaar Aalayam
                  அங்கு இருந்த ஒரு முதியவரிடம் சந்தேகத்துடன், இங்கு ஏதோ ஓர் சமாதி என்று கேட்டதும் தான் தாமதம். எப்படி செல்ல வேண்டும் என்று வழியை கூறினார். பின்பு தான் தெரிந்தது, அந்த சமாதி அந்த கிராமத்திற்கே ஒரு அடையாளமாக இருக்கிறதென்பது.
           பண்டைய மன்னார் ஆட்சியின் போது, ராஜா வம்ஸத்தினர் யாரேனும் மரணித்தால் அவர்களை எரியூட்டி அவர்களின் அஸ்தியை கொண்டு ஓர் சமாதி அமைப்பார்கள். அதற்கு பள்ளிபடை என்று பெயர். அவ்வாறு ஏற்படுத்தபட்ட பள்ளிபடை வீடு தான் உடையாலூரில் இருக்கிறது.
           இவ்வுலகமே போற்றும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னனின் சமாதி இருக்கும் நிலைமை கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது. அதுவும் கல்கி, அனுஷா வெங்கடேசன், மற்றும் பாலகுமாரன் போன்றவர்களின் எழுத்துக்களை படித்து இவ்வாறெல்லாம் வாழ்ந்து ஆட்சிபுரிந்த மன்னரா, அவருக்கா இந்த நிலைமை என்பது சற்றே ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறது.
            குடிசை என்று கூட சொல்லமுடியாத ஒரு கூட்டடியின் கீழ் சாய்ந்த நிலையில் ஒரு சிவலிங்கம். நான்கு கழிகள் ஊன்றபட்டு, அதன் மேல் சில ஓலையை வேய்ந்துள்ளார்கள். அதன் அருகில் இருக்கும் குடிசையில் வாழும் ஒரு ஏழை விவசாயியின் தயவில் இருக்கிறார், மாமன்னர்.           நாங்கள் உள்ளே சென்றதும் அவராக வரவேற்று, வயது எண்பதை கடந்திருக்கும், பேச ஆரம்பித்தார். ராமன் சேதுராமன் அய்யர் (இவர் யாரென்பது தெரியவில்லை) என்பவர் அந்த ஊருக்கு விஜயம் செய்திருந்த வேளையில், சமாதி இருந்த இடத்தை வந்து பார்த்ததாகவும், பின்பு அருகில் இருக்கும் பால்குளத்தி அம்மன் கோவில் இருக்கும் கல்வெட்டை ஆராய்ந்ததாகவும் சொல்கிறார்.அக்கல்வெட்டின் எழுத்துக்களை மை தடவி பின் ஒரு காகிதத்தில் எடுத்து தஞ்சை மற்றும், சென்னை சென்று அந்த சமாதி ராஜா ராஜனின் சமாதி தான் என்பதை உறுதி செய்துள்ளனர். பின்பு ஊராரிடம் விசாரித்த போது, சமாதியில் இருந்த இரண்டு கல் தூண்களை எடுத்து சென்றுதான் பால்குளத்தி அம்மனின் கோவிலில் வாசலில் முட்டுக்கொடுத்துள்ளனர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. கல்வெட்டு கரந்தை மொழியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

           கி.பி. 1300 சமீபத்தில் பாண்டிய மன்னர் ஆட்சியில் அல்லது மாலிக் படை எடுத்து வந்த காலங்களில் இப்பள்ளிபடை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கணிக்கிறது. மேலும் சுமார் ஒரு அம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் மிச்சம் மீதி இருந்த சுவர்கள் மற்றும் தூண்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. அதுபோக அருகில் உள்ளவர்கள் அங்கிருக்கும் கற்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்றுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார். இன்று வெறும் கொட்டடியும் சிவலிங்கமும் மட்டுமே மீதியுள்ளன.

           ராஜராஜ சோழனின் சமாதியை உள்நாடு மட்டும் வெளிநாட்டில் இருந்தும் வந்து பார்த்து செல்கிறார்கள் என்பது அவர் வைத்திருக்கும் நோட்டில் விட்டு செல்லப்பட்டிருக்கும் கைய்யொப்பத்தில் தெளிவாகிறது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னனுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

           விடைபெறும் நேரத்தில் சமாதியை திரும்பி பார்த்த பொழுது மனது கனத்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.


தேடல் தொடரும்.


Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read