வழக்கம் போல் ஆஃபிஸுக்கு கிளம்பி வந்து கொண்டிருந்தேன். மணி ஒன்பது முப்பது. ஜெமினி ஃப்லையோவர் ஏறுவதற்க்குள் சரியான ட்ராஃபிக். அந்த ட்ராஃபிகில் செல்வதை விட இறங்கி நடந்து விடலாம் என்று இறங்கி நடக்க ஆரம்பித்தேன். இரண்டு நாய்கள் குறைத்துகொண்டே துரத்தி சென்றன. மழை லேஸாக தூர ஆரம்பித்தது.

ஒரு இளைஞனும் இளைஞியும் கட்டி கொண்டு பறந்தார்கள். காற்று நுழைய கூட இடமில்லை. அவர்கள் பின்னாடியே நான் வந்த பேருந்துக்கு பின்னால் பல்ஸரில் ஒரு இளைஞன் ஹாரன் அடித்து கொண்டே சென்றான். சிகப்பு நிற பல்ஸர். சே நாமளும் எப்ப தான் வாங்கப் போரமோ? டபுல் சைலன்ஸர். சத்தம் அவ்வளவாக இல்லை. பார்த்துகொண்டே இருந்தேன்.

நான் இறங்கிய பேருந்தை முந்துவதற்கு இடப்புறமாக அந்த இளைஞன் முயன்றான். நடை மேடை(platfarm) ஒரமாக நான் நடந்து கொண்டிருந்தேன். இரண்டு நொடி கூட கடந்திருக்காது. அதற்குள் அது நடந்து முடிந்து விட்டது. அவன் இடப்புறமாக பேருந்தை முந்த முயல, அந்த பேருந்தோ இடப்புறம் நன்றாக ஒதுங்கி விட்டது. நடைமேடை கொஞ்சம் உயரமாக இருந்ததால் அவனால் அங்கு ஏற முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவன் பேருந்தை முந்தி விடலாம் என்று பேருந்து வந்த திசையிலயே பல்ஸரை திருப்பினான். அடுத்த நொடியே அவன் பேருந்தின் பம்பர் தட்டி முன்புறம் சரிய அதற்காகவே வந்தது போல் பேருந்து அவன் மேல் ஏறியது.

எனக்கு எதிரே வந்த பெண் கையிலிருந்த பேக்கை கீழே போட்டு விட்டு கத்தினாள். டிஃபன் பாக்ஸிலிருந்து சாதம் சிதறியது. பேருந்தின் முன் சக்கரம் அவனது வயிற்றில் ஏறி இறங்க அவன் தலையை சிலுப்பிகொண்டான். பின் சக்கரம் அவன் தலையில் ஏறி இறங்கியது. அவன் தலையில் ஏற்ய போது ஏற்பட்ட "படக்" என்று எழும்பு நொறிகிற சத்தம் இன்றும் கூட என் காதில்கேட்டால் என்னவோ போல் ஆகிறது.

பல்ஸரில் முன் சக்கரங்கள் சுற்றி கொண்டிருந்தன. சிறிது நேரத்திற்க்கு முன் அதில் ஆரோகணித்து வந்தவன் ரோடில் சரிந்திருந்தான். உயிர் பிரிந்திரிக்கும் என்று நினைக்கிறேன். வெகு வேகமாக கூட்டம் கூடியது. சலசலவென்ற பேசிக்கொன்டார்கள். அருகில் இருந்த ட்ராஃபிக் போலிஸ் வந்தார். உடனடியாக அவனை சுற்றி தடுப்புகள் போடப்பட்டன. அவன் மீது ஏறிய பேருந்து சில நொடிகள் நின்று விட்டு அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் கிளம்பியது. வெள்ளை சீருடை அணிந்த இருவர் வந்தார்கள். சாக்பீஸால் அவனை சுற்றி கோடு வரையபட்டது. இப்பொழுதும் அவன் சலனமற்று இருந்தான். சில நிமிடங்கள் ட்ராஃபிக் ஸ்தம்பித்தது. ஒரு ஆம்புலன்ஸ் வந்து அதில் அ(தை)வனை ஏற்றிச்சென்றார்கள். இன்னும் அவனை சுற்றி வரையபட்ட கோடு அப்படியே இருந்தது.

பல்ஸர் அருகில் சிதறிக்கிடந்த அவனுடய கைப்பேசி ஏதோ ஆங்கிலப்பாடல் ஒலித்து அவனை அழைக்க, ஒரு நொடி எல்லோரும் திரும்பி பார்த்தோம். அருகில் இருந்த போலிஸ்காரர் அதை எடுத்து பேச ஆரம்பித்தார். யார் அழைத்திருந்தாலும் அவர்களிடம் அவனுக்கு சிறிய விபத்து என்றும், எங்கு வர வேண்டும் என்றும் சொல்லபட்டிருக்கும். அவனுடய பெற்றோர்களுக்கும் அதன் மூலம் தகவல் சென்றிருக்கும். ஊரிலிருந்து வருபவர்கள் அவனுடைய அஸ்தியை கரைத்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி செல்வார்கள். நினைத்த போதே கொஞ்சம் கனமாக இருந்தது. ஒரு முறை அவன் விழுந்த இடத்தை பார்த்தேன். ட்ராஃபிக் இப்பொழுது சீராகியிருந்தது.

நேற்று அனுப்ப வேண்டிய ஒரு ரிப்போர்ட்டை இன்னும் முடிக்கவில்லை. வேகமாக ஆஃபிஸ் நோக்கி மற்றவர்களைப்போல் நடக்கத் தொடங்கினேன்.

Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read