அசை-1

ஏதோ தலைப்பை பார்ததும் இது வேறு எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்று தோன்றினால் நான் பொறுப்பல்ல.
அப்பொழுது இரண்டாம் வகுப்பு முடித்திருந்தேன்.(இப்பொ வரைக்கு அதானே டா முடிச்சுருக்க…. நான் B.E ஆக்கும்). அப்பொழுது தான் அப்பாவிற்க்கு மாற்றல் ஆகியிருந்தது.அழகான திருநெல்வேலி சீமையை விட்டு விட்டு எட்டயபுரத்துக்கு(தூத்துக்குடி அருகில்) மாறத் தயாரானோம்.

ஆனால் அப்பொழுது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. இவ்வளவு நாட்கள் இருந்த ஊரை விட்டு போகிறோம் என்று துளி கூட வருத்தம் இல்லை. எனக்கு இருந்த ஒரே பயம் அங்குள்ள ஸ்கூலில் உள்ள மிஸ் என்னை அடிக்க கூடாது. ஹோம் ஒர்க் நிறைய குடுக்க கூடாது என்பதே. அதைத்தவிர தினம் P.E.T பீரியட். வேறு ஒன்றும் பிரமாதமான எதிர்பார்ப்புகள் இல்லை. வளர வளர தான் அந்த வீரியம் நம்மிடம் தலை தூக்குகிறது. ஆசைகள் அதிகம். எதிர்பார்ப்புகள் அதிகம். பிரச்சனைகளும் அதிகமாகிறது. நிற்க.
எதிர்பார்ப்பு அதிகம் இல்லாமல் தான் அந்த ஊருக்கு பயணமானேன். அங்கு போனது படித்தது எல்லாம் தனி கதை என்றாலும் அதை வேறு ஒரு நிகழ்வில் சொல்லலாம் என்று முடிவு எடுத்திருப்பதாலும் இங்கு நான் சொல்ல வந்த இரண்டு கோவிலை பற்றி ஆரம்பிக்கிறேன்.
நாங்கள் இருந்த தெருவின் பெயரே பாரதியார் தெரு தான். அங்கு தான் அவர் வீடும் இருந்தது. இரண்டு மூன்று வீடு தள்ளி. அதிலிருந்து ஒரு முன்னூறு அடி தூரத்தில் தான் பெருமாள் கோவிலும் அதிலிருந்து கொஞ்சம் தள்ளி சிவன் கோவிலும் இருந்தது.

மிக எளிமையானது அந்த பெருமாள் கோவில். மூலவர் பெருமாள் . ஒரே சுற்று தான். கோவிலுக்கு வலப்புரத்தில் லக்ஷ்மியும் இடப்புரத்தில் பூமா தேவியும் உண்டு. இந்த ஊரில் உள்ள இரண்டு கோவில்கலிலும் உள்ள விஷேஷம் என்னவென்றால் அங்கு உண்டியல் கிடையாது. இப்பொழுது உண்டியல் இருந்தும் மடியில் இருந்து காசை பறிக்கும் கோவில்களுக்கு மத்தியில் அந்த இரண்டு கோவிலும் தனி விஷேஷம் தான். முழுவதும் எட்டயபுர ராஜாவின் அறக்கட்டளை மூலமாக நடைபெறும்.
வெள்ளி கிழமை ஆனால் போதும். வழக்கம் போல வாண்டுக்கள் படையோடு கோவிலுக்கு கூட்டி சென்று விடுவார்கள். அதுவும் நானும் என்னுடய இன்னுமொரு பால்ய நண்பனுமான ப்ரிஜித்தும் செய்யாத சேட்டைகள் கிடையாது. அதுவும் அந்த கோவிலில் விளக்கு பூஜை வந்து விட்டால் போதும்.எல்லோரும் வழக்கம் போல் வரிசையாக ஒவ்வொரு விளக்கின் முன்னாடியும் உட்கார்ந்து கொள்வார்கள். எல்லோரும் விளக்கை பார்த்து உட்கார்ந்தால் நாங்கள் இருவரும் எங்கள் அம்மாவின் முதுகு பின்னாடி உட்கார்ந்து கொள்வோம். ஸ்லோகம் சொல்ல ஆரம்பிப்பார்கள். "ஓம் வரலக்ஸ்மியே நமஹ" என்றால் எங்கள் காதில் மட்டும் "நமஹ" தான் விழும் போலும். அங்கு இருக்கும் முப்பது பெண்களின் சத்தத்தை விட எங்கள் "நமஹ" தான் ஓங்கி நிற்கும். எல்லாப் பெண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வார்கள். கடைசி வரை நாங்கள் பின்னாடி இருந்து கொண்டு செய்த அந்த பொது சேவையை நிறுத்தவில்லை. ஆனால் ஒரு முறை கோவில் பட்டர் பார்த்துவிட்டார். முறைத்துவிட்டு போனார். ஆனல் அதன் அர்த்தம் அப்போது பிடிபடவில்லை. பின்னால் தான் தெரிந்தது. பூஜை முடிந்தவுடன் பொங்கல் குடுக்க மாடேன் என்று சொல்ல்லி விட்டார். இவ்ளோ நேரம் கத்தியது அதற்கு தானே. எப்படியோ தாஜா பண்ணி வாங்குவோம்,அடுத்த முறை அமைதியாக சொல்லுவொம் என்று. ரொம்ப நேரம் நிற்க்க வைத்த பிறகு தான் தருவார். சூடு குறைந்திருக்கும். இருந்தாலும் விடுவதில்லை. ஒரு பிடி பிடிப்போம்.

இந்த பெருமாள் கோவிலை விட அதன் அருகில் இருந்த சிவன் கொவில் மீது தான் அதிக ஈடுபாடு இருந்தது. அந்த கோவில் முழுவதும் வெளிச்சமாக இருந்த காரணமா இல்லை மிகவும் விசாலமாக விளையாடுவதற்கு(??) ஏற்ற இடமாக இருந்த காரணமா என்று தெரியவில்லை. இங்கும் ஒரே ஒரு பிரகாரசுற்று தான் என்றாலும் மிக விசாலமாக இருக்கும். மேலும் பெருமாள் கோவிலை விட இங்கு அதிக நேரம் செலவளிக்கலாம்.

தினம் இந்த இரண்டு கோவிலுக்கு போவது போல் பிரதோஷம் நாட்கள் மறக்காமல் ஆஜர் ஆகிவிடுவோம். இன்றும் கூட சிவபுராணம் பசுமையாக நினைவிருக்கிறது. "நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க" என்று தொடங்கும். பின்னே. சிவனடியார்கள் என்று கொஞ்சம் பேர் அங்கு இருப்பார்கள். ஒவ்வொரு பிரதோஷமும் சொல்லப்பொனால் ஒவ்வொரு பூஜையும் இவர்கள் முன்னிலையில் தான் நடக்கும். பிரதோஷத்தின் இடைவெளியில் உற்சவரை ஒரு சப்பரத்தில் வைத்து கொண்டு நந்தி யிடம் ஆரம்பித்து பின்பு வலம்புரியாக சண்டிகேசுவரர் வரை வருவார்கள். பின்பு சண்டிகேசுவரிரடமிருந்து நந்தி. இப்படியே மூன்று சுற்று. முதல் சுற்றில் ருத்ர நாமாவளி. இரண்டாவது சுற்றிலும் இது தொடரும். பின்பு அந்த மூன்றாவது சுற்றில் தான் சிவ புராணம். அந்த சுற்று முழுவதும் சிவனடியார்கள் ராஜ்ஜியம் தான். அந்த ஒரே சுற்றில் மூன்று முறை சிவபுராணம் சொல்லப்படும். ஒரு முறை கூட நாங்கள் புத்தகத்தை பார்த்து சொன்னதில்லை. முதலிலெல்லாம் அவர்கள் சொல்வதை கவனிக்கவே மாட்டோம். போகப்போக அவர்கள் பின்னாடியே சுற்ற அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையாக பின்னாடியே சொல்ல எனக்கு தெரியாமலயே அதை என் வாய் முனுமுனுத்தது ஆச்சர்யம் தான். சில நாட்களுக்குள்ளாகவே முழுவதும் மனம் ஆகியிருந்தது.
உற்சவர் வலம் வரும் அந்த சப்பரத்தை நான்கு பேர் தோளில் தூக்கிகொண்டு செல்வார்கள். ஒவ்வொரு மூலையிலும் அந்த சப்பரத்தை நிறுத்தி கொண்டு குழந்தைக்கு தாலாட்டு சொல்வதை போல் ஆட்டுவார்கள். சில கோவில்கலில் மட்டுமே இதை பார்க்க முடிகிறது. பார்த்துகொண்டே இருக்கலாம் போல் தோன்றும்.

சொல்லப்போனால் கடவுளை குழந்தையாக, நண்பனாக, தந்தையாக பார்ப்பதிலும், ஏதோ நம்முடன் அதிக நாள் பழகியவனை போல அவனை திட்டுவதும், தாலாட்டுவதும், கோபப்படுவதும், உனக்கு இதெல்லாம் தருகிறேன் என்று சொன்னேனே ஏன் கொடுக்கவில்லை என்றும், இதை எனக்கு முடித்து குடு உனக்கு இதை செய்கிறேன் என்று பண்ட மாற்று முறை பேசுவதும் பரவலாக இந்து மதத்தில் மட்டுமே இருக்கிறது. இல்லையென்றால் ஆண்டாள் திருப்பாவையும், சூடி குடுத்த சுடர் கொடியாள் என்றும் பாட முடிந்திருக்காது.

ஒருமுறை சுற்றி வரும்பொழுது கண்ணை மூடி கொண்டே சுற்றினேன். ஏதோ ஒரு ஆர்வக்கோளாரில். வேகமாக சென்ற நான் அப்படியே நேரே ஒரு தூணில் சென்று முட்டிக்கொண்டு நிற்க சரியான வலி. எல்லோரும் திரும்பி பார்க்க எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. சமாளித்து கொண்டேன். ஆனால் அதன் பிறகு சுற்றவே இல்லை, கண்ணை மூடிக்கொண்டு. பின்னே ஒரு வாரத்திற்கு தலையில் எழுமிச்சை அளவு வீங்கினால்.
ஒவ்வொரு நாளும் பள்ளியறை பூஜை என்று ஒன்று உண்டு. அதாவது கணவன் மனைவியான சிவனையும் பார்வதியையும் பள்ளியரையில் கொண்டு போய் விடுவதையே பள்ளியறை பூஜை என்பார்கள். அதிலும் தவறாது கலந்து கொள்வோம். எப்படி என்றால், பூஜை முடிந்தவுடன் பாலும் பழமும் கொடுப்பர்கள்.முதலில் கடவுளுக்கு பின்பு எங்களுக்கு. அந்த பால் கொஞ்சம் சூடாக இருக்கும். கனிந்த சில வாழைபழங்களும், கொஞ்சம் தேன் அதனூடே, அப்படியே அந்த ஒரு கலவை…அடேங்கப்பா. ம்ஹும். எத்தனையோ தடவை வீட்டில் முயன்று பார்த்திருக்கிறேன். அதே டேஸ்ட் கிடைக்கவில்லை. எத்தனையோ கோவில் பின்பு சுற்றி பார்த்தேன். அந்த மாதிரியான பள்ளியறை பூஜையும் இல்லை. இல்லையென்றால் வெறும் பழம் மட்டும் தான் இருக்கும்.(இதுக்கு தான் கோவில் கோவிலா சுத்தி வரியாக்கும்??).

அது தவிர திங்கள் தோறும் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கென்று ஒரு பூஜை உண்டு. அங்கு ஒரு பஞ்சாமிர்தம்.மிகப்பிரமாதமாக இருக்கும்.(நீ ஸ்கூலுக்கு போவியா மாட்டியா???).ஒவ்வொரு கடவளுக்கும் விஷேஷம் இருப்பது பொல முருகனுக்கும் உண்டு. ஷஷ்டி என்று ஒரு பூஜை. ஆறு தினங்கள் பூஜை நடக்கும். கடைசி தினம் சூரசம்ஹாரம். இந்த கடைசி தினம் மட்டும் கொவிலில் சென்று முழுவதும் இருப்போம். இருபத்தோர் முறை ஷஷ்டி கவஸம் சொல்லப்படும். நண்டு, பெண்டு முதல் வயதானவர் வரை உட்கார்ந்து சொல்லுவோம்.

சிவரத்திரியும் அதை போல நான்கு கால பூஜையையும் கோவிலிலியே கழிப்பொம். அதிகாலைதான் வீடு திரும்பல். இன்றும் கூட திருவாதிரை தினம் ஞாபகம் இருக்கிறது. தேஜஸான ஒரு பசு மாட்டை பிடித்து வருவார்கள்(ஒருதடவை மாடு ஒருவரை முட்டி விட்டது). அதிகாலை நான்கு மணி இருக்கும். முதலில் மாட்டிற்க்கு பூஜை. திருவாதிரை மை உண்டு. ஹொமத்தில் இருந்து வரும். பின்பு களி குடுப்பார்கள். களியில் பக்குவமாக நெய் ஊற்றி இருப்பார்கள்.(ஆரம்பிச்சுட்டியா?)

இதைத்தவிர அந்த இரண்டு கொவில் முழுவதிலும் சில கல்வெட்டுக்கள் உண்டு. ஏனோ அதை ஆராயும் புத்திஅப்பொழுதே வந்து விட்டது. காலையில் கோவிலுக்கு சென்றால் பிரகாரச்சுற்று வரும்பொழுது அதைத்தான் சென்று படிக்க முயற்ச்சித்ததுண்டு. எப்பொழுதுமே எந்த கல்லை படித்தாலும் அது ஏனொ "ழகமன் புவ வருட சலக ஷண " இப்படித்தான் தெரிந்ததே ஒழிய புரியவில்லை. கண்டிப்பாக எந்த ராஜாவும் அதில் அகல் விளக்கு- உபயம்-எட்டப்ப மக ராஜா என்று எழுதிருக்க மாட்டார். கோவில் கட்டிய முறை, அதற்கான முயற்சி என்று தான் இருக்கும். தஞ்சாவூர் கல்வெட்டில் கூட ராஜ ராஜ சோழன், தான் எப்படி பத்தாயிரம் பாண்டிய நாட்டு போர் கைதிகளை(Prisoners of Wars) பெரிய கோவில் கட்டுவதற்கு உபயோகித்தான் என்று குறிப்பு கிடைத்ததாம். இல்லையென்றால் அந்த ஏழு பனை உயர கோவிலை எப்படி கட்டினார்கள் என்பது தெரியாமலையே போயிருக்கும். கல்வெட்டு வாழ்க.
அங்கிருந்து ஒரு நான்கு வருடத்திற்குள் மாற்றலாகிவிட்டோம். அதன் பிறகு எத்தனயோ ஊரில் எத்தனயோ கோவிலை பார்த்தாகிவிட்டது. ஆனால் அந்த இரண்டு கோவில்கலிலும் மனம் லயித்தது போல் லயிப்பதில்லை. மீண்டும் அங்கு செல்ல வேண்டும். ஆனல் அதே நண்பர்களும், அதே மனிதர்களும், அதே மணி பட்டரையும் பார்க்க முடியாது என்பது தான் நிதர்சனம்.

But Those were the best days of my Life.Total Pageviews

Popular Posts

Follow by Email

Most Read