அசை-2

அம்பிகா அவளது பெயர். அவ்வளாவு எளிதில் மறந்து விட கூடிய பெயரில்லை அது எனக்கு. எட்டயபுரதிற்கு நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே மற்றலாகிவிட்டொம்.

 அப்பொழுதெல்லம் அவள் வீட்டிற்கு அருகில் நாங்கள் இல்லை. சரியாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவள் வீட்டிற்கு அருகில் வந்து விட்டோம். நங்கள் இருந்த காம்பவுன்டிற்கு அருகிலேயே அவளது வீடும் இருந்தது, ஒரு இரண்டு வீடு தள்ளி. ஒரே பள்ளி தான். ஒரே வகுப்பு தான். பிறகு ஒரே தெருவென்று வேறு ஆகி விட்டது.நெடு நெடு வென்ற ஒடிசலான தேகம். எப்பொழுதுமே ஃப்ராக் தான் அணிந்திருப்பாள். குதிரை வால் போட்டிருப்பாள். நெற்றி ஒட்டி முடியை கொஞ்சம் இழுத்து விட்டு கொண்டு பஃப் என்று கூறுவாள். லோலாக்கு போல் காதில் ஜிமிக்கி . எப்பொழுது நடந்தாலும் காதில் உள்ள அந்த ஜிமிக்கியும் குதிரை வாலும் ஆடிகொண்டே இருக்கும். எங்கள் காம்பௌன்டில் முருகேஷ், கோபி என்று என்னை போல் சிறு வாண்டுகள் இருந்தாலும் அதிகமாக விளையாடியது எல்லாம் அவளோடுதான்.

ஒரே ஸ்கூல் என்பதால் ஒரே நேரத்தில் தான் காலையில் கிளம்புவோம். எங்கள் வீடு தாண்டி தான் அவள் ஸ்கூலுக்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் நான் அவள் வீடுக்கு சென்று காத்திருப்பேன். திரும்பி வீட்டிற்கு வரும்பொழுதும் ஒன்றாகத்தான் வருவோம். நடுவில் ஸ்கூலில் சாப்பிடுவதிலிருந்து படிப்பது வரை எல்லமே ஒன்றாகத்தான்.

கண்டிப்பாக அது சனிகிழமை மதியமாக இருக்க வேண்டும். ஏனென்றால் காம்பௌன்டில் எல்லோர் வீட்டிலும் சாபிட்டு விட்டு தூங்கி விட்டிருந்தார்கள், வாண்டுகளைத்தவிர. மதிய நேரம் வழக்கம் போல் நாங்கள் காம்பௌன்டிற்குள் ஒடி பிடித்து விளையாடி கொண்டிருந்தோம். அம்பிகா தீடிரென்று எங்கள் வீட்டிற்கு வந்தாள். "மெழுகு பொம்மை செய்யாலாம்,வா" என்று கூப்பிட்டாள் . அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு முடுக்கு உண்டு. அது வழியாக உள்ளே சென்றால் அவர்கள் வீட்டு புற வாசலை அடைந்து விடலாம். இங்கிருப்பது போல் அங்கு வீட்டிற்குள் நுழைந்தவுடனே வீடு முடிந்து விடாது. நீளமாக இருக்கும். ஒரு வீட்டில் குறைந்தது ஆறு தட்டி இருக்கும். வீட்டின் நுழைவாயில் ஒரு வழியென்றால் புற வாசல் வழியாக அடுத்த தெருவிற்குள் வந்து விடலாம். அந்த முடுக்கு வழியாக நானும் அவளும் அவள் வீட்டு புற வாசலுக்கு சென்றோம். அவள் மெதுவாக வீட்டிற்குள் சென்று ஒரு பழைய ஈய சட்டியை எடுத்து வந்தாள். சூடத்தை ஒரு பொம்மை போன்ற டப்பாவில் அடைத்து தருவார்கள்.கரடி, நாய் என்று எல்லா வகை பொம்மையும் இருக்கும்.இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவிலை. அதில் இரண்டு பொம்மையை எடுத்து கொண்டோம்.பென்குயின் போல ஒன்று இருந்தது. கொஞ்சம் காய்ந்த சுள்ளிகளாக பொறுக்கினோம். இரண்டு கல்லை அருகருகே வைத்து கொண்டோம். சுள்ளியெல்லம் நடுவில் வைத்து வீட்டிற்கு தெரியாமல் எடுத்து வந்த சில சூடன்களை உள்ளே போட்டு நெருப்பும் வைத்துவிடோம். பிறகு ஈய சட்டியை மேலே வைத்து, எடுத்து வந்த மெழுகு துண்டங்களையெல்லாம் உள்ளே பொட்டு விட்டு ஏதொ சமயல் செய்வது போல் அருகிலயே உட்கார்ந்து கொண்டு நெருப்பை ஊதி கொண்டிருந்தோம். அவ்வபொழுது நான் முடுக்கு வழியாக தெரு வரை சென்று யாரவது வருகிறார்களா என்று பார்த்து விட்டு வந்தேன். இல்லயென்றால் யாராவது சென்று "உங்கள் பிள்ளை தீயில் விளையடுகிறான், பாருங்கள். என்று மாட்டி விடுவார்கள். ஆயிற்று. ஒரு வழியாக மெழுகையெல்லம் உருக்கி அந்த டப்பாவில் ஊற்றினோம். ஒரு டப்பா சூட்டில் இளகி விட்டது. இன்னொரு பச்சை கலர் டப்பா இருக்க அதில் ஊற்றினோம். ஒரு ஐந்து நிமிடத்தில் அவள் எடுத்து வந்த பிளேடை வைத்து டப்பாவை கிழித்தேன். லேஸாக சுண்டு விரலில் கீறி ரத்தம் வந்து விட்டது.ஆனால் மெழுகு பொம்மை அழாக இருந்தது. "ஐய்" என்று ஒரே நேரத்தில் இருவரும் கதினோம். "அம்பீஈஈ" என்று அவர்கள் வீட்டில் கூப்பிட "இதை நீயே வச்சுக்கொ" என்று சொல்லி விட்டு குதிரை வால் ஆட ஒடி விட்டாள். அதன் பிறகு வீட்டில் எபொழுதெல்லாம் கரண்ட் போகுமோ அப்பொழுதெல்லம் மெழுகின் அருகில் உட்கார்ந்து கொண்டு உருகி வழிவதையெல்லம் எடுத்து ஒரு கவரில் பொட்டு வைக்க ஆரம்பித்தேன். ஆனால் அதன் பின்பு ஏனொ நாங்கள் மெழு பொம்மை செய்யவே இல்லை. அந்த கரடி பொம்மை இன்றும் கூட என் ஷெல்ஃபில் ஒரு கை உடைந்து உட்கார்ந்திருக்கிறது.

அதே போல் நாங்கள் எல்லொருமே நிலாச்சோறு சாப்பிடுவதுண்டு. அவள் வீடு தான் எல்லொருக்குமே மீட்டிங் பாய்ன்ட். வாசலில் பெரிய திண்ணை இருந்தது.இப்பொழுதும் இருகிறதா என்று தெரியவில்லை.ஒரு பத்து பேர் வட்டமாக உட்கார்ந்து கொண்டு பல விடயங்களை கதைத்து கொண்டிருப்போம்.பெரும்பாலும் அன்று ஸ்கூலில் நடந்தவை, யார் மிஸ்ஸிடம் அடி வாங்கினார்கள், கொகொ வில் அவுட்டானது யார்? இதுபோன்றவையாகத்தான் இருக்கும். தட்டுகளை மாற்றிகொள்வோம். நான் என்றுமே கொண்டு போன சாதத்தை சப்பிட்டது கிடையாது. கொண்டு போன மறு நிமிடமே என் தட்டு பல கை மாறி வந்து விடும். கொண்டு வந்த பால் சாதம் காலியாகி ஒரே ஒரு எழுமிச்சை ஊறுகாய் துண்டம் மட்டும் மீதம் இருக்கும். அம்பி வீட்டின் ஸ்பெஷல் எபொழுதுமே சுண்டக்கறி தான். அடடா இந்த சுண்டக்கறி பற்றியே தனியாக ஒரு இடுகை இடலாம். அவ்வளவு அற்புதம்.( முதல் நாள் கறி மீதமிருந்தால் அதை அடுத்தநாள் சூடு படுத்திதருவார்கள்). இப்பொழுது இருக்கு காபர் பாட்டத்திலும், நான் ஸ்டிக் பேனிலும் அந்த சுவை கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் அம்பி வீட்டில் நிலாசோறு சாப்பிடாமல் அந்த நாள் எங்களுக்கு முழுமயடைந்ததில்லை.

ஒவ்வொரு ஆண்டு விழாவும் எங்கள் ஸ்கூலில் மூன்று டான்ஸ் இருக்கும். மூன்றில் எப்படியும் இரண்டில் கலந்துவிடுவோம். ஏனென்றால் மொத்தமாகவே ஒரு முப்பது பேர் தான் பள்ளியில். கடவுளின் சித்தம் அப்படியா இல்லை எங்கள் ஸ்கூலின் சுப்புலட்சுமி டீச்சரின் கருணையா என்று தெரியவில்லை, எப்பொழுதுமே அம்பி தான் எனக்கு ஜோடி. இன்றும் கூட நன்றாக நினைவிருக்கிறது. அந்த பாட்டு கூட புதிய மன்னர்கள் படத்தில் வரும் ஒரு பாடல். கிட்ட தட்ட ஒரு வாரம் முழுவதும் பயிற்சி தான். அதுவும் எப்படி? எங்கள் பக்கத்து ஊரில் இருந்து ஒருவர் வருவார்,டான்ஸ் சொல்லிகொடுப்பதற்கென்றே.செல்வம் என்று பெயர். எப்பொழுதாவது ஒன்றிரண்டு மிஸ்ஸும் கூட இருந்து சொல்லிகுடுப்பதுண்டு. ஒரு பிலிப்ஸ் டேப் ரிக்கர்டரில் பாட்டை போட்டு விட்டு டான்ஸ் மழை தான். எனக்கு சொல்லி கொடுப்பதற்குள் கொஞ்சம் பொறுமையிழந்து விடுவார். பின்னே? எப்பொழுதுமே அவர் சொல்லி கொடுக்கும் ஸ்டெப்புகள் கடினமாகத்தான் இருக்கும். ரப்பர் போல உடம்பை வளைக்க சொல்லுவார். சும்மாவே குனிந்து நிமிர்வது கிடையாது. ஒரு ஸ்டெப்பை எனக்கு சொல்லி கொடுப்பத்ற்குள் மூன்று முறை டீ குடித்து விட்டு வருவார். ஆனால் அம்பி கற்பூரமாய் பிடித்து கொண்டு ஆடி விடுவாள்.முழுவதுமாக கால் சிராய் போட்டு ப்ராக்டிஸ் செய்திருந்த எங்களுக்கு,வேட்டி காட்டி தான் ஆட வேண்டும் என்று கூறியதும் பகீரென்றது. அரைஞான் கயிறு பெல்ட் சகிதமாக மேடையேறிவிட்டோம். "நீ வெட்டி வெட்டி போட்ட் நகத்திலெல்லாம்" என்ற வரியில் மட்டும் கூட்டத்தில் பயங்கர ஆரவாரம். ஏதொ எங்கள் ஆட்டம் தான் படு பிரமாதம் என்று நான் நினைத்து கொண்டு கீழே பார்த்தால், ஆ! கட்டியிருந்த வேட்டியை காணவில்லை !!!. படீரென்று பின்னால் சென்று வேட்டியை எடுத்து கட்டி கொண்டு ஏதோ ஆடி சமாளித்து விட்டேன். கூட்டம் கூட பரவாயில்லை,அம்பி முன்னல் அதுவும் அவளுக்கு ஜோடியாக ஆடிய பொழுது இப்படி நடந்ததில் கொஞ்சம் வெட்கமாக போய் விட்டது. பட்டு வேட்டி காலை வாரி விட்டிருந்தது. வீட்டிற்கு வந்த பின்பு தான் தெரிந்தது, அது வேட்டி கூட இல்லையாம், எங்கள் தாத்த தோளில் போட்டு கொள்ளும் நேரியல் வகை துண்டாம். தாத்தாவும் மேலிருந்து சதி செய்துவிட்டார் என்று நினைத்துகொண்டேன். இதயெல்லாம் விட செல்வம் எங்களுக்கு டான்ஸ் ஒழுங்காக சொல்லி கொடுத்தாரோ இல்லயோ, ஒரு மாதத்திற்குள் அவருக்கும் எங்கள் சைன்ஸ் டீச்சர் பார்வதிக்கும் கல்யாணம் ஆகியிருந்தது.

இதெல்லாம் போதாது என்று ஸ்பஷ்டமாக வேறு ஒரு காரியம் செய்தேன். ஏதோ ஒரு நாள் தேரோட்டம் பார்த்து விட்டு எங்கள் வீட்டில் திரும்பி கொண்டிருந்தோம். வருடா வருடம் நடக்கும் விழா அது. எங்களுடன் எங்கள் வீட்டு ஓனரும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள். அப்பொழுது தான் வாங்கியருந்த கேப்டன் சைக்கிளை டக் அடித்துகொண்டே ஒட்டி வந்தேன். நான் கொஞ்சம் வேகமாக செல்வதை பார்த்த என் அம்மா " டேய்,கணேஷை அப்டியே கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுரு" என்றார்கள். கணேஷ் ஓனர் பையன். ஆறு வயது. சரி லோட் அடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை வேறு. கேரியரில் அவனை வைத்து கொண்டு டக் அடிக்க ஆரம்பித்தேன். அப்படியே கொஞ்ச தூரம் வந்த பிறகு தான் அது நல்ல நேரம் என்று தெரிந்தது. ஏனென்றால் அம்பி எதிரில் வந்து கொண்டிருந்தாள். முகத்தில் எதோ பதற்றம். கூடவே அவள் தங்கை வேறு. "அம்பி என்னாயிற்று?" என்று கேட்டேன். அவள் தங்கை அவளுடைய தங்கையின் பீடிங் பாட்டிலை எதோ கடையில் வைத்து விட்டாளாம். "ஹே ப்ளீஸ் பா . கொஞ்சம் சைக்கிள் கொடேன்" என்று கெஞ்சினாள். பாரி வள்ளல் போல "டேய் கணேஷ் இறங்குடா" என்று அவனையும் இறக்கி விட்டுவிட்டு " இந்தா அம்பி. பாத்து போயிட்டு வா" என்று வேறு அட்வைசுடன் அனுப்பி வைத்தேன். வீட்டிலிருந்து திரும்பி வருவதற்குள் அவள் வர வேண்டுமே என்று அப்பொழுது தான் உரைக்க அவள் போன வழியை "தேமே" என்று பார்க்க ஆரம்பித்தேன். ம்ஹூம் அவள் வரவில்லை.அருகில் வந்தது ஓனரும் எங்கள் அம்மாவும் மட்டும் தான். அருகில் வரவும் "அம்மா, அம்பி சைக்கிளை எடுத்துட்டு போய்டா, இப்ப வந்துடுவா" என்று சொல்ல "கணேஷ் எங்கே ?" என்று அவர்கள் கேட்க, இவ்வளவு நேரம் அமைதியாக என் அருகில் நின்றவன் சதி செய்ததை போல நடு ரோட்டில் உட்கார்ந்து மண்ணில் கை அலம்ப ஆரம்பித்து விட்டான். அப்பொழுது எங்கள் அம்மா என்னை ஒன்றும் சொல்லவில்லை. வீட்டிற்கு வந்ததும் தான் சேதி தெரிந்தது. வீட்டிற்கு வெளியே நிற்க வைத்து " உனக்கு அவ முக்கியமா, ஓனர் முக்கியமா?" என்று கேள்வி கேட்ட பொழுது எங்கே கண்டுபிடித்து விட்டார்களோ என்று திகைத்து விட்டேன். பிறகு நான் நடுவில் இருக்க கேமரா ஸ்லோ மோஷனில் என்னை சுற்றி சுற்றி வர ஒரே வசை பாடல் தான். காம்பௌண்டில் தலைகள் அவ்வப்போது எட்டி பார்க்க எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது.

வேறு ஒரு நிகழ்ச்சியும் இப்பொழுது தான் நியாபகத்திற்கு வருகிறது. அந்த ஞாயிற்று கிழமை ஒளிபரபாகியிருந்த எதோ ஒரு தமிழ் படத்தை பார்த்த ஆர்வக்கோளாரில், ஆண்டு விழாவில் அவளோடு ஆடிய போது இரண்டு முறை பக்கத்திலிருந்த கிருஷ்ண பெருமாளை பார்த்து அவன் என்னை பார்க்க வில்லை என்று உறுதி செய்து கொண்ட பின், அம்பியையும் அவள் எங்கு பார்க்கிறாள் என்பதையும் ஒரு முறை பார்த்து விட்டு அவளை பார்த்து கண்ணடித்து வைத்தேன். இது ஏதோ பெரிய குற்ற உணர்வாக ரொம்ப நாள் தோன்றி கொண்டிருந்தது. அதனால் காந்திக்கு அடுத்த வாரிசை போல நினைத்து கொண்டு இதைபற்றி அம்மாவிடம் கூற வேண்டும் என்று ஒரு முறை அம்மாவிடம் கூற, அவர்களும் "ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல பிறகு தான் தெரிந்தது, அந்த "ம்ம்ம்" தூக்கத்தில் வந்த "ம்ம்ம்" என்று. ஒரு வேளை முழித்திருந்தால் இன்னும் ஒரு முறை பல தலைகள் எட்டி பார்க்க கேமரா படு ஸ்லோ மோஷனில் சுற்றியிருக்கும்.

ஆறாவது வகுப்பு முடிக்கவும் அப்பாவுக்கு இடமாற்றம் கிடைக்கவும் சரியாக இருந்தது. வீட்டை காலி செய்து சாமான்களை எல்லாம் வேனில் ஏற்றி வைக்க அம்பி மிகவும் உதவி செய்தாள். எல்லாம் எடுத்து வைத்த பின் வேனில் முன் சீட்டில் ஏறி உட்கார்ந்த பின் அம்பி அருகில் வந்தாள்.
"ஏ எங்கலேல்லாம் விட்டுட்டு போறியே. வருத்தமா இல்லையா?" என்றாள்.
நான் மாற்றலாகி போகும் ஊரில் என் பழைய நண்பர்களை பார்க்க போகும் சந்தோசத்தில் இருந்ததால்,

"இல்ல அம்பி, ரொம்ப சந்தோசமா இருக்கு.என் பழைய ப்ரண்ட்செல்லாம் பாக்கப்போறேன்." என்றேன்.

அது தான் அவளிடம் நான் பேசிய கடைசி வார்த்தைகள். அப்பொழுது வருத்தபடவில்லையானாலும் இப்பொழுது நினைத்தாலும் மிக வருத்தம் தரக்கூடிய ஒரு விஷயமாக அது அமைந்துவிட்டது.வருடங்கள் பல ஓடி விட்டன. அதன் பிறகு எத்தனையோ பெண்களை கடந்து சென்றிருந்தாலும் அம்பி போல் யாரும் தோன்றவில்லை. ஆனால் இந்த நியாபகங்கள் எல்லாம் நெஞ்சில் எதோ ஒரு இடத்தில் புதைந்து கொண்டு அவ்வப்போது தூரத்தே தெரியும் ரயிலை பார்த்து கையை அசைக்கும் சிறுவர்களின் குதுகலத்தை போல் சந்தோசத்தை கொடுக்கின்றன என்பதில் எந்த ஐயமுமில்லை.


Those were the Best days of My Life.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read