பொன்னியின் செல்வன் வரலாற்று பெட்டகத்திற்கு இது ஒரு பாத மலர்.


முதன் முதலாக தஞ்சாவூர் கோவில் எனக்கு பரிச்சயமானது பன்னிரெண்டாம் வகுப்பில் தான். ஒரு பேருந்தில் மொத்தமாக அறுபது பேர் ஏறிக்கொண்டு நான்கு நாளில் இருபது இடம் சுற்றி வந்தோம். பத்தோடு பதினொன்றாக தான் அந்த கோவில் அறிமுகமானது. ஆனாலும் அந்த இருபதில் இன்று வரை நினைவில் நிற்பது அது ஒன்று மட்டுமே. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்த் தூண்டும் ஒரு அதிசயம். அதை ஸ்தாபித்தவர் பெருங்கோ ராஜ ராஜ சோழன் தான் என்பதும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புதினமும் அவரை பற்றி தான் என்பதும் சமீப காலம் வரை தெரியவில்லை. பொன்னியின் செல்வனை பற்றி பல முறை கேள்வி பட்டிருந்தும் அதை படிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. இன்னொரு காரணம் அதனுடைய பிரமாண்டமான் தொகுதிகள். மொத்தம் ஐந்து பாகங்கள். இரண்டாயிரத்து நானூறு பக்கங்கள்.

கதை மொத்தமாக ஐந்து மாதங்களில் நடக்கிறது. சக்கரவர்த்தி சுந்தர சோழர். அவருடைய புதல்வர்கள் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மர்(பிற் காலத்தில் ராஜ ராஜ சோழர்), புதல்வி குந்தவை நாச்சியார். சுந்தர சோழரின் மந்திரி அநிருத்த பிரம்மராயர். அவருடைய சீடன் ஆழ்வார்க்கடியான், கோட்டையின் தன அதிகாரி பழுவேட்டரையர். இதைத்தவிர வானதி தேவி, மணிமேகலை, ஒடக்காரப்பெண் பூங்குழலி.
கதையின் நாயகி நந்தினி. நமது கதாநாயகன் வந்தியத்தேவன். முக்கியமான பாத்திரங்கள் இவ்வளவே.

சுந்தர சோழருக்கு பிறகு அரியாசனம் ஏறப்போவது யார், அதை தடுக்கும் பாண்டிய நாடு ஆபத்துதவிகள், அதை லாவகமாக முறியடிக்கும் வந்தியத்தேவனின் சாமர்த்தியம்,இவ்வளவுதான் கதை. கல்கியின் ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக உள்ளது. ஐந்து மாதங்கள் தான் கதை என்றாலும் அவர் அதை எடுத்து செல்லும் பாங்கு வியக்க வைக்கிறது. எந்த பக்கதிலேனும் சலிப்பு தட்டவில்லை. உதாரணத்திற்கு அருள்மொழிவர்மர் கடலில் விழுவதிலிருந்து அவர் படகில் ஏறும் வரைக்கும் நாமும் அந்த சுனாமியில் அகப்பட்டது போல் திக் திக் என்கிறது. கதையில் அதிகமான திருப்புமுனைகள். கதாபாத்திரங்கள் முழுவதும் நமக்கு வந்தியத்தேவனாலேயே அறிமுகபடுத்த படுகின்றன. கதையின் விறுவிறுப்பிற்கு காரணம் நந்தினி தேவி. வில்லி. அழகான வில்லி. எந்த வீரன் முன் வந்தாலும் மயங்கி விடும் அழகு. விரசமில்லாத விவரிப்புகள். கல்கியின் தனித்துவங்களில் இது ஒன்று. கதை முழுக்க வரும் ஆழ்வார்கடியான் நமது கதாநாயகனுடன் அடிக்கும் நகைச்சுவைகள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. லூட்டி டைப். சில நேரங்கள் மட்டுமே வரும் கரிகாலன் மீது நமக்கு மாபெரும் வீரனுடைய மரியாதை வருகிறது. ஆனாலும் அவன் இறந்த மர்மம் விலகவில்லை. அதை நேயர்களின் முடிவிற்கு விட்டுவிட்டார்.

அந்த காலத்தில் நடைபெற்ற அரசியல், அரியாசனம் ஏற நடக்கும் சூழ்ச்சிகள், எதிரிகளின் சதி, அதை தடுக்கும் ஆலோசனைகள் ஆகியவை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர்களின் கோட்டை, சுரங்கப்பாதைகள், ஆற்றுபடுகை, கடல் பிரயாணம், குதிரை பயணங்கள் எல்லாமே ஒரு முறையாவது அந்த ராஜ்யத்தை பார்த்து விட வேண்டும் என்ற உவகையை ஏற்படுத்துகிறது. பாரத கண்டத்தில் பாதியை தன் கட்டுக்குள் வைத்திருந்த சோழ சாம்ராஜ்யத்தில் மேல் தனி மதிப்பு வருகின்றது.
இத்தனை பெரிய கோபுரம் எழுப்ப அவருக்கு எப்படி தோன்றிருக்கும்? பொன்னியின் செல்வர், காவிரியின் புதல்வர், ஈழங் கொண்ட கோப்பெருமான், அருமொழி வர்மர், ஸ்ரீ ராஜா ராஜ சோழருக்கு இந்த யோசனை எப்படி வந்தது. ஈழத்து போரின் பொது அங்கு அவர் புத்த விகாரங்களை காண்கிறார். புத்தருக்கே இவ்வளவு பெரிய சிலை என்றால் அதிகார நந்தியிடம் அனுமதி வாங்கி நாம் தரிசிக்கும் லிங்கத்திற்கு எவ்வளவு பெரிய சிலை வடிக்க வேண்டும் அதனுடைய கோபுரம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவாவில் பிறந்து தான் தஞ்சை கோவில்.

1950 முதல் 1955 வரை இப்புத்தகம் எழுதபட்டிருக்கிறது. அதுவும் சுருக்கென்று கதையை முடித்திருக்கிறார். இன்னுமொரு ஐந்து பாகம் எழுதியிருந்தாலும் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு இருந்திருக்கும். அனால் சற்றென்று நம்மை விட்டு வந்தியதேவனும், அருள்மொழி வர்மரும் பிரியும் துக்கத்தை போக்க அனுஷா வெங்கடேஷின் 'காவிரி மைந்தன்' மூன்று பாகங்களாக எழுத பட்டிருக்கிறது. வாசகர்களுக்கு அது ஒரு ஆறுதல் . மேலும் தஞ்சை கோவில் எப்படி கட்டப்பட்டது, அதற்கு போட்டியாக ராஜேந்திர சோழன் ( ராஜ ராஜருடைய புதல்வர்) கங்கை கொண்ட சோழபுரம் எழுப்பியது எவ்வாறு என்பதை பாலகுமாரன் 'உடையாரில்' ஆறு பாகங்களில் விவரிக்கிறார்.

எது எப்படியானாலும் பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது தஞ்சை அரண்மனை மற்றும் கோவிலை பார்த்து வர வேண்டும் என்று எழும் ஆசையை மறுதலிக்க முடியாது

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read