முதன் முதலில் சுஜாதா எனக்கு பரிச்சியமானது எட்டாவது வகுப்பில். பஞ்சதந்திரக்கதைகள் ,பீர்பால் ,ராயர் அப்பாஜி ,தெனாலி ராமன் , சிறுவர்மலர் , மணி தவிர மற்ற நாவல்களெல்லாம் பெரியவர்கள் படிக்க வேண்டியவை என்று அறிவுறுத்தல். குங்குமம் குமுதம் கூட கிடையாது. அந்த ரெண்டு கெட்டான் வயதில் தான் என் நண்பன் (ஒரு வயது பெரியவன் -eligible ) சுஜாதாவின் புத்தகத்தை அறிமுகம் செய்தான் . நாவல் பெயர் ஞாபகம் இல்லை . மூன்று பேர் ,பதினெட்டு பத்தொன்பது வயதில் இருப்பவர்கள் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஜாலி ட்ரிப்பாக மங்களூர் செல்வது தான் கதை . அதில் ஏதோ ஒரு பக்கத்தில் நாயகி ஓடி வருவதை இரண்டு மூன்று வார்த்தைகளில் ஸ்பஷ்டமாக விவரித்திருந்தார் . ச்சீ , இவ்வளவு பச்சையாக எழுதுபவரா என்று அதை மூடி வைத்து விட்டேன் . அப்பொழுது சுஜாதா ஒரு பெண் எழுத்தாளர் என்று தான் புரிந்து வைத்திருந்தேன் . அதன் பின் நான்கு வருடங்களுக்கு பிறகு சகஜமாக ‘எல்லாம்’ படிக்க தொடங்கியிருந்த காலத்தில் ‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பு கிடைத்தது. தலையணை மாதிரியான புத்தகத்தொகுப்பு . அதை படித்த பொழுது தான் புரிந்தது , இத்தனை நாட்களாக இவரது எழுத்துக்களை அடையாளம் காணமல் எவ்வளவு இழந்திருந்தேன் என்று.

அதன் பின்பு ‘பிரிவோம் சந்திப்போம் ’, ‘என் இனிய இயந்திரா ’, ‘மீண்டும் ஜூனோ’ ,’தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ’,’ஸ்ரீரங்கத்து தேவதைகள் ’,’பதவிக்காக ’,’நகரம்' ,’குருப்ரசாத்தின் கடைசி தினம்’ மற்றும் பலவற்றை பலமுறை படித்தாய்விட்டது. முக்கியமாக கல்லூரி தினங்களில் ஒவ்வொரு பருவதேர்வுக்கும் எனக்கு சுஜாதா வேண்டிருந்தது . ஏதாவது சிறுகதை தொகுப்பு , கற்றதும் பெற்றதும் என ஏதாவது ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு புத்தகம் என அருகில் இருக்க வேண்டும். அதில் இருந்த ஹாஸ்யம் அல்லது இயல்பான ஒரு நடை ஏதோ ஒன்று ஈர்த்தது.

கல்லூரியின் நான்கு வருடங்களில் நான் படித்த புத்தகங்களில் எண்பது சதவிதம் சுஜாதாவே . சம்பந்தமில்லாமல் மென்பொருளில் 'Code' எழுதுவதற்கு வேலைக்கு சென்ற ஒரு தினம் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“இன்னைக்கு நியுஸ் பாத்தியாடா?”
“ஏம்மா என்னாச்சு ?”
“சுஜாதா இறந்துட்டாருடா ”.
நான் அதிகாமா படித்தது சுஜாதாவின் புத்தகம் என்று அம்மாவிற்கு தெரியும் என்பதே அப்போது தான் உணர்ந்தேன் . அவருடைய இறப்பு அந்த கணம் ஒரு துயரத்தை அளித்தாலும் அதை விட என்னை சுஜாதாவின் பரம விசிறியாக பார்த்தது பெருமையாக உணர்ந்தேன் . அன்று மதியமே அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகரில் நடப்பதாக இருந்தது. இடம் தெரிந்தாலும் அன்று போவதற்கான அனுமதி கிடைக்கவில்லை . சுஜாதாவை பிடித்த நண்பர்களிடம் வருத்தத்தை பகிர்ந்துகொண்டது நினைவில் இருக்கிறது. ஒருமுறை அவரோடு BEL இல் பணியாற்றிய நண்பரை பார்க்க நேர்ந்தது. அவருடைய நண்பரை பார்த்ததற்கே அவ்வளவு மகிழ்ச்சி என்றால், அவரை நேரில் பார்த்திருந்தால் வாழ்நாள் மூச்சுடும் பேசி பேசி கழித்திருப்பேன்.

அதன் பின்பு மூன்று நான்கு வருடங்கள் ஆகி விட்டன. கற்றதும் பெற்றதும் நான்காம் பாகம் பிறகு எதுவும் வரவில்லை. ஆனால் இன்று கூட அதன் முதல் பாகம் படிக்கும் பொழுது அதன் இளமையும் நகைச்சுவை உணர்வையும் முதல் தடவை படிப்பது போன்ற உணர்வை தருகின்றன.

இறுதி மூச்சு மட்டும் சுஜாதாவின் எழுத்துக்களோடு கழிக்க வேண்டும் .

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read