என்னைய எப்டி இங்க கொண்டு வந்தானுங்கணு ஒண்ணுமே புரியல சார். யாருனு தெர்லயா? நான் தான் ராக்காயி. ஒரு தடியன் ஒருத்தன் வந்தான். சும்மா மலமுழுங்கி மாதிரி இருந்தான். அந்த தடிபய தான் எங்களயெல்லாம் தூக்கிட்டு வந்துட்டான். நானு, செல்லம்மா, ரோஸி, சோனா (சோக்கா  நடப்பாளே அவ தான் மேனாமினுக்கி) எல்லாரும் உக்காந்து வாசல்ல உக்காந்து பேசிக்கிட்ருக்கோம். ஒரு நாலஞ்சு மணி இருக்கும். அப்டியே மூஞ்சில துணிய போட்டு மூடி வேன்ல தூக்கிட்டு வந்துட்டான். பொம்பள கிட்ட எப்டி நடந்துக்கணும்னு தெரியாது. கண்டெடத்துல கைய்ய வைச்சான், எடுபட்ட பயபுள்ளை.

ஒரு ரெண்டு மின்னெரம்  வேனு ஸ்பீடா போச்சு. பாத்தா பக்கத்தூருக்கு வந்துருக்கம். நல்லா வெளிச்சமா ஒரு வீடு இருந்துச்சு. எல்லா ஆம்பளைகளும் அந்த வீட்டுக்கு முன்னாடி நின்னு முறைச்சு முறைச்சு பாக்கானுவ. பொறவு சும்மாவா. ஊருக்குள்ள முறுக்கிட்டு திரிஞ்ச முனியாண்டியே என் பின்னாடி நாய் மாதிரி அலைவான். அப்டி இருப்பேனாக்கும். அதனாலயே அவன் பொண்டாட்டி எஸ்தருக்கு எம்மேல ஒரு காண்டு. சரி அத்த வுடு சார்.

இந்த கயிதைக்கு பொறந்தவன், அதான் அந்த தடிப்பய என்ன செஞ்சான் தெர்மா சார்.. எல்லாரையும் கூட்டிட்டு உள்ள வந்தான். மின்னாடி நல்லா பளீர்னு வெளிச்சமா இருந்துச்சு சொன்னேன்ல. ஆனா பின்னாடி அப்டி இல்ல. ஒரே இருட்டாகீது. கண்ணு முண்ணு தெர்ல. இவன் எல்லாதாயும் உள்ள பூட்டிட்டு வெளில போய்ட்டான் சார்..

எப்டியும் நம்ம ஊரு பக்கம் வராமையா பூடுவ? அப்ப பாத்துக்கறேன். நாங்கெல்லாம் ஊர்ல எப்டிருந்தோம் தெரிமா? சும்மா சோக்கா எல்லா எடமும் சுத்திகிணு, புடிச்ச வூட்டுக்குள்ள போவோம். அதுவும் இந்த ரோஸி பொண்ணுகீதே, அது ஏதாவது ஒரு வூட்டுக்குள்ள போயி எத்தயாவது தின்னுக்கிட்டே இருக்கும். செல வூட்ல ஒண்ணும் சொல்ல மாட்டானுவ. செல வூட்ல துரத்திடுவானுவ. ஆமா பின்ன? அதுவும் சர்தான்.

காடு மேடுனு நல்லா திரிஞ்சுக்கிட்டு இருந்தோம். எல்லாத்தாயும் துண்ணுவோம். நாங்க பாக்காத வயக்காடா? தோட்டம் தோப்பு எல்லாத்தயும் ஒரு ரவுண்டு பாத்துட்டு வந்தவீங்கப்பு நாங்க.

இந்த பய எதுக்கு இங்க கொண்டந்து வச்சிருக்கான். பேமானி. காலைல இவன் மூஞ்சில ஒரு கோடு போடணும். அப்பதான் வழிக்கு வருவான்.

கதவு தொறக்குது சார்.ம அந்த தடிப்பய தான் வரான் போல. என்ன செய்தான் பாப்போம். ஒரே இருட்டாகீது. ஒண்ணும் தெர்ல. ஆங். அந்த மூலையாண்ட தான் சார் போறான். ஆ. ஒவ்வொறாளா இழுத்துட்டு போறான் சார். விடக்கூடாது.

கதவ சாத்திட்டான்.

ஏடி ரோஸி? எங்கடிருக்க? செல்லம்மா?

ஒருத்தி கூட இல்ல போல.

இந்த பய எல்லாத்தயும் தூக்கிட்டு போய்ட்டான்.

ஆங். இப்பதான் நியாவத்துக்கு வருது. ஏதோ கஸ்டம்ருங்க நிரய பேரு இருக்கானுவனு வேன்ல பேசிக்கிட வந்தானுங்கு.

அய்யோ...இந்த பொண்ணுங்க என்ன பாடுபடபோவுதோ? எல்லாம் சின்ன புள்ளைக. இந்த ஆம்பளைங்களே இப்டி தான். சே.

அய்யோ வெளில ஏதோ சத்தம் மாதிரி.....ஆங். இது ரோஸி தான். என்ன சொல்லுதா?

என்ன காப்பத்துங்க, யாராவது காப்பத்துங்க. டேய் அங்க கை வைக்கா......

ரோஸி, ரோஸி....என்ன சத்தத்தயே காணோம். அய்யோ என்னாச்சு தெர்லியே.

யாராவது பாத்து சொல்லுங்க சார். யாரவாது காப்பத்துங்க சார்.

அது சரி தான். எல்லா ஆம்பளைங்களும் ஒரே மாதிரிதானே இருப்பீங்க. உங்க கைல சொல்லி என்ன புண்ணியம்.

நானே காலைல பாத்துக்ரேன். ரோஸி. கவலபடாத. நாளைக்கு அந்த தடிபய மூஞ்சில ப்ளேடு போட்ரலாம்.

கவலபடாத.....ப்ளேடு போட்ரலாம்.

கவலபடாத.....ப்ளேடு...

அப்டியே புலம்பி புலம்பி டயர்டாயி தூங்கிடிச்சு, நாளைக்கு பிரியாணில வேகப்போற நாட்டுக்கோழி ராக்காயி்.

RIP.


Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read