ஜீவ சமாதி அடைந்துள்ள அருட்தந்தைக்கு
வாழ்க வளமுடன் என்ற இரு சொல்லில் உலகை திரும்பி பார்க்க வைத்தவர் நீங்கள். நண்பர்கள், உறவினர்கள் மட்டும் அல்லாது இன்னல் புரிவோர், எதிரியாய் நினைப்போர் என எல்லாரையும் வாழ்த்த கற்று கொடுத்தீர்கள்.

பன்னிரண்டு வருடுங்களுக்கு முன்னால் எனது அன்னையால் அறிமுகபடுத்தபட்டீர். முதல் ஐந்து வருடங்கள் உங்களின் உடற்பயிற்சி முதல் காயகல்பம், அகத்தாய்வு ஐந்து வரை கற்றுக்கொண்டு பிரம்ம ஞானத்திற்காக ஆழியார் செல்வதற்கு காத்து கொண்டிருந்தேன். அதுகாறும் உங்களின் மன்றம் மற்றும் பயிற்சியை தொடர்ந்து செய்ய அனுமதித்த இயற்கை ஆழியார் வருவதற்கான அனுமதியை தரவில்லை. அதன் பின் பயிற்சியும் சரி வர செய்யவில்லை. ஆனால் உங்களை தரிசிக்க வேண்டும் என்ற அவா பெருகி வந்ததை மறுக்க முடியாது. இருந்தாலும் பிரம்ம ஞானத்திற்கான பயிற்சியை ஒத்தி போட்டு கொண்டிருந்த எனக்கு அன்று அது பேரிடியாய் இறங்கியது.

இருபத்தெட்டு மார்ச் இரண்டாயிரத்தி ஆறு தாங்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டீர்கள். எனது குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் உங்களை தரிசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது என்னை தவிர. உங்கள் கையால் அந்த பயிற்சியை பெற வேண்டும் என்ற அவாவில் இருந்த நான் அதன் பின்னர் ஆழியார் வரும் ஆசையே குறைந்து கொண்டு வருபதை உணர்ந்தேன். மாதா பிதா குரு தெய்வம் என்ற வரிசயில் குருவின் ஸ்தானத்தில் எனக்கு நீங்கள் உள்ளீர்கள். ஒரு சிஷ்யன் குருவாய் ஒருவரை ஏற்றுகொளுவதை விட குரு ஒருவனை சிஷ்யனாக ஏற்று கொண்டு அவனுக்கு அவர் குருவாய் அமைவது சிறப்பாகும். எனக்கு எவ்வாறு அமைந்தது என்று தெரியவில்லை?

உங்களிடமிருந்து அப்படி என்ன கற்று கொண்டேன்?
தெரியவில்லை.

உங்கள் வழிமுறைகளை பின்பற்றுகிறேனா?
கண்டிப்பாக இல்லை. முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

சரி, பக்குவபட்டிருக்கிறேனா ?
பக்குவப்படவில்லை என்பதை உணரும் அறிவை கொடுத்தீர்கள்.

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பார்கள். நான் விண்டுகொண்டிருப்பதால் கண்டுகொண்டவில்லை என்பதை உணர்கிறேன்.

எவ்வளவு தூரம் இந்த பயணம்?
இந்த பயணத்தில் முடிவில்லை என்பதை உணர வைத்துள்ளீர்கள்.

என் மூதாதையர் செய்த புண்ணியத்தினால் நேற்று உங்கள் அறிவுத்திருக்கோயில் வரும் பாக்கியம் அமைந்தது. குரங்கு கூட அமைதியாக கட்டுபட்டிருந்த ஓர் இடம். என் மனக்குரங்கும் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வருகிறது. அவ்விடத்தில் நுழைந்தந்தவுடனே அது தாங்கள் வாழ்ந்த, உலவிய, அன்பர்களுக்கு கற்று கொடுத்த இடம் என்பது நினைவில் வர, மனதில் சில எண்ணங்கள் வந்து தோன்றி செல்கின்றன. உங்கள் ஓம்கார மண்டபம் பார்த்த பின்பு உங்கள் ஜீவ சமாதிக்கு வந்தேன். அங்கு இடம் பெற்றுள்ள உங்கள் அருங்காட்சியகம் என்னை இழுத்தது. அதில் தாங்கள் உபயோகப்படுத்திய ஹாட் பேக், ப்ளாஸ்க், வேஷ்டி, துண்டு, டூத் பிரஷ், தட்டு, டம்பளர், பேனாக்கள், புத்தகங்கள் இன்னும் சில இடம் பெற்றிருந்தன. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு மகான் உபயோகபடுத்திய ஒரு பொருள் காணக்கிடைத்தது என் பாக்கியம். தொட அனுமதியில்லை. கண்ணாடியில் வைத்திருந்தார்கள். பாவிகள் சற்று தூரம் நின்றே பார்க்க வேண்டும் போல்.

உங்கள் ஜீவ சமாதி முன் அமைதியாய் உட்கார்ந்திருந்தேன். சில வருடங்கள் முன்னால் வந்திருந்தால் தங்க தவ கண்களால் என்னை பார்த்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கும். பல பூக்களால் உங்கள் சமாதி அழகு செய்யப்பட்டிருந்தது. உட்கார்ந்திருந்த சில நேரங்களில் தாங்கள் இல்லாத வெறுமையை, மற்றும் சில நேரங்களில் தாங்கள் எங்கும் நிறைந்திருக்கும் முழுமையை உணர்ந்தேன்.

அருங்காட்சியகத்தில் இருந்து வெளியேறுமுன் தாங்கள் கைகடிகாரம் கண்ணில் பட்டது. ஏழு ஐம்பது என்று காட்டிகொண்டிருந்த அந்த ஓடாத கடிகாரம் தாங்கள் இல்லாத ஒரு வெறுமையை, தங்களை மீண்டும் பார்க்க முடியாத கவலையை, தங்களை பார்க்க மறந்ததால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியை என பல உணர்வுகளை வெளிபடுத்தியது.

கண் கேட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்து பலன் என்ன?

குருவடி சரணம்

இப்படிக்கு
உங்கள் வழிமுறைகளை பின்பற்ற முயன்று மீண்டும் மீண்டும் தோற்றுகொண்டிருக்கும் ஒரு பக்தன்.பொன்னியின் செல்வன் வரலாற்று பெட்டகத்திற்கு இது ஒரு பாத மலர்.


முதன் முதலாக தஞ்சாவூர் கோவில் எனக்கு பரிச்சயமானது பன்னிரெண்டாம் வகுப்பில் தான். ஒரு பேருந்தில் மொத்தமாக அறுபது பேர் ஏறிக்கொண்டு நான்கு நாளில் இருபது இடம் சுற்றி வந்தோம். பத்தோடு பதினொன்றாக தான் அந்த கோவில் அறிமுகமானது. ஆனாலும் அந்த இருபதில் இன்று வரை நினைவில் நிற்பது அது ஒன்று மட்டுமே. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்த் தூண்டும் ஒரு அதிசயம். அதை ஸ்தாபித்தவர் பெருங்கோ ராஜ ராஜ சோழன் தான் என்பதும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புதினமும் அவரை பற்றி தான் என்பதும் சமீப காலம் வரை தெரியவில்லை. பொன்னியின் செல்வனை பற்றி பல முறை கேள்வி பட்டிருந்தும் அதை படிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. இன்னொரு காரணம் அதனுடைய பிரமாண்டமான் தொகுதிகள். மொத்தம் ஐந்து பாகங்கள். இரண்டாயிரத்து நானூறு பக்கங்கள்.

கதை மொத்தமாக ஐந்து மாதங்களில் நடக்கிறது. சக்கரவர்த்தி சுந்தர சோழர். அவருடைய புதல்வர்கள் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மர்(பிற் காலத்தில் ராஜ ராஜ சோழர்), புதல்வி குந்தவை நாச்சியார். சுந்தர சோழரின் மந்திரி அநிருத்த பிரம்மராயர். அவருடைய சீடன் ஆழ்வார்க்கடியான், கோட்டையின் தன அதிகாரி பழுவேட்டரையர். இதைத்தவிர வானதி தேவி, மணிமேகலை, ஒடக்காரப்பெண் பூங்குழலி.
கதையின் நாயகி நந்தினி. நமது கதாநாயகன் வந்தியத்தேவன். முக்கியமான பாத்திரங்கள் இவ்வளவே.

சுந்தர சோழருக்கு பிறகு அரியாசனம் ஏறப்போவது யார், அதை தடுக்கும் பாண்டிய நாடு ஆபத்துதவிகள், அதை லாவகமாக முறியடிக்கும் வந்தியத்தேவனின் சாமர்த்தியம்,இவ்வளவுதான் கதை. கல்கியின் ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக உள்ளது. ஐந்து மாதங்கள் தான் கதை என்றாலும் அவர் அதை எடுத்து செல்லும் பாங்கு வியக்க வைக்கிறது. எந்த பக்கதிலேனும் சலிப்பு தட்டவில்லை. உதாரணத்திற்கு அருள்மொழிவர்மர் கடலில் விழுவதிலிருந்து அவர் படகில் ஏறும் வரைக்கும் நாமும் அந்த சுனாமியில் அகப்பட்டது போல் திக் திக் என்கிறது. கதையில் அதிகமான திருப்புமுனைகள். கதாபாத்திரங்கள் முழுவதும் நமக்கு வந்தியத்தேவனாலேயே அறிமுகபடுத்த படுகின்றன. கதையின் விறுவிறுப்பிற்கு காரணம் நந்தினி தேவி. வில்லி. அழகான வில்லி. எந்த வீரன் முன் வந்தாலும் மயங்கி விடும் அழகு. விரசமில்லாத விவரிப்புகள். கல்கியின் தனித்துவங்களில் இது ஒன்று. கதை முழுக்க வரும் ஆழ்வார்கடியான் நமது கதாநாயகனுடன் அடிக்கும் நகைச்சுவைகள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. லூட்டி டைப். சில நேரங்கள் மட்டுமே வரும் கரிகாலன் மீது நமக்கு மாபெரும் வீரனுடைய மரியாதை வருகிறது. ஆனாலும் அவன் இறந்த மர்மம் விலகவில்லை. அதை நேயர்களின் முடிவிற்கு விட்டுவிட்டார்.

அந்த காலத்தில் நடைபெற்ற அரசியல், அரியாசனம் ஏற நடக்கும் சூழ்ச்சிகள், எதிரிகளின் சதி, அதை தடுக்கும் ஆலோசனைகள் ஆகியவை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர்களின் கோட்டை, சுரங்கப்பாதைகள், ஆற்றுபடுகை, கடல் பிரயாணம், குதிரை பயணங்கள் எல்லாமே ஒரு முறையாவது அந்த ராஜ்யத்தை பார்த்து விட வேண்டும் என்ற உவகையை ஏற்படுத்துகிறது. பாரத கண்டத்தில் பாதியை தன் கட்டுக்குள் வைத்திருந்த சோழ சாம்ராஜ்யத்தில் மேல் தனி மதிப்பு வருகின்றது.
இத்தனை பெரிய கோபுரம் எழுப்ப அவருக்கு எப்படி தோன்றிருக்கும்? பொன்னியின் செல்வர், காவிரியின் புதல்வர், ஈழங் கொண்ட கோப்பெருமான், அருமொழி வர்மர், ஸ்ரீ ராஜா ராஜ சோழருக்கு இந்த யோசனை எப்படி வந்தது. ஈழத்து போரின் பொது அங்கு அவர் புத்த விகாரங்களை காண்கிறார். புத்தருக்கே இவ்வளவு பெரிய சிலை என்றால் அதிகார நந்தியிடம் அனுமதி வாங்கி நாம் தரிசிக்கும் லிங்கத்திற்கு எவ்வளவு பெரிய சிலை வடிக்க வேண்டும் அதனுடைய கோபுரம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவாவில் பிறந்து தான் தஞ்சை கோவில்.

1950 முதல் 1955 வரை இப்புத்தகம் எழுதபட்டிருக்கிறது. அதுவும் சுருக்கென்று கதையை முடித்திருக்கிறார். இன்னுமொரு ஐந்து பாகம் எழுதியிருந்தாலும் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு இருந்திருக்கும். அனால் சற்றென்று நம்மை விட்டு வந்தியதேவனும், அருள்மொழி வர்மரும் பிரியும் துக்கத்தை போக்க அனுஷா வெங்கடேஷின் 'காவிரி மைந்தன்' மூன்று பாகங்களாக எழுத பட்டிருக்கிறது. வாசகர்களுக்கு அது ஒரு ஆறுதல் . மேலும் தஞ்சை கோவில் எப்படி கட்டப்பட்டது, அதற்கு போட்டியாக ராஜேந்திர சோழன் ( ராஜ ராஜருடைய புதல்வர்) கங்கை கொண்ட சோழபுரம் எழுப்பியது எவ்வாறு என்பதை பாலகுமாரன் 'உடையாரில்' ஆறு பாகங்களில் விவரிக்கிறார்.

எது எப்படியானாலும் பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது தஞ்சை அரண்மனை மற்றும் கோவிலை பார்த்து வர வேண்டும் என்று எழும் ஆசையை மறுதலிக்க முடியாது

ஜூன் பத்து என்று நாள் கொடுத்திருந்தார்கள். வழக்கம்போல் வாரா வாரம் செக் அப் போவது போல் அன்றும் சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை . இரவு டிக்கட் புக் செய்யபட்டிருந்தது . அலுவலகத்தில் இருந்து சற்று முன்னதாக புறப்பட வேண்டும் . இதே நாள் அடுத்த வாரம் பாப்பா கையில் இருக்கும் என்று நினைத்து கொண்டே கிளம்பினேன் . பெண் குழந்தையா இல்லை பையனா ? ஸ்கேனில் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை . ஒன்பது மாதம் உள்ளே இருப்பது என்னவென்று தெரியாமல் 270 நாட்கள் காத்திருப்பது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு கலந்த சுமை . என்ன பேர் வைக்க வேண்டும் . இன்று வரை யோசிக்கவும் இல்லை . முதலில் குழந்தை நன்றாக பிறக்கட்டும் . காத்திருக்கலாம் .

பேருந்து புறப்பட யத்தனித்த நேரத்தில் திருச்சியில் இருந்து அழைப்பு வந்தது .

‘இன்னைக்கே அட்மிட் ஆக சொல்லிடாங்க , Maximum Monday டெலிவரி இருக்கும்னு சொல்றாங்க ’ பதட்டமாக மனைவி .

திரும்பி வரும்பொழுது அப்பாவாகத்தான் வருவேனா ? ஒரு புது உணர்வு. முதலில் பிரசவம் நல்லபடியாக முடிய வேண்டும் . சும்மாவா சொன்னார்கள் . பிரசவம் மறுபிறப்பு என்று . சுக பிரசவம் நடக்க வேண்டும் என்று பல கோயில்களில் வேண்டுதல் , பெரியவர்கள் ஆசிர்வாதம் , எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி மாதம் வரை நடைபயிற்சி , உடற்பயிற்சி , பழங்கள் , மருந்து வகைகள் . கண்டிப்பாக சுக பிரசவமாகத்தான் இருக்கும் . சந்தேகமில்லை . ஏதேதோ சிந்தனை ஆக்கிரமிக்க தூங்கி போயிருந்தேன் .

சரியாக ஆறு மணிக்கு திருச்சி வந்தடைந்து , 30 ரூபாய் ஆட்டோவிற்கு குடுத்து ஹாஸ்பிட்டலில் குதித்த பொழுது , மனைவி காத்திருந்தாள் .

‘ஏதும் சாப்பிடகூடாதுன்னு சொல்லிடாங்க ’

‘ஜூஸ் குடுக்கலாமா டாக்டர் ?’

‘குடுங்க .பட் வேற எதுவும் குடுக்க வேண்டாம் ’.

சாத்துக்குடி கிடைத்தது. சாப்பிட பிடிக்கவில்லை. இன்னும் சில மணி நேரத்தில் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று நடக்கவிருக்கிறது . நல்லபடியாக நடக்க வேண்டும் . ஒன்றும் ஓடவில்லை .அருகில் உட்கார்ந்து கை பிடித்திருப்பதை தவிர .

சரியாக 8.30 மணிக்கு ஊசி போடப்பட்டது.

‘ நல்ல பெயின் வரும் . கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ’ என்று சொல்லிவிட்டு டாக்டர் போய் விட்டார்.

அவளுக்கென்ன சொல்லிவிட்டாள் . அகப்பட்டவன் நானல்லவா என்றாள் , சிரித்துக்கொண்டே. இந்த நேரத்திலும் பொறுமையை இருக்கிறாள் . தைரியசாலி . ஒரு பெண்ணின் மனதைரியத்திற்கு முன் எதுவும் இல்லை. காப்பதும் சக்தி. அழிப்பதும் சக்தி. நேரம் ஆக ஆக சொந்தம் ஒவ்வொன்றாக சேர ஆரம்பித்திருந்தது . ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவளின் அலறல் அதிகமாகி கொண்டிருந்தது . ஒவ்வொருவரும் வாழ்கையின் சில விஷயங்களை ஒருமுறையாவது அனுபவித்தே ஆக வேண்டும். சக்கரத்தில் ஏறியாகிவிட்டது. நம் முறை வந்தே தீரும். தப்பிக்க வழியில்லை. உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் இது எழுதப்படாத நியதி .

பக்கத்தில் இருந்தவரிடம் பேனா வாங்கி வாரமலர் குறுக்கெழுத்து போட்டி நிரப்ப ஆரம்பிதேன். ஒவ்வொரு மணி நேரமும் அலறல் அதிகமானது. மூன்று மணி வரை இதே போராட்டம் . சரியாக மூன்று பத்திற்கு பெரிய டாக்டர் வந்தார் . அதுவரை எட்டு மணி நேரம் கடந்திருந்தது. ‘

பேஷன்ட் கூட யாரு வந்திருக்காங்க ?

ஏதாவது விபரீதமோ?

‘சொல்லுங்க டாக்டர் ’

‘We tried a lot. குழந்தையோட தலைய பாக்க முடியுது . Its trying to come out. But some contraction is there. Forceps போட முடியாது . Better option is surgery. But we will try our maximum’ சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார் .

Anasthesia டாக்டர் சில நிமிடங்களில் வந்தார் . முதுகில் ஊசி போடப்பட்டது .

கடவுளே இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் ஏதாவது அற்புதம் நிகழ்த்த மாட்டாயா? நார்மல் ஆகாதா? மூன்று நாளில் எழுந்து ஓடி வர மாட்டாளா? தாயும் சேயும் நலமுடன் பார்க்க வேண்டுமே . இது நாள் வரை இருந்த தைரியமோ இறுமாப்போ இப்போது இல்லை. சில நிமிடங்களில் உன் இருப்பை உணர்த்துவது போல் இருக்கிறது. உன் தயவு இல்லாமல் எதுவும் இல்லை. என் பாவம் என்னோடு. அவர்களிடம் வேண்டாம் . எல்லாம் ஒழுங்காக நடக்கிறது , பயமில்லை என்று இருந்தேனே . அப்பொழுது உனக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன். இப்பொழுது உன்னை ஞாபக படுத்துகிறாய் . தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் முடிவு நீ எடுப்பது தான்.

‘சார் நீங்க தான் பேஷண்டோட.... ?

பேப்பரை நீட்டினார்கள் . ‘ ……ஆதலால் சர்ஜரி செய்ய முடிவு எடுக்க பட்டுள்ளது . இதன் ஆபத்தினை நான் உணர்கிறேன் . எனக்கு புரியவைக்கபட்டுள்ளது …... மனத்தெளிவுடன் கையொப்பம் இடுகிறேன் ’

மிக கடினமானதொரு தருணம் . ‘உன் மனைவிக்கு ஆப்ரேஷன் பண்றாங்கப்பா . என்னனு தெரியாது . நீ தான் கையெழுத்து போடணும் , போட்டு குடு ’

இறைவா உன்னிடம் முழுவதும் ஒப்படைத்து விடுகிறேன் . நீயே பார்த்து கொள் .

சரியாக மூன்று முப்பதிற்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது . தொடர்ச்சியாக அழவில்லை . அடுத்த சோதனை . சந்தோஷமாக எல்லோரிடம் சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன் . ஆனால் ஒவ்வொரு நிமிடமும் ஒரு புது சேதியாக இருந்தது . எப்பொழுது சர்ஜரி என்று முடிவானதோ அப்பொழுதே மனம் சோர்ந்திருந்தது

குழந்தையை வெளியில் கொண்டு வந்து காட்டினார்கள் . குழந்தை அழவில்லை .

‘என்ன பேபி ?’

‘பெண் குழந்தை ’

‘மகாலட்சுமி ’ என்று யாரோ சொன்னது காதில் விழுந்தது .

ஆனால் மனம் முழுதும் மனைவி எப்படி இருக்கிறாள் என்றே கவலை பட்டு கொண்டிருந்தது . ‘எப்படி இருக்காங்க சிஸ்டர் ?’

‘She is fine’

வாழ்வின் ஆதாரம் அவள் .

மீண்டும் பெரிய டாக்டர் வெளியே வந்தார் .’ Baby has drunk some water. Pediatriciana சொல்லிருக்கேன் . She will come. எதுக்கும் ஒரு தடவ செக் அப் பண்ணிடலாம்.’.

அரை மணி நேரத்தில் எவ்வளவு மனப்போராட்டம் . இதற்கு முந்திய எட்டு மணி நேர மன நிலையும் தற்போதைய அரை மணி நேரமும் . நிறைய வித்தியாசங்கள் . ஒரு முறை மலை விளிம்பை சென்று எட்டி பார்த்து வந்தது போல் இருக்கிறது.

அடுத்த ஐந்து நிமிடங்களில் pediatrician உள்ளே சென்றார். அடுத்த ஐந்து நிமிடத்தில்,bb

'பேபியோட அப்பா?'

'சொல்லுங்க டாக்டர்'.

‘Baby is having some breathing trouble. ரெண்டொரு நாள் ICU ல வச்சிருந்து பாக்கணும் .Oxygen குடுக்கும் . Otherwise its fine.’

சர்ஜரி ஒன்றே போதுமே உன்னை உணர்த்த . இந்த குழந்தையும் வேண்டுமா . போதும் . இதற்கு மேலும் வேண்டாம் . இனி நான் வாழப்போகும் வாழ்வின் ஆதாரத்தை ஏற்கனவே அசைத்து பார்த்து விட்டாய்.. இந்த பிஞ்சு வேண்டாம் .

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஸ்ட்ரெட்சரில் வெளியே வந்தாள் . 'ஐந்து நிமிடம் முன்பு ஆபரேஷன் முடிந்துள்ளது . உன் வயிற்றை கிழித்துள்ளார்கள் . வலிக்கிறதா? . மரத்திருகிறதா ?. என்னை தெரிகிறதா? . இன்னும் மயக்கமாக இருக்கிறாயா? . உனக்கு பெண் குழந்தையம்மா . கேட்கிறதா?'.

கண் மட்டும் அசைந்தது . மேலே ரூமிற்கு கொண்டு சென்றார்கள் . கூடவே சென்றேன் . அதற்குள் கீழே கார் வந்திட , குழந்தைக்கு அப்பா யாருங்க ?

காரில் என் குழந்தை . ஒரு டவலில் சுற்றியிருந்தார்கள் . இப்போதும் அழவில்லை . மூன்று கிலோமீட்டராவது இருக்கும். இன்னொரு ஹாஸ்பிட்டல். அவசர சிகிச்சை பிரிவு , மரண ஓலம் , கூச்சல் , வெட்டு காயம் . ஏற்கனவே சோர்ந்திருந்த மனது மேலும் சோர்ந்தது .

நாலாவது மாடியில் ICU. குழந்தையை வாங்கி கொண்டு வெளியே காத்திருக்க சொன்னார்கள் . கதவை திறந்த பொழுது பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தெரிந்தன . இரண்டு மூன்று குடும்பம் வெளியில் உட்கார்ந்திருந்தது . எல்லோரும் தத்தம் குழந்தைக்காக காத்திருந்தார்கள் .

ஐந்து நிமிடங்களில் கதவு திறந்தது . மீண்டும் ஒரு பேப்பர் . ‘…இந்த காரணத்திற்காக குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது . ஏதேனும் விபரீதம் ……..தந்தையாகிய நான் …….சுய நினைவுடன் …..’ மீண்டும் அதே. உடற்சோர்வோடு மனசோர்வும் சேர்ந்து கொண்டது . மிக களைப்பாக உணர்ந்தேன் .

வெளியில் காத்திருந்தவர்களில் ஒருவர் புது கோட்டை , ஒருவர் கன்னியாகுமாரி .

‘அங்க முடியாதுனுட்டாங்க சார் . இங்க கொண்டு வந்துருக்கோம்'

‘இங்க நல்ல பாப்பாங்களா? ’ என் கவலை

ஒரு குழந்தைக்கு ஒரு கிலோ தான் எடை . இன்னொரு குழந்தை முதுகில் கட்டி . இன்னொரு குழந்தைக்கு ஜான்டிஸ் .

என் குழந்தைக்கு மூச்சு திணறல் மட்டும் தான் . அதுவும் நார்மல் . சரியாகிவிடும் என்று சொல்லிருந்தார்கள் . ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை ..’ மற்றவர் படும் துயரத்திற்கு இது பெரியதாக தெரியவில்லை . இந்த மட்டோடு விட்டாயே இறைவா என்று தான் தோன்றியது .

ஒரு மருந்து சீட்டு குடுத்தார்கள் . 10 சிரின்ஜ் , 3 இஞ்சக்க்ஷன் , ட்ரிப்ஸ் வகையறா என்று 20 ஐட்டம் . மொத்தம் இரண்டு நாட்கள் சொல்லப்பட்டது பின்பு ஜான்டிஸ் வந்து சேர்ந்து கொண்டது . இன்னுமொரு மூன்று நாட்கள் என மொத்தம் ஐந்து நாட்கள் ஆகியது . இதற்கிடையில் பிறந்தது முதல் ஒரு முறை கூட குழந்தையின் முகம் பார்க்காமல் மனைவி களைத்திருந்தாள் . ஐந்து நாட்கள் ஹாஸ்பிட்டல் சூழல் ஓரளவு மனதிற்கு பழகிவிட்டிருந்தது .

ஐந்தாம் நாள் குழந்தையை கையில் கொடுத்தார்கள் . அதன் கைகள் முழுவதும் ஊசி குத்தப்பட்டு புன்னாகிருந்தது . பிறந்த சில நேரங்களில் இந்த பிஞ்சு இத்தனை கஷ்டம் அனுபவித்திருந்தது . குழந்தையை தாயின் கையில் குடுத்து ‘இது தான் என் பாப்பாவா ? இவ்ளோ நாள் தனியாவே இருந்தியா?’ என்று கொஞ்சிய பொது இந்த ஐந்து நாள் வேதனையும் மறந்துவிட்டது .

இறைவா பிரார்த்தனை என்னோடுதாகட்டும் . கொடுப்பது உன்னோடதாகட்டும் .


முதன் முதலில் சுஜாதா எனக்கு பரிச்சியமானது எட்டாவது வகுப்பில். பஞ்சதந்திரக்கதைகள் ,பீர்பால் ,ராயர் அப்பாஜி ,தெனாலி ராமன் , சிறுவர்மலர் , மணி தவிர மற்ற நாவல்களெல்லாம் பெரியவர்கள் படிக்க வேண்டியவை என்று அறிவுறுத்தல். குங்குமம் குமுதம் கூட கிடையாது. அந்த ரெண்டு கெட்டான் வயதில் தான் என் நண்பன் (ஒரு வயது பெரியவன் -eligible ) சுஜாதாவின் புத்தகத்தை அறிமுகம் செய்தான் . நாவல் பெயர் ஞாபகம் இல்லை . மூன்று பேர் ,பதினெட்டு பத்தொன்பது வயதில் இருப்பவர்கள் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஜாலி ட்ரிப்பாக மங்களூர் செல்வது தான் கதை . அதில் ஏதோ ஒரு பக்கத்தில் நாயகி ஓடி வருவதை இரண்டு மூன்று வார்த்தைகளில் ஸ்பஷ்டமாக விவரித்திருந்தார் . ச்சீ , இவ்வளவு பச்சையாக எழுதுபவரா என்று அதை மூடி வைத்து விட்டேன் . அப்பொழுது சுஜாதா ஒரு பெண் எழுத்தாளர் என்று தான் புரிந்து வைத்திருந்தேன் . அதன் பின் நான்கு வருடங்களுக்கு பிறகு சகஜமாக ‘எல்லாம்’ படிக்க தொடங்கியிருந்த காலத்தில் ‘விஞ்ஞானச் சிறுகதைகள்’ தொகுப்பு கிடைத்தது. தலையணை மாதிரியான புத்தகத்தொகுப்பு . அதை படித்த பொழுது தான் புரிந்தது , இத்தனை நாட்களாக இவரது எழுத்துக்களை அடையாளம் காணமல் எவ்வளவு இழந்திருந்தேன் என்று.

அதன் பின்பு ‘பிரிவோம் சந்திப்போம் ’, ‘என் இனிய இயந்திரா ’, ‘மீண்டும் ஜூனோ’ ,’தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ’,’ஸ்ரீரங்கத்து தேவதைகள் ’,’பதவிக்காக ’,’நகரம்' ,’குருப்ரசாத்தின் கடைசி தினம்’ மற்றும் பலவற்றை பலமுறை படித்தாய்விட்டது. முக்கியமாக கல்லூரி தினங்களில் ஒவ்வொரு பருவதேர்வுக்கும் எனக்கு சுஜாதா வேண்டிருந்தது . ஏதாவது சிறுகதை தொகுப்பு , கற்றதும் பெற்றதும் என ஏதாவது ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு புத்தகம் என அருகில் இருக்க வேண்டும். அதில் இருந்த ஹாஸ்யம் அல்லது இயல்பான ஒரு நடை ஏதோ ஒன்று ஈர்த்தது.

கல்லூரியின் நான்கு வருடங்களில் நான் படித்த புத்தகங்களில் எண்பது சதவிதம் சுஜாதாவே . சம்பந்தமில்லாமல் மென்பொருளில் 'Code' எழுதுவதற்கு வேலைக்கு சென்ற ஒரு தினம் அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“இன்னைக்கு நியுஸ் பாத்தியாடா?”
“ஏம்மா என்னாச்சு ?”
“சுஜாதா இறந்துட்டாருடா ”.
நான் அதிகாமா படித்தது சுஜாதாவின் புத்தகம் என்று அம்மாவிற்கு தெரியும் என்பதே அப்போது தான் உணர்ந்தேன் . அவருடைய இறப்பு அந்த கணம் ஒரு துயரத்தை அளித்தாலும் அதை விட என்னை சுஜாதாவின் பரம விசிறியாக பார்த்தது பெருமையாக உணர்ந்தேன் . அன்று மதியமே அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகரில் நடப்பதாக இருந்தது. இடம் தெரிந்தாலும் அன்று போவதற்கான அனுமதி கிடைக்கவில்லை . சுஜாதாவை பிடித்த நண்பர்களிடம் வருத்தத்தை பகிர்ந்துகொண்டது நினைவில் இருக்கிறது. ஒருமுறை அவரோடு BEL இல் பணியாற்றிய நண்பரை பார்க்க நேர்ந்தது. அவருடைய நண்பரை பார்த்ததற்கே அவ்வளவு மகிழ்ச்சி என்றால், அவரை நேரில் பார்த்திருந்தால் வாழ்நாள் மூச்சுடும் பேசி பேசி கழித்திருப்பேன்.

அதன் பின்பு மூன்று நான்கு வருடங்கள் ஆகி விட்டன. கற்றதும் பெற்றதும் நான்காம் பாகம் பிறகு எதுவும் வரவில்லை. ஆனால் இன்று கூட அதன் முதல் பாகம் படிக்கும் பொழுது அதன் இளமையும் நகைச்சுவை உணர்வையும் முதல் தடவை படிப்பது போன்ற உணர்வை தருகின்றன.

இறுதி மூச்சு மட்டும் சுஜாதாவின் எழுத்துக்களோடு கழிக்க வேண்டும் .

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read