கல்கியின் மற்றுமொரு காவியமான சிவகாமியின் சபதம் முடித்த ஒரு களிப்புடன் இந்த இடுகை இடுகிறேன். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் மற்றும் பொன்னியின் செல்வன் என் இம்மூன்றுமே சரித்திர நாவல் என்பதை விட சரித்திர வரலாறு என்று சொல்வதே சாலப்பொருந்தும். இதுவரை சேர சோழ பாண்டியர்களோடு ஒரு மேக மூட்டமாக மட்டுமே எனக்கு தெரிந்திருந்த தமிழக வரலாறு இந்த மூன்று புத்தகங்களையும் படித்த பின்பு தமிழக வரலாற்றின் காலக்கோட்டை அனுமானிக்க ஓரளவேணும் கற்றுக்கொடுக்கிறது.
முதல் சில நூறாண்டுகளில் பாண்டியர்கள் ஆதிக்கமும், அதன் பின் அவர்களை வெற்றி கொண்டு வானளாவ புகழ் படைத்த பல்லவ சாம்ராஜ்யமும், பின்னர் அவர்களை வெற்றி கண்டு எல்லையை கடல் தாண்டி விரிவுபடுத்திய சோழப்பேரரசும், அதன் பின் சுந்தரபாண்டியன் மூலம் மீண்டும் தலையெடுத்த பாண்டியர்களும் என் தமிழக வரலாறு ஓரளவு புலனாகிறது.
பார்த்திபன் கனவாகட்டும், சிவகாமியின் சபதமாகட்டும் அல்லது பொன்னியின் செல்வனாகட்டும், அதை படிக்கும்போது மனதில் பல கேள்விகளும் வியப்புகளும் எழுவதை மறுதலிக்க இயலாது. அவ்வாறு தோன்றிய சில உணர்ச்சிகள்.
சிவகாமியின் சபதத்தின் நரசிம்ம பல்லவரோ அல்லது பொன்னியின் செல்வனின் அருள்மொழித்தேவரோ, எதுவானாலும் படித்தவுடன் எழும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய எனக்கு கூகுளும் விக்கிபீடியாவும் உதவுகின்றன. ஆனால் இதை எழுதிய காலத்தில் கல்கி ஆர். கிரிஷ்ணமூர்திக்கு புத்தகங்களும் செவிவழி செய்திகள் அல்லது கல்வெட்டுக்கள் மட்டுமே உதவியிருக்க முடியும். ஊர் ஊராக தேடி வாய்வழி செய்தியறிந்து, கல்வெட்டை கையில் தேடி அதில் இருக்கும் எழுத்துக்களை தற்கால தமிழ் மொழிக்கு உருவுகபடுத்தி, லேசுப்பட்ட காரியமா? அதிலும் அத்தனையும் வரலாற்றில் இருந்து எள்ளளவும் பிசகாமல். வேண்டுமானால் என் புத்தகதிலிருந்து வரலாற்றை எடுத்து கொள் எனுமளவிற்கு கல்கியின் புத்தகத்தில் விஷயங்கள் பொதிந்திருக்கின்றன.
கல்கி அவர்கள் முதன் முதலில் பார்திபன் கனவை எழுதியுள்ளார். அதன் பின்னர் சிவகாமியும் பொன்னியின் செல்வனும் தொடர்கிறார்கள். வரலாற்றின் வரிசைக்கிரமம்மாக பார்த்தால் முதலில் சிவகாமியின் சபதம், பார்திபன் கனவு பின்னர் பொன்னியின் செல்வன். இவை மூன்றில் சிவகாமியின் சபதம் படித்த பின்னர் பார்திபன் கனவு படிப்பது உகந்தது. ஏனெனில் சிவகாமியின் சபதத்தின் சில முடிவுகள் பார்த்திபன் கனவில் ஓரிரு பத்திகளில் இலை மறை காயாக தெரியபடுத்த படுகின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் சோழ பரம்பரயை விவரிப்பதால் இதை முன்னர் படிப்பதில் பாதகமில்லை.
விக்கிபீடியாவின் சேவை அளப்பரியதாக இருப்பினும், இப்புத்தகத்தை படிக்கும் முன்னர் நரசிம்ம பல்லவனை பற்றியோ புலிகேசியை பற்றியோ அல்லது இப்புத்தகத்தை பற்றியோ அதில் ஆராயாதிருப்பது உத்தமம். ஏனென்றால் பார்த்திபன் கனவில் நானூற்றைம்பது பக்கங்களில் காக்கப்பட்டு கடைசி சில பக்கங்களில் சொல்லப்படும் அதி முக்கிய ரகசியம், விக்கியில் ஆறாவது வரியிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இது சிவகாமியின் சபதம் மற்றும் பொன்னியின் செல்வனுக்கும் பொருந்தும்.
குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரு விஷயம் யாதெனில் இந்த மூன்று புத்தகங்களின் மொத்தம் உள்ள நாலாயிரத்து ஐநூறு பக்கங்களில் ஒரு பக்கமேனும் விரசமாக எழுதப்படவில்லை.. சிறு குழந்தைகளிடம் கூட இதை கொடுத்து படிக்க சொல்லலாம்.
சிவகாமியின் சபதம் தொடங்கிய முதல் அத்தியாயதிலிருந்தே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. கதை முதல் பாகத்தின் முடிவில் அவர் தரும் ஆச்சர்யம் அளவற்றது மற்றும் யூகிக்க முடியாதது. முதல் பாகமான நானூறு பக்கங்களில் வெறும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நடக்கும் சம்பவங்களை மட்டுமே விவரிக்கிறார். இதே பாங்கை அவர் பொன்னியின் செல்வனிலும் கையாள்வதை காணலாம். பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் என்னை பொறுத்தவரை முப்பது நாட்கள்.
சிவாகமியின் சபதத்தின் கதாநாயகன் என்று மகேந்திர பல்லவரை கூறுவதா அல்லது கதை போகும் போக்கிலே சென்று மாவீரராக மனதை கொள்ளை கொள்ளும் நரசிம்ம பல்லவரை கூறுவதா அல்லது இப்புத்தகத்தின் நாயகி சிவகாமியை சொல்லலாமா என்று அறுதியிட்டு கூற இயலவில்லை.
பொன்னியின் செல்வனைப்போலவே இதிலும் வயிறு வெடிக்க சிரிக்க வைக்கும் ஹாஸ்யங்கள் நிறைந்துள்ளன. குண்டோதரன் சில இடங்களில் கூறும் மறுமொழிகள் இதற்கு சான்று அதை படிக்கும்போது இதை எழுதிய ஆண்டு 1945 என்பதை நம்புவதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வளவு கடி கடித்துள்ளார்.
சிவகாமியின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அது தமரி குளத்தில் தெரியும் பூரண சந்திரனின் முகமோ என்று நரசிம்மர் குளம்பும் உவமையாகட்டும், நாகாநந்தியின் முகத்தில் ஏற்படும் கோவத்தை விவரிக்கும் பாங்காகட்டும், கல்கியின் மொழிநடை வாசகர்களின் மனதை விட்டு என்றென்றும் அகலாது. வாதாபி பெரும்போரில் யானைகளும், காலாட்படையும் போர் கொள்ளும் விவரணையை தன்னால் விவரிக்க முடியாது என்றும் அதை விவரிக்கும் ஆற்றல் வியாசர் அல்லது கம்பரை போன்றோருக்கே தகும் என்று கல்கி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். கல்கி அவர்கள் இதை விவரிப்பதிலிருந்து பணிவோடு விலகிவிட்டாலும், அவருடைய ஈடு இணையில்லாத உவமை மிகுந்த போரின் வர்ணனை நமக்கு ஓர் பேரிழப்பே.
வஜ்ரபாகு புலிகேசியை சந்திப்பதாகட்டும், புலிகேசி காஞ்சியை முற்றுகையிட்டு பொறுமை இழப்பதாகட்டும், நரசிம்மர் துர்விநீதன் மீது படையெடுக்கும் காரணமாகட்டும் அல்லது பல்லவர் வாதாபி மீது ரகசியமாக படையெடுப்பதாகட்டும் என் பல இடங்களில் கல்கி மெய் சிலிர்க்க வைக்கிறார்.
வரலாற்றின் மிக முக்கிய திருப்புமுனைகளை மட்டும் எடுத்து கொண்டு தனது கற்பனை சக்தியுடன் ஒரு கதையை அதினிடையே முரண்பாடில்லாமல் சொருகி, கதை மாந்தர்களை அளவளாவவிட்டு, அவர்களுடன் நம்மை நெருங்கி பழகவைத்து ஒரு முறையேனும் காஞ்சி கோட்டையையோ புத்த விகாரத்தையோ பார்த்து விட வேண்டும் என்று வெறிகொள்ளத்தூண்டும் யுக்தி கல்கிக்கு மாட்டுமே உரித்த ஒரு பாங்கு.
முழுவதுமாக படித்து முடிக்கும் பொழுது பரஞ்சோதி மேல் தானாக ஒரு மரியாதை வந்துவிடுகிறது. மகேந்திர வரமாரின் ராஜதந்திரங்கள் ஆச்சர்யத்தை அளிக்கின்றன. நரசிம்ம பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மஹாபலிபுரம் மற்றும் திருச்செங்காட்டாங்குடியில் உள்ள பரஞ்சோதியின் வாதாபி கணபதியை பார்த்து வர மனது ஏங்குகின்றது.
கல்கி ஆர். கிறிஷ்ணமூர்த்தியின் தயவில் தென் தமிழகத்தின் இருபெரும் சாம்ராஜ்யத்தின் இரு பெரும் அரசர்களை படித்த திருப்தி வேறு எந்த ஒரு சரித்திர புத்தகத்தாலும் நிவர்த்தி செய்ய முடியாதது.


5 comments:

ஹாய் Muthu Subramanian

என்னுடைய வாதாபி விஜயம் பற்றி என் பக்கத்தில் நான்கு பாகங்களில் பகிர்ந்து இருக்கிறேன் படிக்கவும்...

http://kanavuillam.blogspot.in/p/blog-page_8331.html

Read and Replied. Thanks for reading and Sharing your post.

ராஜ திலகம் படியுங்கள் நண்பா ...சரித்திரம் இன்னும் அழகாக சொல்ல பட்டிருக்கும் . போர் வியூகம் போன்ற விஷயங்கள்

Sure. i will read that

சிவகாமி சிவபெருமானை மணந்து கொண்டார் என சிவகாமியின் சபதம் முற்றுபெற பார்தீபன் கனவில் குந்தவி சில காலம் தன் அன்னையின் மறைவிற்கு பின் சிவகாமியின் இடத்தில் வளர்ந்து வந்ததாக இருப்பதை பற்றிய பதிவுகள் ஏதேனும் உண்டா?

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read