கடந்த சனிகிழமை வீட்டில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எங்கள் ஊரிலிருந்து பொறியியல் கலந்தாய்வுக்காக ஒருவர் சென்னை வருவதாகவும்,
அப்பாவுக்கு முக்கியமான அலுவலின் காரணமமாக வர முடியாததால் என்னை அவருடன் இருந்து உதவி செய்யவும் சொல்லியிருந்தார்கள்.
எனக்கு அவரை நன்றாகவே தெரியும். ஊரில் இருந்தவரை நான் சனிக்கிழமை தோறும் வழக்கமாக செல்லும் கோவிலில் அவர் பூக்கடை வைத்திருப்பவர். அவருடைய மகளுக்கு தான் கலந்தாய்வு. வழக்கத்திற்கு மாறாக காலை கொஞ்சம் சீக்கிரமே எழுந்து முன்னமே பேசி வைத்திருந்ததை போல் சென்று அவரை கல்லூரியில் சந்தித்த பொழுது மணி ஒன்பது முப்பது. அவரை பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி "சாபிட்டாயா?" என்பது தான் . சென்னை வந்த பிறகு இந்த இந்த மாதிரியான விசாரிப்பை கேட்டு பல நாட்கள் ஆகியிருந்தது. சாப்பிட்டேன் என்று பொய் சொல்லி விட்டு உள்ளே சென்றோம். கலந்தாய்வுக்காக அந்த கல்லூரிக்குள் சென்றவுடனே எனக்கு நினைவுக்கு வந்தது பொன்னப்பன் மாமா தான். காரணம் இருந்தது.

பிளஸ் டூ படிக்கும் போதிருந்தே மெடிக்கல் என்பதே குறியாக இருந்தேன். கணிசமான மார்க்கில் கோட்டை விட்ட பொழுது கைகொடுத்தது, நான் தூக்கத்தில் சென்று வேண்டா வெறுப்பாக எழுதிய இந்த இன்ஜினியரிங் கட் ஆப் மார்க் தான். என்னுடைய கலந்தாய்வுக்கும் பொன்னப்பன் மாமாவை அப்பா கூப்பிட்டிருந்தார்கள். பின்னே. எல்லா முக்கிய நிகழ்வும் அவருடைய ஆலோசனை இல்லாமல் நடைபெறாது. அப்பாவின் பால்ய கால நண்பர்.இருவரும் ஆபிஸ் முடிந்து இரவு நேர இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு வந்த கதையெல்லாம் அப்பா கூறியதுண்டு. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே அவருக்கு வழுக்கை தான். வெள்ளெழுத்து கண்ணாடி ஒன்று உண்டு. TVS champ வண்டி வைத்திருப்பார். அவர் எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் கொஞ்சம் குதுக்கலாமாய்விடும். காரணம் அவர் வரும்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் மெது வடை செய்வார்கள். வடையை சட்னியில் குளிப்பாட்டி அவர் சாப்பிடுவதை பார்த்தே எனக்கும் அந்த மெது வடை ரொம்ப பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மொத்தத்தில் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர்.

அப்பா வேலை பார்க்கும் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கும் என்று தெரிந்தது.அப்பொழுது மதுரை வரை தான் செல்ல வேண்டிருந்தது. அதிகாலை நான்கு மணிக்கே கிளம்பி வந்திருந்தார். ரிடயர்ட் ஆகி ஒரு நான்கு வருடங்களாவது ஆகியிருக்கும். இன்ஜினியரிங் பற்றி முழுமையான விவரம் தெரியாதலால் எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் பொன்னப்பன் மாமா தான். அறுபது வயதிற்கு மேல் அந்த காலைப்பனியிலும் அவர் எனக்காக வந்திருந்தார். அப்பாவின் ஆசை போலவே ஒரு அரசு கல்லூரியில் இடம் கிடைத்து அதை உறுதி செய்து விட்டு வெளியே வந்ததும் நான் கேட்ட முதல் கேள்வி,

" மாமா இத முடிச்சிட்டு என்ன பன்றது?

"அதுக்கும் மேல படிடா மருமகனே."

" இல்ல நான் வேலைக்கு போகணும். ராஜா அண்ணன் மாதிரி டெல்லி போனும் என்றேன்". ராஜா அவருடைய ஒரே மகன். இன்ஜினியராக வேலை பார்த்து கொண்டிருந்தார்.

"நீயேன் கவலைப்படற. நானாச்சு உனக்கு வேலை வாங்கி தரதுக்கு. ஒழுங்கா படி இப்ப" என்றார்.

சில நாட்களில் கல்லூரியில் சேர்ந்து ஒழுங்காக படித்து கொண்டிருந்த நேரம். ஆறாவது செமெஸ்டர் பரீட்சை நடந்து கொண்டிருந்தது . அதிகாலை நான்கு மணிக்கு ஒரு அழைப்பு வந்தது பானு அக்காவிடமிருந்து. பானு பொன்னப்பன் மாமாவின் இரண்டாவது பெண். போனுக்கு அருகில் எப்பொழுதும் நான் தான் தூங்குவேன்.

"ஹல்லோ"

" டா நான் பானு பேசறேன் டா."

"சொல்லுங்கக்கா". தூக்க கலக்கத்தில் யாரென்று பிடிபட சில நேரம் ஆனது.
"மாமா இறந்துட்டாங்க". அவர்கள் சொன்னதை கேட்டதும் அந்த நொடியில் உடல் முழுவதும் வேர்த்து விட்டது.என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"ஹான்" என்றேன்.

"அப்பாட்ட சொல்லிடு"

"சொல்லிடறேன் கா" என்றேன். போனை வைத்து விட்டார்கள். தூங்கி கொண்டிருந்த அப்பாவை எழுப்பி சொல்லிய பின்பு சில நேரம் வீட்டில் யாரும் பேசிக்கொள்ளவில்லை. விடிந்த பிறகு அப்பா அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள். பரீட்ச்சை நேரம் என்பதால் என்னால் செல்ல முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் முக்கியாமான முடிவை எடுக்க எனக்காக வந்தவரின் இறுதி பயணத்திற்கு செல்ல முடியாதது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது. இன்று வரை அது மிகப்பபெரிய குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. அதன் பிறகு ஒரு மாதத்தில் கல்லூரி வளாகத்தேர்விலே வேலை கிடைத்த பொழுதும், வேலைக்கு சேர்ந்த பொழுதும், சேர்ந்து பின் முதல் மாத சம்பளம் வாங்கிய பொழுதும் நினைவுக்கு வந்தவர் அவர் தான். இருந்திருந்தால் மிகுந்த சந்தோசமடைந்திருப்பார்.

நினைத்த கல்லூரியில் அந்த பெண்ணிற்கு இடம் கிடைத்தது. கல்லூரி வெளி வந்து அவர்களை வழி அனுப்பிய பின்பு கண்களில் ஓரம் துளிர்த்திருந்த நீரை தவிர்க்க முடியவில்லை.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read