ஜீவ சமாதி அடைந்துள்ள அருட்தந்தைக்கு
வாழ்க வளமுடன் என்ற இரு சொல்லில் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் நீங்கள். நண்பர்கள், உறவினர்கள் மட்டும் அல்லாது இன்னல் புரிவோர், எதிரியாய் நினைப்போர் என எல்லாரையும் வாழ்த்த கற்று கொடுத்தீர்கள்.

பன்னிரண்டு வருடுங்களுக்கு முன்னால் எனது அன்னையால் அறிமுகபடுத்தபட்டீர். முதல் ஐந்து வருடங்கள் உங்களின் உடற்பயிற்சி முதல் காயகல்பம், அகத்தாய்வு ஐந்து வரை கற்றுக்கொண்டு பிரம்ம ஞானத்திற்காக ஆழியார் செல்வதற்கு காத்து கொண்டிருந்தேன். அதுகாறும் உங்களின் மன்றம் மற்றும் பயிற்சியை தொடர்ந்து செய்ய அனுமதித்த இயற்கை ஆழியார் வருவதற்கான அனுமதியை தரவில்லை. அதன் பின் பயிற்சியும் சரி வர செய்யவில்லை. ஆனால் உங்களை தரிசிக்க வேண்டும் என்ற அவா பெருகி வந்ததை மறுக்க முடியாது. இருந்தாலும் பிரம்ம ஞானத்திற்கான பயிற்சியை ஒத்தி போட்டு கொண்டிருந்த எனக்கு அன்று அது பேரிடியாய் இறங்கியது.

இருபத்தெட்டு மார்ச் இரண்டாயிரத்தி ஆறு தாங்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டீர்கள். எனது குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் உங்களை தரிசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது என்னை தவிர. உங்கள் கையால் அந்த பயிற்சியை பெற வேண்டும் என்ற அவாவில் இருந்த நான் அதன் பின்னர் ஆழியார் வரும் ஆசையே குறைந்து கொண்டு வருபதை உணர்ந்தேன். மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசயில் குருவின் ஸ்தானத்தில் எனக்கு நீங்கள் உள்ளீர்கள். ஒரு சிஷ்யன் குருவாய் ஒருவரை ஏற்றுகொளுவதை விட குரு ஒருவனை சிஷ்யனாக ஏற்று கொண்டு அவனுக்கு அவர் குருவாய் அமைவது சிறப்பாகும். எனக்கு எவ்வாறு அமைந்தது என்று தெரியவில்லை?

உங்களிடமிருந்து அப்படி என்ன கற்று கொண்டேன்?
தெரியவில்லை.

உங்கள் வழிமுறைகளை பின்பற்றுகிறேனா?
கண்டிப்பாக இல்லை. முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

சரி, பக்குவபட்டிருக்கிறேனா ?
பக்குவப்படவில்லை என்பதை உணரும் அறிவை கொடுத்தீர்கள்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பார்கள். நான் விண்டுகொண்டிருப்பதால் கண்டுகொண்டவில்லை என்பதை உணர்கிறேன்.

எவ்வளவு தூரம் இந்த பயணம்?
இந்த பயணத்தில் முடிவில்லை என்பதை உணர வைத்துள்ளீர்கள்.

என் மூதாதையர் செய்த புண்ணியத்தினால் நேற்று உங்கள் அறிவுத்திருக்கோயில் வரும் பாக்கியம் அமைந்தது. குரங்கு கூட அமைதியாக கட்டுபட்டிருந்த ஓர் இடம். என் மனக்குரங்கும் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வருகிறது. அவ்விடத்தில் நுழைந்தந்தவுடனே அது தாங்கள் வாழ்ந்த, உலவிய, அன்பர்களுக்கு கற்று கொடுத்த இடம் என்பது நினைவில் வர, மனதில் சில எண்ணங்கள் வந்து தோன்றி செல்கின்றன. உங்கள் ஓம்கார மண்டபம் பார்த்த பின்பு உங்கள் ஜீவ சமாதிக்கு வந்தேன். அங்கு இடம் பெற்றுள்ள உங்கள் அருங்காட்சியகம் என்னை இழுத்தது. அதில் தாங்கள் உபயோகப்படுத்திய ஹாட் பேக், ப்ளாஸ்க், வேஷ்டி, துண்டு, டூத் பிரஷ், தட்டு, டம்பளர், பேனாக்கள், புத்தகங்கள் இன்னும் சில இடம் பெற்றிருந்தன. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு மகான் உபயோகபடுத்திய ஒரு பொருள் காணக்கிடைத்தது என் பாக்கியம். தொட அனுமதியில்லை. கண்ணாடியில் வைத்திருந்தார்கள். பாவிகள் சற்று தூரம் நின்றே பார்க்க வேண்டும் போல்.

உங்கள் ஜீவ சமாதி முன் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். சில வருடங்கள் முன்னால் வந்திருந்தால் தங்க தவ கண்களால் என்னை பார்த்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கும். பல பூக்களால் உங்கள் சமாதி அழகு செய்யப்பட்டிருந்தது. உட்கார்ந்திருந்த சில நேரங்களில் தாங்கள் இல்லாத வெறுமையை, மற்றும் சில நேரங்களில் தாங்கள் எங்கும் நிறைந்திருக்கும் முழுமையை உணர்ந்தேன்.

அருங்காட்சியகத்தில் இருந்து வெளியேறுமுன் தாங்கள் கைகடிகாரம் கண்ணில் பட்டது. ஏழு ஐம்பது என்று காட்டிகொண்டிருந்த அந்த ஓடாத கடிகாரம் தாங்கள் இல்லாத ஒரு வெறுமையை, தங்களை மீண்டும் பார்க்க முடியாத கவலையை, தங்களை பார்க்க மறந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை என பல உணர்வுகளை வெளிபடுத்தியது.

கண் கேட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்து பலன் என்ன?

குருவடி சரணம்

இப்படிக்கு
உங்கள் வழிமுறைகளை பின்பற்ற முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுகொண்டிருக்கும் ஒரு பக்தன்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read